சென்னை, பிப்.8- தமிழக அரசால் 2022-23-ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்த திரு நங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளமான ‘awards.tn.gov.in’-ல் வரும் பிப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதுக்கு திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக வாழ்க்கையில் முன்னேறி இருந்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. மேலும், அவர்கள் அளிக்க வேண்டிய கையேட்டில், சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, விருதுகள் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையை பாராட்டி பத்திரிகையில் வந்த செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.