court

மே 4-இல் நாடுதழுவிய வெளிநடப்பு வேலைநிறுத்தம்

அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அழைப்பு

புதுதில்லி, ஏப். 27 - இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (Life Insurance  Corporation Of India - LIC) தனியார் முத லாளிகளுக்கு சூறையாடும் திட்டத்தின் இறுதிக் கட்டத்திற்கு மோடி அரசு வந்துள்ளது. எல்ஐசி-யின் பொதுப் பங்குகள் வெளியீடு (IPO) மே 4-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி நிறை வடையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 2-ஆம் தேதி ஆங்கர் முதலீட்டா ளர்களுக்கும், மே 4 ஆம் தேதி பிற  முதலீட்டாளர்களுக்கும் எல்ஐசி பொதுப் பங்குகள் திறந்து விடப்படும் என கூறியுள்ளது.  இதன்மூலம் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கும், சேமிப்புக் கும் மோடி அரசு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கு  இருக்கும் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு பல பத்தாண்டு களாகவே ஒன்றிய ஆட்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். எனினும், இடதுசாரிக் கட்சிகள், எல்ஐசி ஊழியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பால் அந்த முயற்சி கைகூடவில்லை

ஆனால், நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசு அமைந்த பின், தனியார்மய முயற்சியை மீண்டும் வேகமாக கையில் எடுத்தது. கடந்த 2021 பிப்ரவரி 1 அன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்ஐசி நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு உள்ள 100 சதவிகித பங்குகளில் ஒரு பகுதி, ஆரம்பப் பொதுச் சலுகை (Initial Public Offering - IPO) மூலம் தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவித்தார்.  ஆனால், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில், 51 சதவிகித பங்குகள்,  கட்டாயமாக ஒன்றிய அரசு வசமே இருக்க வேண்டும் என்ற விதி மோடி அரசுக்கு சிக்கலாக அமைந்தது.  இதையடுத்து, எல்ஐசி-யில் ஒன்றிய அரசுக்கு இருக்கும் 100 சத விகித பங்குகளையும் தனியாருக்கு விற்பதற்கு ஏற்ப, மோடி அரசானது, கடந்த 2021 ஆகஸ்டு 2 அன்று நாடாளு மன்றத்தில் பொதுக் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்து, தனக்குள்ள அறுதிப்பெரும்பான்மை வைத்து அதனை நிறைவேற்றிக் கொண்டது.

இதன்மூலம் எல்ஐசி-யை சூறை யாடுவதற்கு இருந்த பாதுகாப்பை உடைத்தது. பின்னர் எல்ஐசி பங்கு வெளியீட்டிற்கு ‘ஐஆர்டிஏஐ’ எனப்படும் ‘இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்’ (Insurance Regula tory and Development Authority of India) ஒப்புதலை வாங்கியது. எல்ஐசி-யில் ஒன்றிய அரசுக்குள்ள பங்கில் 5 சதவிகிதமான பங்குகளை- அதாவது 31.63 கோடி பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்வதற்கான வரைவு அறிக்கையை இந்தியப் பங்கு சந்தை முறையீட்டு வாரியத்திடம் (SEBI) தாக்கல் செய்து, அதனுடைய ஒப்புதலையும் பெற்றது. இதையடுத்தே தற்போது, எல்ஐசியின் 632 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 701 பங்குகள் (100 சத விகிதம்) ஒன்றிய அரசு வசம் உள்ள  நிலையில், இவற்றில் 22 கோடியே 30  லட்சம் பங்குகளை (3.5 சதவிகிதம்) தனியாருக்கு விற்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எல்ஐசி பங்குகள் விற்பனை மே 4-ஆம்  தேதி துவங்கி மே 9 வரை நடைபெறும் என்று கூறியுள்ளது. மொத்தப் பங்குகளில் 2.20 கோடி  பங்குகள் (10 சதவிகிதம்)பாலிசிதாரர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 15  லட்சம் பங்குகள் எல்ஐசி ஊழியர் களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருப்பதுடன், இவற்றில் பாலிசிதாரர்கள் வாங்கும் பங்குகளுக்கு 60 ரூபாய், எல்ஐசி ஊழி யர்கள் மற்றும் சில்லரை முதலீட்டா ளர்கள் வாங்கும் பங்குகளுக்கு 45 ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப் பட்டுள்ளது. 

50 சதவிகித பங்குகள் பெருமுத லாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 35 சதவிகித பங்குகள் சில்லரை  முதலீட்டா ளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு எல்ஐசி-யின் உட்பொதிக்கப் பட்ட மதிப்பு ரூ. 13 லட்சம் கோடியாக  மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில்,  மோடி அரசு அதனை கார்ப்பரேட்டு களுக்கு வசதியாக வெறும் ரூ. 6 லட்சம் கோடியாக குறைத்துள்ளது.  இதன் மூலம் எல்ஐசியின் உட்பொதிக்கப்பட்ட மதிப்புகள் அதாவது embedded value சுமார் ரூ.5,40,000 கோடியாகவும் இருக்கும், எனவே எல்ஐசி ஐபிஓ அதன் உட்பொதிக்கப்பட்டதை விடச் சுமார் 1.1 மடங்கு அதிகமாக மட்டுமே மதிப்பிடப்படுகிறது.  பொதுவாகத் தனியார் நிறுவனங் கள் பங்குகள் வெளியிடும் போது, அதன் உட்பொதிக்கப்பட்ட மதிப்பை விடவும் 2-3 மடங்கு அதிகமாக மதிப்பிடு வார்கள். ஆனால் எல்ஐசி உட்பொதிக்கப் பட்ட மதிப்பைக் காட்டிலும் வெறும் 1.1 மடங்கு என்ற அளவிலேயே  (ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி என) கூடுதலாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், எல்ஐசி பங்குகள் வெகுவாக விலை குறைக் கப்பட்டுள்ளது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை 902 ரூபாய் முதல் 949 வரை நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. ஒருவர் 14 ஆயி ரத்து 235 ரூபாய் இருந்தால் (குறைந்த பட்சம் 15 பங்குகள்)எல்ஐசி பங்குகளை வாங்கலாம் என்ற அளவில் இந்த ஐபிஓ-வை அறிவித்துள்ளது. இதன்மூலம் ஒன்றிய அரசின் கஜானாவுக்கு ரூ. 21 ஆயிரத்து 257 கோடி தான் கிடைக்கப் போகிறது. அதேநேரம் தனியார் முதலீட்டாளர்கள் பல ஆயிரம்  கோடி ரூபாயை லாபமாக அள்ளப் போகின்றனர்.

நாட்டு மக்களுக்கு துரோகம்

எல்ஐசி பங்குகள் விற்பனை நாட்டு மக்களுக்கு மோடி அரசு செய்யும் துரோகம் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பட்ஜெட் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காக ஏதாவது செய்து பள்ளத்தை நிரப்புகிற அரசின் பதற்றமே, எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவாக வெளிப்பட்டுள்ளது. இப்பதற்றம் காரணமாக ஏற்கெனவே ரூ.15 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த எல்.ஐ.சி யின் உள்ளார்ந்த மதிப்பை  ரூ. 6 லட்சம் கோடி என அரசு குறைத்திருக்கிறது. இது எல்.ஐ.சி யின் வளர்ச்சிக்கு காலம்காலமாக பெரும் ஆதரவை வழங்கி வரும் இந்தியக் குடிமக்கள்,  பல கோடி பாலிசிதாரர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்கிற முடிவாகும். உழைப்பாளி மக்களின் இரத்தம், வியர்வையால் உருவான விலை மதிப்பற்ற தேசத்தின் சொத்துக்களை அடி மட்ட விலைக்கு விற்கிற செயலாகவும் உள்ளது. எல்ஐசி பங்குகளின் விலைகளும் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கேற்பவே முடிவாகியுள்ளதே தவிர உண்மையான விலைகளாக இல்லை. 

எல்.ஐ.சி.யை தனியார்மயமாக்குவதற்கு எடுத்து வைக்கப்பட்டுள் முதல் அடிதான் பங்குகள் விற்பனை என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கருதுகிறது. இம் முடிவு என்ன இலட்சியங்களுக்காக எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதோ  அவை அனைத்தையும் சிதைக்க கூடியது ஆகும். எல்.ஐ.சி இந்தியப் பொருளா தாரத்தின் மிக முக்கிய அங்கம் மட்டுமல்ல, 65 ஆண்டு கால இருப்பால் தனது  பங்களிப்பால் தேச வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எல்.ஐ. சி யின் தடங்கள் பதியாத எந்தவொரு துறையும் பொருளாதாரத்தில் இல்லை.  39 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கொண்ட  நிறுவனமாகும் இது. 36 லட்சம் கோடி முதலீடுகளை இந்தியப் பொருளாதாரத்தில் செய்துள்ளது. பெரும்பாலான முதலீடுகள் அரசுப் பத்திரங்கள், ஆதார தொழில் வளர்ச்சி, சமூக நலத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ளவை ஆகும். இந்திய பங்குச் சந்தையின் முதன்மை முதலீட்டாளர் எல்.ஐ.சி.யே ஆகும். 22 ஆண்டு தனியார் போட்டிக்கு பின்னரும் மொத்த புதிய பாலிசிகளில் 74 சதவிகித சந்தைப் பங்கை எல்.ஐ.சி.யே வைத்திருக்கிறது. 

இந்நிலையில் பங்குகள் விற்பனை இது கோடிக் கணக்கான பாலிசிதாரர்களின் நலனுக்கு எதிரானது. பாலிசிதாரர்களே இம் மாபெரும் நிறுவனத்தின் உண்மையான உடைமையாளர்கள். பங்கு விற்பனைக்கு பிறகு பாலிசிதாரருக்கு தரப்படும் முக்கியத்துவம் குறையும். முதலீட்டாளர் நலனே பிரதானமாக மாறும். இத்தகைய மாற்றம் சாதாரண மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிட்டுவதை கடுமையாக பாதிக்கும்.  எனவே, எல்ஐசி பங்குகள் பங்குச் சந்தைக்கு கொண்டு வரப்படும் மே 4 அன்று நாடு முழுமையும் உள்ள பல்லாயிரக் கணக்கான எல்.ஐ.சி ஊழியர்கள் இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி ஊழியர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இவ்வாறு ஸ்ரீகாந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.  எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு, தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்களும் தங்களின் எதிர்ப்பைத் தெரி வித்திருந்தனர். எல்ஐசி பங்கு விற்பனையை கைவிடுமாறு கேரள சட்டமன்றம் தீர்மானமே நிறைவேற்றியது. எனினும், முதலாளிகளின் நலனுக்காக மோடி அரசு அந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி பங்குகள் விற்பனையை அறிவித்துள்ளது.
 

;