புதுதில்லி:
கொரோனா பேரிடர் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்த உச்சநீதிமன்றம், அதன் மீது தற்போது விரைந்து விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வகையில், வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்கள்சென்று சேராதது குறித்தும், அவர் களுக்கு அகில இந்திய அளவிலான தரவுத்தளம் உருவாக்காதது குறித்தும், அடுக்கடுக்கான வினாக் கணைகளை நீதிபதிகள் தொடுத்துள்ளனர்.
முன்னதாக நீதிமன்றம் கூடியதும், மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி “புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் அட்டைகள் கூட இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்ஏற்கெனவே ஒரு உத்தரவு பிறப்பித் திருந்தது. அதுவும் இன்னும் அது செயல்படுத்தப்படவில்லை” என்ற குற்றச்சாட்டுக்களை கிளப்பினார்.மேலும், “ஒன்றிய அரசின் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாதிட்டம்’ கூட, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித் தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, “அடையாளம் காணப்பட்ட அத்தனை ஏழைகளுக்கும், ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம்’ மூலமாக இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளது” என்றார்.அப்போது நீதிபதிகள் அவரிடம் “ரேஷன் அட்டை இல்லாத நபர் களை எப்படி கண்டறிவீர்கள்? அவர்களுக்கு எப்படி உணவு பொருட்கள் வழங்குவீர்கள்?” என்று குறுக்குக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ‘‘உணவு தானியங் களை கொள்முதல் செய்வது, அவற்றை கிடைக்கச் செய்வது மட் டுமே ஒன்றிய அரசின் பொறுப்பு. மற்றபடி உணவு தானியங்களை மாநிலங்கள்தான் பயனாளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்” என்று ஐஸ்வர்யா பாட்டீ பதிலளித்தார். இதையடுத்து, ‘ரேசன் அட்டை இல்லாதவர்களை கண்டறிவது மாநிலங்களின் பணி’ என்று நீங்கள் கூறுவது போல, ஒருவேளை ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம்’ தங்களது திட்டமல்ல! என மாநிலங்கள் கூறிவிட்டால், என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்?” என அடுத்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.
இந்த கேள்வியால் திணறிப் போன ஒன்றிய அரசின் வழக்கறிஞர், “இது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்துவிட்டு,ஒரு வாரத்தில் பதில் அளிக்கிறோம். அதற்கு ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று இறங்கி வந்தார்.அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “நாடு தழுவிய அளவில் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங் களை உள்ளடக்கிய தேசியத் தரவுத்தளத்தை இன்னும் ஏன் உருவாக்கவில்லை?” என்று அடுத்த விவகாரத்தை கிளப்பினர்.இதற்கு மென்பொருள் பிரச் சனை காரணமாகவே தரவுத் தளத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று அல்லது நான்கு மாதங்களில் அந்தப்பணி நிறைவடையும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் பதிலளித்தார்.ஆனால், நீதிபதிகள் இதனை ஏற்க மறுத்து விட்டனர். “ஒன்றிய அரசால் ஒரு செயலியைக்கூடவா உருவாக்க முடியவில்லை? ஒரு சின்ன வேலைக்கு எதற்காக இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்?” என காட்டமாக கேட்டதுடன், “அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வெளியிடும் பணிகளையும் நீங்கள் இன்னும் முடிக்காமல் இருக்கிறீர்கள்?” என சுட்டிக்காட்டினர்.
சொலிசிட்டர் ஜெனரலோ, “தற்பொழுது செயலிகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதன் பணிகள் அடுத்த நான்கு மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதன் பிறகு தொழிலாளர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இது மிகவும் நுட்பமான பணி என்பதால் சற்றுக் காலதாமதம் ஆகலாம்” என்று கூறியதையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார்.இதையடுத்து, “இந்த விஷயத்தில் ஏற்கெனவே மாநிலங்கள் தரப்பில் தரவுகள் இருக்கும். அவற்றை ஒருங்கிணைத்து, தேசிய அளவிலான தரவுத்தளத்தை உருவாக்குகள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்” என்று கூறிய நீதிபதிகள், “இப்பணியை செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை ஒன்றிய அரசு விரைவில் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.