court

img

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்... விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...

புதுதில்லி:
நாட்டையும் ஆளும் ஒன்றிய பாஜக அரசையும் உலுக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. உளவு நிறுவனத்தின்  பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி  தலைவர்கள், பத்திரிகையாளர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி, ஒன்றிய அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்வதேச மற்றும் இந்திய நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் மோடி அரசு முறையான விளக்கமும் அளிக்காமல் விசாரணைக்குழுவும் அமைக்காமல் அவைகளை ஒத்திவைத்தது.பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் பாஜக கட்சிக்குள்ளும் நாடு முழுவதும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உலுக்கி யுள்ளது. 

இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கஉத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், மூத்த பத்திரிகையாளர் ‘தி இந்து’ நாளிதழ் என்.ராம் மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதுதொடர்பான விசாரணை ஆகஸ்ட் 17  செவ்வாயன்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.  10 நாட்களுக்கு பிறகு பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்றும் தெரிவித்துள்ளது.

;