மின்சாரம் பாய்ந்து மூவர் பலி, ஒருவர் காயம்
தருமபுரி, செப். 22- தருமபுரியில் வீடு மாற்றும் போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். தருமபுரி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன்(52). இவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் குடும்பத் துடன் வசித்து வந்தார். இவர் பழக்கடை நடத்திவருகிறார். இவரது வீட்டின் 2-ஆம் தளத்தில் இலியாஸ் பாஷா(70) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது இவர் சொந்த வீடு கட்டிமுடித்ததால் அந்த வீட்டில் குடிபெயர ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக, வியாழனன்று (22-ஆம் தேதி) காலை, வீட்டில் இருந்த பொருள்களை வாகனத்தில் ஏற்றி புது குடியிருப்புக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பீரோக்களை கயிறு மூலம் 2-ஆவது மாடியில் இருந்து கீழே இறக்கும் பணியில் தருமபுரி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த மணி மகன் கோபி(23), மேளக்கார தெருவைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் மகன் குமார்(23) ஆகிய 2 கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு இலியாஸ் பாஷா மற்றும் வீட்டு உரிமை யாளர் பச்சியப்பன் ஆகியோரும் உதவியுள்ளனர். வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள மின்பாதைக்கும் கட்டிடத் துக்கும் குறுகிய இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த இடை வெளியில் முதலில் பீரோவை கயிறு மூலம் கீழே இறக்கி யுள்ளனர். இதைத்தொடர்ந்து, 2-ஆவது பீரோவை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பீரோ மின் பாதையில் உரசியுள்ளது. இதில், 4 பேர் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில், வீட்டு உரிமையாளர் பச்சியப்பன், வாடகைக்கு குடியிருந்த இலியாஸ் பாஷா, கூலி தொழிலாளி கோபி ஆகிய 3 பேரும் நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தனர். குமார் ஆபத்தான நிலையில் மீட்கப் பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகரக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி, செப். 22- தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் செப்.30, வரை நேரடி சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து காலி யிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கை 30.08.2022 அன்று தொடங்கி நடை பெற்றுவருகின்றது. இந்த நேரடி சேர்க்கை 30.09.2022 வரை நடைபெறவுள்ளது. 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 (உச்ச வயது வரம்பு இல்லை) விண்ணப்பிக்கலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் (2 வருடம்), பற்றவைப்பவர் (1 வருடம்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (1 வருடம்), கட்டடபட வரைவாளர் (2 வருடம்), மின்பணியாளர் (2 வருடம்), பொருத்துநர் (2 வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2 வருடம்), கம்மியர் டீசல் என்ஜின் (1 வருடம்), கடைசலர் (2 வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2 வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2022ஆம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம். எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாதவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக கருதி மீண்டும் நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு பயனடையுமாறு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 96886 75686, 97874 40280, 96882 37443 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவையில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு
கோவை, செப்.22- கோவையில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை யினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிக ரித்து வருகிறது. தமிழகத்தில் இது வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகா தாரத்துறை அமைச்சர் தெரிவித் துள்ளார். கோவையிலும் கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளி டையே காய்ச்சல் பரவல் அதிக ரித்துள்ளது. இந்நிலையில், மாவட் டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்து வமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் அதிக ரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளிடையே லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுகொள்ள சுகாதாரத் துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.அருணா கூறு கையில், கோவை மாவட்டத்தில் தினசரி 20க்கும் மேற்பட்டவர் களுக்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இதில் சராசரி யாக 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏ, பி, சி என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சி நிலையில் உள்ளவர் களுக்கு மட்டுமே தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சி நிலையில் உள்ளவர்களை மட்டுமே உள் நோயாளிகளாக அனுமதிக் கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனை களில் 5 பேர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர் பாக பின்பற்ற வேண்டிய வழி முறைகள் குறித்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளன. காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், வாந்தி போன்றவை முக்கிய அறிகுறி களாகும். தீவிர பாதிப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்படுவற்கும் வாய்ப்புள்ளது. எனவே, குழந்தை கள் உள்ளிட்ட அனைவருக்கும் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனை களில் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைக ளிடையே மேற்கொண்ட அறி குறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தை களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தலைமையாசிரி யர்கள் மூலம் அறிவுறுத்தப்பட் டுள்ளது. பருவமழை ஓய்வுக்கு பின் இதுபோன்ற காய்ச்சல் பாதிப்பு கள் ஏற்படுவது வழக்கம் தான். இருந் தாலும் பெற்றோர்கள் கவன முடனும்,எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், என்றார்.
அஞ்சல கோட்ட குறைகேட்பு கூட்டம்
ஈரோடு, செப்.22- ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குறைகேட்பு கூட் டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொது மக்களின் குறைகள், கோரிக் கைகள் கேட்டறியப்படும். இது தொடர்பான புகார்கள், மனுக்கள் இருப்பின் அஞ்சல் மூலம் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் அஞ்சலக கண் காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புகார்கள், மனுக் கள் பெற்றுக் கொள் ளப்படும். இவ்வாறு அதில் கூறிவுள்ளார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் வழங்க சிஐடியு வலியுறுத்தல்
திருப்பூர், செப். 22 – திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை குறைந்தபட்ச போனஸ் தொகையாக வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவா ளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் வியாழக்கிழமை கைத் தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்கத் தலைவர் கே. திருவேங்கடசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.கனக ராஜ், பொருளாளர் என்.கோபால், துணைத் தலைவர் வைஸ் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரப் பிரச்ச னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் தொகையாக ஒரு மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோ பர் 10ஆம் தேதி மாலை காங்கேயம் புலிமாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா, ஆவணம் வழங்குவதற்கு மாநில அரசு தடையின்மைச் சான்று வழங்கி இருந்தாலும், மாவட்ட ஆட்சியரின் தடையின்மைச் சான்று தந்தால்தான் ஆவணம் பதிவு செய்ய முடியும் என்று பதிவாளர் அலுவலகத்தில் கூறப் படுகிறது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் ஆவணம் பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய ஆணை பிறப் பிக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா ஆவ ணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைத்தறி நெசவாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
குறுமைய விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
அவிநாசி, செப்.22 – அவிநாசி குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி களில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ள னர். அவிநாசியில் உள்ள தனியார் பள்ளியில் குறுமைய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தட களப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் கவின் மற்றும் லக்ஷிதா, 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் புவ னேஷ்வரி ஆகியோர் தனிநபர் சாம்பியன் கோப்பையை வென்றனர். மேலும், மேசைப்பந்து ஒற்றையர், இரட்டையர், கால்பந்து, உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர் கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவிலான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் துள சிமணி முதலிடம் பிடித்து, திருவண்ணாமலையில் நடை பெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங் கேற்க தகுதி பெற்றார். இவர்களுக்கு கருவலூர் பள்ளி தலைமையாசிரியர் சத்தியபாமா, உதவி தலைமையாசிரியர் பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியர் மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில், அவிநாசியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் யாகவராஜ் தடகளத்தில் 100மீ, 200மீ மும்முறை தாண்டுதலில் தங்கம் வென்று, தனி நபர் சாம்பியன் கோப்பையை வென்றார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்பூர், செப். 22 - திருப்பூர் பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகத்தில் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட் டது. பிஎஸ்என்எல் நிர்வாகம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த முகாமில், திருப் பூர் மாநகராட்சி கல்லம்பாளையம் சுகாதார நிலைய செவிலி யர்கள் பங்கேற்று பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் சுமார் 50 பேர் பங்கேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத் திக் கொண்டனர். இம்முகாமில் பணியாற்றிய செவிலியர்க ளுக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் நன்றி பாராட்டி சால்வை அணிவித்தனர்.
ரூ.42.65 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, செப்.22 – அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1687 பருத்தி மூட்டை கள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரத்து 766 வரையி லும், மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரத்து 500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.42 லட்சத்து 65 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற் றது.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
தாராபுரம், செப். 22 - தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தபோது நஞ்சியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்த தையடுத்து நஞ்சியம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவம னைக்குச் சென்றபோது, ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தை தெரிந்த மருத்துவர்கள் மருத்துவம னையில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நஞ்சியம்பாளையத்தைச் சேர்ந்த பழ னிச்சாமி என்பவரது மகன் செல்லமுத்து (21) என்ற வாலிபரை கைது செய்து நீதிமன்ற காவ லுக்கு அனுப்பி வைத்தனர்.
நிலக்கடலை ஏலம்
திருப்பூர், செப்.22- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக் கடலை விற்பனை திங்க ளன்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத் திற்கு 3 ஆயிரம் மூட்டை நிலக்கடலைகளை விவசா யிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி தாய், மகள் உயிரிழப்பு
கோவை, செப்.22- துடியலூர் அருகே மின்சாரம் தாக்கியதில் தாய் மற்றும் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள விஸ்வ நாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி கார்த்திகா (52), மகள் அர்ச்சனா (18) ஆகியோர் வசித்து வந்தனர். இதில், அர்ச்சனா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், வியாழனன்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்கு குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக அர்ச்சனா மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் கேட்ட அவரது தாய் கார்த்திகா, மகளை காப் பாற்ற முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து, இருவ ரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடிய லூர் காவல் துறையினர், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மின்கசிவு குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மாணவன் கடத்தல்: 7 பேர் கைது
தருமபுரி, செப்.22- பாலக்கோடு அருகே கல்லூரி மாணவனை கடத்தி பெற் றோரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். பைனான்ஸ் அதிபரான இவரது மகன் சாம்சரண் (17) திருச்செங்கோடு தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இத னிடையே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கடந்த செப்.16 ஆம் தேதி வீட்டிற்கு வந்தார். இந்நிலையில், புதனன்று அதி காலை வீட்டிலிருந்த சாம்சரணை அடையாளம் தெரியாத நபர் கள் சொகுசு காரில் கடத்தி சென்றுள்ளனர். இதைத்தொ டர்ந்து சாம்சரணின் தந்தைக்கு செல்போன் மூலம் அந்த கும்பல் தொடர்பு கொண்டு, “ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண் டும்; இல்லாவிட்டால் மகனை கொன்று விடுவோம்” என மிரட் டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவக்குமார் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்துவிடம் புகாரளித்தார். அதன்பேரில் சிந்து தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், புத னன்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மாணவனை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து தனிப்படை யினர் அந்த நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
கோவை, செப்.22- மேட்டுப்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் தனியார் மில் ஒன்று செயல்படுகிறது. இந்த மில் அருகே பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. இதனை பயன்படுத்தி, புதனன்று இரவு அடையாளம் தெரி யாத நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை யடிக்க முயன்றனர். அப்போது ஏடிஎம் மையத்திலிருந்த எச்ச ரிக்கை அலாரம் ஒலித்தது. இதுதொடர்பான தகவல் வங்கி அதிகாரிகளுக்கு சென்றது. இதுகுறித்து அதிகாரிகள் மேட் டுப்பாளையம் காவல் துறையினருக்க தகவல் தெரிவித்த னர். அலாரம் ஒலித்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப் பிச் சென்றனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்த லட்சக் கணக்கான பணம் தப்பியது. இதனிடையே மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவ நீத கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய நிர்வாகி கைது
கோவை, செப்.22- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரை தேசிய புல னாய்வு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பண பரி வர்த்தனை நடந்தது சம்பந்தமாக கோவை, மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலங்கள் மற்றும் தலைவர் கள் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு காவல் துறையினர் (என்ஐஏ) அதிகாரிகள் வியாழனன்று சோதனை மேற்கொண் டனர். அதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், கரும்புக் கடை அருகே உள்ள சவுகார் நகரில் வசித்து வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பி னர் ஏ.எஸ்.இஸ்மாயில் (43) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தில்லியிலிருந்து வந்த 15 பேர் கொண்ட அதிகாரிகள், காலை 5:30 மணிக்கு இஸ்மாயில் வீட் டிற்குள் நுழைந்தனர். ஒரு மணி நேரம் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையொட்டி அவரது வீட்டு முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் இஸ்மாயில் வீட்டு முன்பு திரண்டு, அவர்கள் சோதனைக்கு எதிர் தெரிவித்து சாலை மறி யலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளின் சோதனை முடி வில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா வின் ஹார்ட் டிஸ்கை மட்டும் அதிகாரிகள் எடுத்துச் சென்ற னர். மேலும், ஏ.எஸ்.இஸ்மாயிலை கைது செய்து, தில்லிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.
குன்னூர்: குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்
உதகை, செப்.22- குன்னூர் அருகே குடியிருப்பு பகு தியில் உலா வரும் கரடியால் அப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன் னூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெ ருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின் றன. வனப்பகுதியில் தீவனப் பற்றாக் குறை, அதிகரித்து வரும் கட்டிடங் களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் உணவு தேடி குடியிருப்பு பகு திக்குள் வருவது வாடிக்கையாகி விட் டது. இதற்கு முன்னர் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் சென்றபோது மட் டும் வனவிலங்குகளை பார்த்த நிலை யில், கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் ஊருக்குள்ளும் பார்த்து வருகின்றனர். இதனால் சில நேரங்க ளில் வனவிலங்கு - மனித மோதல் ஏற் பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நி லையில், வியாழனன்று காலை 7 மணி யளவில் குன்னூர் மவுன்ட்பிளசன்ட் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று ஒய்யாரமாக வலம் வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம டைந்து உள்ளனர். இதுவரை இரவு நேரங்களில் ஊருக்குள் வனவிலங்கு கள் வந்து சென்ற நிலையில் தற் போது பகல் நேரத்தில் வனவிலங்கு கள் வருவது பொது மக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், சமீப காலமாக குன் னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகளின் கதவுகளை உடைத்து அரிசி, பருப்பு, முட்டை போன்ற வற்றை கரடிகள் சாப்பிட்டும், சேதப் படுத்தியும் வருகின்றன. இதே போல் செவ்வாயன்று ஜெகதலா பகு தியில் காலில் காயமடைந்த நிலை யில் சிறுத்தை சுற்றி திரிந்தது. அதற்கு முன் உபதலை பகுதியில் சரக்கு வேனில் இருந்த பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை எடுத்து கரடி ருசி பார்த்தது. உணவுப் பொருட்களை மட்டும் சாப்பிட்டு விட்டு சென்று விட் டால் பரவாயில்லை. வனவிலங்கு களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அவை மனிதர்களை தாக்க முயற்சிக் கலாம். எனவே, வனத்துறையினர், கூண்டு வைத்து ஊருக்குள் வரும் வன விலங்குகளை பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டும். மேலும், குறிப்பாக வனவிலங்குகள் எதற்காக அடர்ந்த காட்டை விட்டு வெளியே வரு கின்றன என்று ஆராய்ந்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என்ற னர்.
நடக்க இருப்பவை
மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம் நாள்: 23.09.2022, வெள்ளிக்கிழமை. நேரம்: மாலை 6 மணி. இடம்: சிபிஐ(எம்) மாவட்டக்குழு கூட்டரங்கம், ஈரோடு. தலைப்பு: இன்றைய இந்தியாவில் விவசாய வர்க்கங்கள் ஆசிரியர்: வி.பி.ஆத்ரேயா (பொருளாதார நிபுணர்) ஏற்பாடு: சிபிஎம் கல்விக்குழு, ஈரோடு.