court

img

தடுப்பூசியே இல்லை... காலர் டியூன் எதற்கு? எரிச்சலடைந்து தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்.....

புதுதில்லி:
தடுப்பூசியே இல்லாத நிலையில், செல்போன் காலர்டியூனில் தடுப்பூசி போடுமாறு மீண்டும் மீண்டும் வரும் விளம்பரம் எரிச்சல்தருவதாக தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் உள்ளதுஎன்று மக்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர். பிச்சை எடுத்தாவது ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி நோயாளிகளை காப்பாற்றுங்கள் என்று தில்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டு வைத்த பிறகுதான் மோடிஅரசானது சிறிது நடவடிக்கையில் இறங்கியது.கொரோனா சூழல் தொடர்பான மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பல்லி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: யார் எப்போது போன் செய்தாலும், தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தும் விழிப்புணர்வு விளம்பரம் மீண்டும் மீண்டும் வருகிறது.

மத்திய அரசிடம் போதுமான தடுப்பூசி இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு தடுப்பூசி போடப் போகிறீர்கள்? எல்லா இடத்திலும் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி விளம்பரம் செய்வது எரிச்சல் தருகிறது. இதனால் யாருக்கு என்ன பயன்? பணத்தை வாங்கிக் கொண்டாவது அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுங்கள். இதைத்தான் சின்ன சிறுவர்கள் கூட சொல்கிறார்கள். அதே சமயம், இதுபோன்ற விழிப்புணர்வு காலர் டியூன்கள் தயாரிக்கும் போது ஒரே செய்தி திரும்பத் திரும்ப போடுவதால் பயன் இல்லை. தயவுசெய்து, புதிதாக ஏதாவது செய்தியை சொல்லுங்கள். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.