cinema

img

உலகம் சுற்றும் வாலிபன் - பாமர ரசிகர்களுக்குப் புரிந்த அறிவியல் புனைகதை

இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் 1973 ஆம் வருடம் வெளிவந்த தமிழ்த்  திரைப்படங்களில் பலவும் முத்தி ரைப் படங்களாக அமைந்து போனது தற்செயலானதும் வியப்புக்கு ரியதும்தான். ஏறத்தாழ 52 படங்கள் அந்த ஆண்டு வெளிவந்திருக்கின்றன. அவற்றில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை இப்படி இருந்தது.  ஜெய்சங்கர் நடித்த படங்கள் 11, முத்துராமன் நடித்தவை 10, ஏ.வி.எம். ராஜன் நடித்தவை 9, சிவாஜி கணேசன் நடித்தவை 7, ஜெமினி கணேசன் நடித்தவை 6, சிவகுமார் நடித்தவை 3, எம்.ஜி.ஆர். நடித்தவை 2 படங்கள். ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் போன்றோர் தயாரிப்பாளர்களின் கைகளுக்கு அடக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள். சிவகுமார் நட்சத்திர அந்தஸ்திற்கு முயன்று கொண்டிருந் தார். அந்நாளைய மெகா நட்சத்தி ரங்களான சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகி யோருடன் ஜெமினி கணேசனும் போட்டி யிட்டிருப்பதை உணர முடிகிறது. நடிகை களில் ஜெயலலிதா 6 படங்களில் அந்த  ஆண்டு நடித்திருப்பதாகத் தெரிகிறது. ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், விஷ்ணுவர்த்தன் போன்றோரும் இந்தக் கோதாவில் இருக்கிறார்கள். 

சிவாஜிக்கு பாரதவிலாஸ், எங்கள் தங்க ராஜா, கௌரவம், மனிதரில் மாணிக்கம், பொன்னூஞ்சல், ராஜராஜ சோழன், ராஜபார்ட் ரங்கதுரை ஆகிய அத்தனை படங்களும் அந்த ஒரே ஆண்டில் வெளிவந்தன. அவை எல்லாமே பெயர் சொன்ன படங்கள்தாம். அதிலும் குறிப்பாக பாரதவிலாஸ், கௌரவம், ராஜ ராஜசோழன் ஆகியன சிவாஜியின் நடிப்புலக வரலாற்றில் முத்திரைப் படங்கள். இரண்டு, மூன்று ஆண்டு களுக்கு ஒரு படம் கொடுக்கும் இந்த நாளின் உச்ச நட்சத்திரங்கள் நினைத்தே பார்க்க முடியாதது இந்த சிவாஜி சாதனை. இன்றைய பொன்னியின் செல்வன்  படத்திற்கு ஒரு முன்னோடி சிவாஜி நடித்த ராஜராஜசோழன். தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம்.   ஒரே ஆண்டில் 7 படங்கள் என்ற சிவாஜியின் பிரமிக்கத்தக்க கணக்கோடு ஒப்பிடுகையில்  எம்.ஜி.ஆருக்கு இரண்டு  படங்கள்தாம். அவற்றில் பட்டிக்காட்டுப் பொன்னையா ஒரு தோல்விப்படம்.

ஆனால், அவருக்கு ஈடற்ற வெற்றியை ஈட்டித்தந்தது முழுக்க முழுக்க மாறு பட்டதாக உருவாக்கப் பட்ட உலகம் சுற்றும்  வாலிபன். தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனைப்படம் அது. இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்திலும் வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே தமிழ் சினிமா என்ற பெயரெடுத்தது இந்த உ.சு. வாலிபன்.  எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறு வனத்திற்காக ஆர்.எம்.வீரப்பன் உதவி யோடு அதன் உரிமையாளரான எம்.ஜி.ஆரே இரட்டை வேடங்களில் நடித்து இயக்கிய படம் இது. கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் உருவான படம். முதலில் மேலே ஆகாயம் கீழே பூமி என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. பிறகு தான் அது உலகம் சுற்றும் வாலி பனானது. ஆர்.எம்.வீரப்பன், வித்வான்  வெ. லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் இணைந்து இதன் கதையை  எழுதினார்கள். வசனம் கே. சொர்ணம். முதலில் குன்னக்குடி வைத்தியநாதன்தான் இசையமைப்பதாக இருந்தது. பிறகு எம்.எஸ்.விஸ்வநா தனுக்கு அந்த வாய்ப்பு போனது. மேற்கத்திய, தென்கிழக்கு ஆசிய பாணி இசைக் கோவை விஸ்வநாதனை வேற லெவல் இசையமைப்பாளராக அடையாளம் காட்டின. 

படத்தில் மொத்தம் 15 பாடல்கள்.  அவற்றில் பல பாடல்கள் படத்தில் இடம்பெறாமல் போயின. பன்சாயி என்று தொடங்கும் ஒரு பாடல். ஜப்பா னில் அதன் பொருள் பத்தாயிரம் ஆண்டுகள் என்பதாம். நம்மூரில் நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தும் மரபுபோல அங்கே பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்க என்கிற மரபார்ந்த வாழ்த்தே இந்த பன்சாயி என்கிறார்கள். கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வேதா ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தார்கள். டி.எம்.சௌந்த ரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி.சுசீலா,  எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் பெயர் அறியாத ஜப்பானியப் பாடகர் களும் குரல் கொடுத்திருந்தார்கள்.  மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான் முதலான தென்கிழக்கு நாடுகளில் படப்பிடிப்பை நடத்தினார்கள். ஆனால் இதன் நாயகன் உலகத்தையே சுற்றியதாக படத்தின் பெயர் சொல்லிக்கொண்டது. ஜப்பானில் அப்போது நடந்துகொண்டிருந்த உலகத் தொழில்களின் கண்காட்சியான எக்போ 70 எனும் பிரம்மாண்டத்தினூடாக இந்தப்  படத்தின் இறுதிக் காட்சிகள் படமாக்கப் பட்டன. கதையை நகர்த்துகிற சாக்கில் நாடுகள் பலவற்றையும் சுற்றிக் காட்டி பிரமிப்பைத் தந்த இந்தப் படத்தின் நிறை வுக் காட்சிகளோ அந்த நாளில் ரசிகர் களிடையே சிலிர்ப்பையே உண்டு பண்ணியது.  தாய்லாந்தில் 10 நாட்களே படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்திருந்த நிலையில் அந்நாட்டின் முன்னணி நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிக்கொண்ட செய்தி அறிந்து அவருக்கு உதவுவதற்காக எம்.ஜி.ஆர். தன் குழுவுடன் விரைந்தாராம். அவர் செய்த உதவிகளை உள்ளூர் செய்தி ஏடுகள் அடுத்த நாள் வெளியிட, அதன் தொடர்ச்சியாக எம்.ஜிஆருக்கு மேலும் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி கிடைத்ததாம்.

மின்னலின் ஆற்றலைச் சேமித்து வைத்தல் தொடர்பான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு ஆக்க சக்தியாய் அல்லாமல் அழிவு சக்தியாக மாறக்கூடும் என்றதும் அதன் ரகசியக் குறிப்புகளை அழித்துவிடத் துடிக்கும் அறிவியல் அறிஞனான நாயகனுக்கும், அந்த ரகசியக் குறிப்புகளை அயல் நாட்டிற்கு விற்க யத்தனிக்கும் சமூக விரோத கும்ப லுக்கும் இடையிலான முரண் மோதலே  படத்தின் கதையின் சாரம். காதல் கனவுப் பாடல்களைப் பொருத்தப்பாடில்லாமல் வெளிநாடுகளில் படம்பிடித்துக் காட்டும் நமது தமிழ் சினிமாவில் அந்த அறிவியல் ரகசியக் குறிப்புகள் எதிரிகளின் கை களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்கிற நோக்கத்தோடு பல நாடுகளிலும் அவற்றைப் பிரித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கப் புலனாயும் வாலிபனின் பயணமே கதையின் நகர்வை முன்வைக்கிறது. ஆக,  லாஜிக்குடன் ஒரு அயலகப் பயணத் திரைப்படம்.     எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள்.  மஞ்சுளா, சந்திரகலா, லதா என்று மூன்று நாயகிகள். கூடுதலாக தாய்லாந்தின் நடிகை மேத்தா ருங்ராட். நாடுகள் பல வற்றின் எழில் காட்சிகளை ரசிக்கிற போதே இடையிடையே நகைச்சுவைக்கு நாகேஷ். எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்காகவே விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள். வணிக ரீதியிலான பொழுதுபோக்குப் படம்தான் என்றாலும் பாமர ரசிகர்களுக்குப் புரிகிறமாதிரியிலான ஒரு எளிய அறிவியல் புனைவாகவும் இருந்தது இந்த உலகம் சுற்றும் வாலிபன். 

எக்ஸ்போ 70-இல் அந்நாளைய சோவியத் யூனியனின் அரங்கம். அதனை இந்தப் படத்தில் காட்டுகிறார்கள். அந்த அரங்கின் முகப்பில் பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கும்  அரிவாள் சுத்தி யல் சின்னத்தினைக் காமிரா படம் பிடித்து, நகர்ந்து ஒரு பெரிய திரையில் நிலைகொள்கிறது. அந்தத் திரையில் சோவியத்தின் சிற்பி மாமேதை லெனி னின் முகம் அண்மைக் காட்சியாகப் பெரிதாகத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர். தன் காதலி சந்திரகலாவிடம் அதைச்  சுட்டிக்காட்டியபடி “லெனின்” - என்று  அழுத்தமாகக் கூறுவார். இப்படியொரு காட்சி நமது தமிழ் சினிமாவில்தான். அது வும் எம்.ஜி.ஆர். விரும்பி வைத்தது அந்தக் காட்சி. உலகம் சுற்றும் வாலிபன் திரைக்கு வந்து 49 ஆண்டுகள் முடிவடைந்து இது 50ஆவது ஆண்டு. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் பல திரைப்படங்களையும்போல அது ஒரு பழைய படமாகக் குப்பைத்தொட்டிக்குப் போய்விடவில்லை என்பது வியப்புக்குரியதுதானே!

;