districts

img

மழையில் நனைந்து வீணாகும் சானிட்டரி நாப்கின்கள்

 கடலூர்,ஜூன்19-  சுகாதாரத்தை பேணி பாதுகாக்க பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் “புதுயுகம் சானிட்டரி நாப்கின்கள்”சுகாதாரம் இல்லாமல் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு, 2011-ம் ஆண்டில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில், பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு `புதுயுகம்’ என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவிகள் ஆசிரியையிடமும், பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியர் அல்லது அங்கன்வாடி பணியாளரிடமும் நாப்கின்களை பெற்றுக் கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் 10 வயதில் இருந்து 19 வயது உட்பட்ட கிராமப்புற பள்ளிகளில் உள்ள பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயிலாக மாதம் தோறும் 1,70,784 பேருக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து மாவட்டம் முழுமையும் பிரித்து அனுப்பப்படும் பணி நடைபெறுகிறது.

கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்திற்கு வந்த சானிட்டரி நாப்கின்களை சென்னைக்கு குவாலிட்டி டெஸ்ட்க்கு அனுப்பப்பட்டு பின்னர் தான் இந்த பணி நடைபெறுகிறது. 2024 மார்ச் வரை இந்த பணி நடைபெற்ற நிலையில் இடையில் இரண்டு மாதம் பள்ளி விடுமுறையால் அனுப்பப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு கடலூர் சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு வந்த  லட்சக்கணக்கான சானிட்டரி நாப்கின்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து சேதமடைந்துள்ளது.

மேலும் அந்த பகுதியில்  பெருச்சாளிகள், கரைப்பான்பூச்சிகள் அதன் மீது மேய்கிறது. பெண்களின் ஆரோக்கியம் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் நாப்கின்களை பாதுகாப்பாக வைக்காமல்  திறந்தவெளி இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் இங்கு சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. புதுயுகம் சானிட்டரின் நாப்கீன்கள் சுகாதார சீர்கேட்டால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்கும் போது, சென்னைக்கு குவாலிட்டி டெஸ்ட்க்கு அனுப்பி உள்ளோம்.

டெஸ்ட் முடிவு வந்தவுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி விடுவோம் அவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகம் செய்வார்கள். பள்ளிகளுக்கு அலாட்மென்ட் கொடுத்துள்ளோம். பாதுகாப்பாக வைப்பதற்கு வேறு இடம் இல்லாததால் இங்கு வைத்துள்ளோம் என்று தெரிவித்தார். - வ. சிவபாலன்

;