புதுதில்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குஎழுதிய என் கடிதத்தில் நீதிமன்ற அவமதிப்போ, கேடு நினைக்கும் எண்ணமோகிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்க்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:இந்திய பார் கவுன்சில் மார்ச் 4தேதியிட்டு வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியைப் பார்த்தேன். இது என்பெயரை பல இடங்களில் மிகவும்இழிவுபடுத்தும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் அதற்காக இக்கடிதத்தை உங்களுக்கு நான்எழுதவில்லை. மாறாக அதில் கண்டுள்ள பிரச்சனைகள் பெண்களுக்கான நீதிக்காகப் போராடிக் கொண்டிருப்போருக்கு விரிவான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இதனை எழுதுகிறேன்.
தலைமை நீதிபதி மன்றமறிய சில கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக என் கடிதத்தை பார் கவுன்சில் தீர்மானம் குறிப்பிடுகிறது. அவர்கூறிய கருத்துக்கள் எதையும் பார் கவுன்சில் தீர்மானம் மறுக்கவில்லை. அக்கருத்துக்கள் தீர்ப்பின் ஒரு பகுதியாஇல்லையா என்பதே இங்கே முக்கியம் கிடையாது. ஆனாலும் அத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிமன்றத்தின் உயர்பீடத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர்,பாலியல் வன்புணர்வுக் குற்றஞ்சாட்டப்பட்டவனை, வன்புணர்வுக்கு உள்ளானநபரையே திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்பது சிறுமிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றத்தின் கொடூரத்தன்மையை நீர்த்துப்போகச் செய்திடாதா என்பதேயாகும். இத்தகைய கருத்துக்களுக்கு சட்டப் புனிதத்துவம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் நிச்சயமாக படுபிற்போக்குத்தனமான சமூகஅணுகுமுறைகளுக்கு சட்டப்பூர்வமான தன்மையை அளித்திடும். இதைத்தான் என் கடிதத்தில் குறிப்பிட்டேன். உண்மையில் இந்திய பார் கவுன்சில், இதை உயர்த்திப்பிடித்திருக்க வேண்டும்.அடுத்து இந்திய பார் கவுன்சில்,குற்றஞ்சாட்டப்பட்டவன் மற்றும் பாதிப்புக்கு உள்ளான சிறுமி ஆகியவர்களின் பெற்றோர்களுக்கிடையே “எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம்” ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இந்தஒப்பந்தத்தில் ஏதேனும் சட்டரீதியான அம்சம் இருக்கிறதா? இது எந்தச்சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது? அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்றார் என்பது இந்திய பார்கவுன்சிலுக்குத் தெரியாதா?
அந்தச் சிறுமி திருமணம் செய்துகொள்ள மறுத்தார் என்பது பார் கவுன்சிலுக்குத் தெரியாதா? மிகவும் முக்கியமாக திருமண வயது வராத அந்தச் சிறுமிக்காக இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியுமா? பின்னர் அவருக்கு திருமணம் செய்துகொள்ளும் வயது வந்த பின்னர், நீதிமன்றம் அவரிடம் உன்னை பாலியல் வன்புணர்வு செய்தவனையே திருமணம் செய்துகொள்ள நீ தயாராஎன்று கேட்க வேண்டியது கடமையில்லையா? இதையெல்லாம் பார்கவுன்சில் தீர்மானம் கண்டுகொள்ளாதது, உண்மையில் வருத்தமளிக்கிறது. மூத்த வழக்குரைஞர்கள் பலர் உள்ளஇந்திய பார் கவுன்சில் இதையெல்லாம் ஆய்வு செய்யாதது ஏன்? பாதிப்புக்கு உள்ளான சிறுமியின் நலனுக்காக வாதாடுவதற்குப் பதிலாக, இந்திய பார்கவுன்சில், வன்புணர்வுக்கு உள்ளான கயவனின் நலனுக்காக வாதாடுவது ஏன்?
அவுரங்காபாத் உயர்நீதிமன்றம், கயவனுக்கு அளித்த பிணையைநிராகரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அவன் மேல்முறையீடு செய்யாவிட்டால் கைது செய்யப்பட்டிருப்பான். எனினும், உச்சநீதிமன்றம் அவனுக்கு ஒரு மாத காலத்திற்கு கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய கூற்று “பாராட்டப்பட வேண்டும்” என்றுஇந்திய பார் கவுன்சில் குறிப்பிட்டிருக்கிறது. இதுதொடர்பாக என் கருத்தைக் கெடுப்பதற்கான உரிமை பார் கவுன்சிலுக்குக் கிடையாது.அடுத்து இரண்டாவது வழக்கு தொடர்பானதாகும். மணமானவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக எந்தச் சட்டமும் இந்தியாவில் இல்லை என்பது உண்மை. இது தொடர்பான வழக்கு இப்போதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டதையும் இந்திய பார் கவுன்சில் “நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளின் கீழ் வரக்கூடியவை” என்று குறிப்பிடுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. என் கடிதத்தில் எவ்விதமானநீதிமன்ற அவமதிப்போ அல்லது தீங்கிழைக்கும் எண்ணமோ கிடையாது. மாறாக, பார் கவுன்சிலின்தீர்மானத்தில் காணப்படும் வார்த்தைகளில் சில, என்னை மிரட்டுவதாக எடுத்துக்கொள்ளப்படலாம். இதுபோன்ற மிரட்டல்களை இந்திய பார் கவுன்சில் தனிநபர்/தனிநபர்களுக்கு எதிராக பிரயோகிக்கலாமா என நான் மிகவும் ஐயுறுகிறேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)