சென்னை,மே4- வரும் ஜூன் மாதத்திற்குள் தமிழக தலைமைச் செயலகத்தை இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் திங்களன்று(மே 4) அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்த அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:- தமிழக அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) திட்டம் உரு வாக்கப்பட்டது. இந்தத் திட்டம் மூலம் பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும் என்றும் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும். தமிழகத்தின் அரசுத் துறைகளில் தற்போது 43,359 பேர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் மாதத்திற்கு தலைமைச் செயலகம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த முறையை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ,“சென்னை கோட்டூர் புறத்தில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் ரூ.150 கோடி செலவில் அமைக்கப்படும். இதற்கான செலவினத்தை எல்காட் நிறுவனம் ஏற்கும்”என்றார். தகவல் தொழில்நுட்பவியல் துறை “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மாற்றப் படும் என்றும் கணிணித் தமிழுக்கான மென்பொருட்கள் உருவாக்கப்படும். தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள் வழங்கப்படும். கன்னியாகுமரியில் புதிதாக தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ஒன்று கட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.