கடலூர், செப். 19- ஓசோன் படலம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வையும், ஓசோனின் நன்மைகளையும், ஓசோன் படலத்தை நாம் பாதுகாக்காவிட்டால் நமக்கு ஏற்படும் தீமைகளையும் தெருக்கூத்து நாடகமாகவும், வில்லுப்பாட்டு வடிவிலும் நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள கோல்டன் ஜூப்ளி பூங்காவில் நெய்வேலி வடக்குத்தில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் செய்து காட்டினர். புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களிலிருந்து பூமியைக் காப்பாற்றுவதோடு, மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். மேலும், ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும் நிலை உருவானால், பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து, நில பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்கும். மிகவும் முக்கியமாக ஓசோன் வாயுக்கள் அழிந்தால் மனிதர்களையும், விலங்குகளையும் புற ஊதாக் கதிர்கள் எளிதில் நேரடியாகத் தாக்கும். இதனால் தோல் புற்று நோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும் என்பதை தெருக்கூத்து நாடக வடிவில் மிக அழகாக எடுத்துரைத்தனர். பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.