புதுதில்லி:
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை ஜூலை31-ம் தேதிக்குள் மாநில அரசுகள் கண்டிப்பாகஅமல்படுத்த வேண்டும், இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்ஆர் ஷா அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு கூடுதலாக உணவுதானியங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.முறைசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கான திட்டத்தை தயாரித்து ஜூலை 31க்குள் வெளியிட வேண்டும். இதற்காக தேசியதகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர்தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் உதவி திட்டத்தை கோவிட்பெருந்தொற்று முடியும் வரை செயல்படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள், ஜூலை 31 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.