cinema

img

திரைக்கதிர் - சோழ. நாகராஜன்

“போல்டா இருக்கணும் நோ சொல்லணும்” 

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகை ஓவியா கூறியதாவது:- சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை எப்போதுமே இருக்கிறது. ஆனால் இப்போதும் அது தொடர்வது வேதனையாக தான் இருக்கிறது. சினிமா இவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனாலும் இந்த பிரச்சனை மட்டும் ஓயவில்லை. எல்லா இடத்திலும் பெண்களை அனுசரிக்க சொல்கிறார்கள். இதற்கு பெண்கள் அப்பொழுதே பதிலடி கொடுத்தால் நன்றாக இருக்கும். எதையும் மனதில்  போட்டு குழப்பிக்காமல், உடனே ரியாக்சன் கொடுத்தால் பிரச்சனையே வராது. எதுவாக இருந்தாலும், நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பண்ணவே கூடாது. அப்படி செய்து கிடைக்கும் பலன் தேவையே இல்லை. நிறைய பேர் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். சினிமா பாதுகாப்பான துறைதான். ஆனால் நாம் தைரியமாக இருக்க வேண்டும். நம்மை நாமே தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் ‘நோ’ சொல்ல தெரிய வேண்டும். இல்லை என்றால் நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள். யாரும் நம்மை ஏமாத்தவிடக்கூடாது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்.

‘மலைக்கோட்டை வாலிபன்’ சிறந்த திரையரங்க அனுபவம் தருமாம்!

‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் புதிய  படம் குறித்து கேரள மாநிலம் கொச்சியில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் நாயக நடிகர் மோகன்லால் கூறியது: “மலைக்கோட்டை வாலிபன் பிரம்மாண்டமான படமாக இருக்கும். படத்தில் உள்ள பல விஷயங் களை உங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். காதல், பொறாமை என பல்வேறு உணர்ச்சி களை உள்ளடக்கிய படமாக இது இருக்கும். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், அதன் கதை சொல்லல் முறை மற்றும் உடைகள் ஆகிய எல்லாமே முற்றிலும் வித்தியாசமானவை. இப்படியான கதா பாத்திரத்தில் நடித்தது எனக்குக் கிடைத்த பாக்கிய மாகக் கருதுகிறேன். இதைவிட வேறு என்ன வேண்டும்? இப்படத்தின் கதை எனக்காகவே பிரத் யேகமாக எழுதப்பட்டதல்ல. நானும், இயக்குநர் லிஜோவும் பல கதைகள் குறித்து விவாதித்தோம். அதில் நான் இந்தக் கதையை தேர்வு செய்தேன்.  நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தை திரை யரங்குகளில் வந்து பாருங்கள். அதுதான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது. உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஒரு வருட உழைப்பைச் செலுத்தியுள்ளோம்!” - என்று கூறினார். இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி பேசுகையில், “இந்தப் படத்தைப் பொறுத்தவரை அதை எந்த ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள்ளும் அடைக்க முடியாது. பார்வையாளர்கள் என்ன உணர்கிறார்களோ அதுதான் படம். கதை இந்தக் காலக்கட்டத்தில்தான் நடக்கிறது என்றில்லாமல், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வகையில் உரு வாக்கியுள்ளோம்!” - என்றார்.  மலையாளத்தில் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ  ஜோஸ் பெல்லிசேரி. சென்ற ஆண்டு ஜனவரியில் ராஜஸ்தானில் மலைக்கோட்டை வாலிபனின் படப்பிடிப்பு தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. மோகன்லாலுடன் மணி கண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி,  ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசை. இந்தப்படம் இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘உருவாக்கியவன் குற்றவாளி பகிர்பவன் பெருங்குற்றவாளி’

செயற்கை நுண்ணறிவு ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள்  அண்மைக்காலமாக அதிகமாக பரவி வருகின்றன. இதில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல் போன்ற நடிகைகள் பாதிக்கப்பட்டனர். தற்போது நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் டீப் பேக் வீடியோ வெளியாகி உள்ளது. இதுபற்றி அபிராமி கூறியிருப்பதாவது: “நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்கக்கூடாது. இதுபோன்ற வீடியோவை உருவாக்கியவன் குற்றவாளி என்றால் அதை பகிர்ந்து மகிழ்பவன் அவனைவிட பெரிய குற்றவாளி. இவர்களுக்கு பிரபஞ்சம் தண்டனை தரும். நான் தைரியசாலி. எனது வலிமையை தகர்க்க முடியாது. பெண்களின் நிர்வாண வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது என புரியவில்லை” என்று கொந்தளித்துள்ளார்.

வீழ்ச்சியிலும் தன்மானமிழக்காத பாகவதர்...

ஒரு தீபாவளிக்கு வெளியாகி, மூன்று  தீபாவளிகளைக் கடந்தும் ஓடிக்கொண்டி ருந்த ஹரிதாஸ் படம் அந்நாளைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் புகழை உச்சத்திற்குக் கொண்டுசென்றது. அதன் விளைவுதான் நல்லதும் கெட்டதுமாக அவருக்கு விடிந்தது.  ஹரிதாஸ் படத்தைத் தொடர்ந்து பாகவதரைப் படத் தயாரிப்பாளர்கள் மொய்க்கத் தொடங்கினார்கள். அதனால் அவருக்கு ஒரே சமயத்தில் 12 படங்கள் ஒப்பந்த மாயின. அதனைத் தொடர்ந்து ஒரு பிரம்மாண்ட  விளம்பரம் பத்திரிகைகளில் வந்தது. பாகவ தர் ஒரு வெள்ளைக் குதிரையில் அமர்ந்திருக்க,  அதனைச் சுற்றிலும் 12 நிலவுகள்போல வட்ட வடிவில் ஒவ்வொரு படத்திலும் அவரது முகத்தோற்றங்களும் அந்தப் படங்களின் பெயர்களுமாக காண்போரை வியக்க வைத்தது அந்தப் புதுமை விளம்பரம். அந்த நிலையில்தான் பாகவதர்மீது திரைத்துறையில் பொறாமைத்தீ பற்றியெரியத் தொடங்கியது.  நீறுபூத்த நெருப்பாக, வெளித்தெரியாத பனிப்போராக அது உருவெடுத்துத்தான் அவர்மீதும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீதும் பொய்யாய்ச் சோடிக்கப்பட்ட தொரு கொலைப்பழி விழுந்தது. “ஒருசிலர் கொண்ட கொடிய பொறாமை...” - என்றே கலைவாணர் தனது பாடலொன்றில் இதனைச் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார்.  சிறை செல்ல நேர்ந்ததால் ஒப்பந்த மான படங்களுக்காகத் தாம் பெற்ற  முன்பணத்தையெல்லாம் திருப்பித்தரும் முடிவில் பாகவதரும் கலைவாணரும் ஒன்று போலச் சிந்தித்து முடிவெடுத்திருந்தார்கள். பாகவதர் முன்பணமாகப் பெற்றதிலேயே அதிகத் தொகை தயாரிப்பாளர் லேனா செட்டியார் தந்ததுதான். அது அந்நாளில் வியப்பை ஏற்படுத்தும் அளவுக்கான பணமாக இருந்தது. ஆமாம், அது இரண்டு லட்ச ரூபாய்.  இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் சிறை மீண்டு வெளியில் வந்த பாகவதரின் படங்கள் எதுவும் சரிவர ஓடவில்லை. அதற்காக பாகவதர் எவர்மீதும் பழி சொல்லாமல் காலம் மாறிவிட்டது என்பதாகவே உணர்ந் தார். லேனா செட்டியாரோ பாகவதரை வைத்துப் படமெடுத்துத் தாமும் தோல்வி யைச் சந்தித்துவிடுவோமோ என்கிற அச்சம் காரணமாக அவரிடம் தமது முன்பணம் இரண்டு லட்ச ரூபாய்க்காக ஒரு ஆறு பாடல் களைத் தமக்காகப் பாடித்தருமாறும் அவற்றை வேறொரு நாயக நடிகருக்கான பின்னணிக் குரலாகத் தாம் பயன்படுத்திக்கொள்வதாகவும் சொன்னார். ஆறு பாடல்களுக்கு இரண்டு  லட்ச ரூபாய் என்பது அப்போது பெருந்தொகை தான். என்றாலும், பாகவதருக்குக் கடும் கோபம் வந்தது.  பின்னணிக் குரல்தர மறுத்த பாகவதர் செட்டியாரின் பணத்தை எப்படியாவது பணமாகவே திருப்பித் தந்துவிடுவதாக அவரிடம் சொன்னார். நாயக நடிகராக, தன் சொந்தக் குரலைத் தனக்காகவே பயன்படுத்திவந்த அவரை வேறொரு நடிகருக்காகப் பின்னணி பாடச் சொன்னபோது அவரது தன்மான உணர்ச்சி அவரை அதற்கு மறுப்புச் சொல்ல வைத்துவிட்டது. வீழ்ச்சியிலும் சுயமரியாதையை இழக்கச் சம்மதியாதவராகத் திகழ்ந்தார் பாகவதர் எனும் அந்தப் பெருங்கலைஞர்! 

 

;