court

img

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 35 ஆயிரம் கோடி பணம் எங்கே போனது? 18+ வயதினருக்கு தடுப்பூசியை இலவசமாக தருவதில் என்ன சிக்கல்? மோடி அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்...

புதுதில்லி:
18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசு ஏன் திட்டமிடவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 35 ஆயிரம் கோடிபணத்தை ஏன் இதற்கு பயன்படுத்த முடியாது? என்று மத்திய பாஜக அரசுக்கு டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தடுப்பூசியே பாதுகாப்பு அளிக்கும் என்ற நிலையில், இந்தியாவில், 2021 ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னுரிமை அடிப்படையில், முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக, முதியவர்களுக்கும், மூன்றாவது கட்டமாக, இணை நோயுடன் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதனிடையே, 2021 மார்ச் மாதத்தில் கொரோனா 2-ஆவது அலை தீவிரமான நிலையில், மே 1-ஆம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மோடிஅரசு தெரிவித்தது. ஆனால், இதற்கான செலவை மாநிலங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறி விட்டது. 

மேலும், இந்தியாவில் உற்பத்தியாகும் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும். மீதமுள்ள 50 சதவிகிதத்தை, மாநிலஅரசுகளும், தனியார் நிறுவனங்களும் வாங்கிக் கொள்ளலாம் என்று அதிலும் ஒரு தடையை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு ரூ. 200-க்கு தடுப்பூசிகளை வழங்கும் நிறுவனங்கள் மாநிலங்களுக்கு அதன்விலையை இருமடங் காக உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி இன்னொரு தடையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில்தான், தடுப்பூசி வழங்கல் விவகாரத்தில் தானாகவே முன்வந்து விசாரணை நடத்திவரும் டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து புதனன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

‘45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாகவும், அதற்கு குறைந்த வயதினருக்கு கட்டணம் வசூலித்தும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.தடுப்பூசி விநியோகத்துக்கு மக்களை வேகமாக உள்ளிழுக்க வேண் டிய, மிகக்கடுமையான சூழலில் இந்தியா இருக்கும்போது, மத்திய அரசின்தடுப்பூசிக் கொள்கை ‘தன்னிச்சையான, பகுத்தறிவற்ற’ ஒன்றாக உள்ளது.18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களைக் கொரோனா தாக்கும்போது, அவர்களுக்கு வெறுமனே நோய்ப்பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை. உடன் நீடித்த உடல்நலச்சிக்கல்கள், நிறைய நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கும் சூழல் ஏற்படுவது, இறப்புக்கான சூழலை அதிகப்படுத்துதல் போன்ற வேறு பல சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.கொரோனா வைரஸ், பல திரிபுகளை உருவாக்கி, தங்களின் இயல்பைமாற்றிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தில், இப்போது ஆபத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களையே நாம் காக்க வேண்டும். அந்த வகை
யில், 18 முதல் 44 வயதினருக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். அதுவே விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் சொல்லும் பரிந்துரை. ஆனால் அரசு அவர்களைத்தவிர, பிற வயதினருக்கே முன்னுரிமை தருகிறது.தேவை அறிந்து, 18 - 44 வயதினருக்கு முன்னுரிமை தந்து, இரண்டு டோஸையும் அவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தரவேண்டும். மாநிலஅரசுகள் அல்லது யூனியன் பிரதேசஅரசுகள் - தனியார் மருத்துவமனைகளில் இதை பணம் கொடுத்து போடும் நிலை மாற வேண்டும்.தனது தடுப்பூசிக் கொள்கையை மத்திய அரசு மறுசீராய்வு செய்யவேண்டும். ‘தடுப்பூசி கொள்முதலுக் காக, நாங்கள் உலகளவில் பேச்சுவார்த்தை நடத்துவோம், தேவையான தடுப்பூசிகளை வாங்குவோம்’ என்று மாநில அரசுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசின் நிர்வாக கொள்கையால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விளாசித் தள்ளியுள்ளது.மேலும், கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 35 ஆயிரம் கோடியில் இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது, 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அந்த நிதியை ஏன் பயன்படுத்த முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட முடிவு செய்திருந்தால், அவர்களும் தங்களின் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.