விழுப்புரம், டிச.9- நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 2.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் த.மோகன் வெளியிட்டார். பின்னர் பேசிய ஆட்சியர்,“கடந்த நவம்பர் 1ஆம் தேதி நாளிட்ட ஒருங்கிணைந்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளின் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் மொத்தம் 2,69, 513 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,30,441 ஆண்கள், 1,39, 19 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 53 பேர் இடம்பெற்றுள்ளனர்” என்றார். விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரண்டு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இந்த புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.