புதுதில்லி:
இந்தியாவில் நாளொன்றுக்கான கொரோனா தொற்றுப் பாதிப்பு, 4 லட்சத்து 50 ஆயிரம் பேரைத் தாண்டி தீவிரம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை, 4 ஆயிரத்தை தொட்டுள்ளது.
ஆனால், இப்போதும்கூட மோடி அரசு நடவடிக்கையில் இறங்குவ தாக இல்லை. தடுப்பூசி தயாரிப்பை, தங்களுக்கு வேண்டிய 2 தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கியதோடு, விலையையும் அவர்கள் இஷ்டத்திற்கு உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கிவிட்டது. இலவசத் தடுப்பூசி என்ற கொள்கைக்குப் பதில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டது. மாநிலங்கள் வேறு வழியில்லா மல், அதையும் ஏற்றுக்கொண்டு தடுப்பூசி உற்பத்திக்கு ஆர்டர் கொடுத்தால், தாங்கள் சொல்லும் மாநிலங்களுக்கு மட்டுமே தடுப்பூசியை அனுப்ப வேண்டும்; எண்ணிக் கையையும் நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று, அதிலும் புகுந்து தடுத்து வருகிறது.மோடி அரசின் இந்த நடவடிக்கைகள், இந்திய எதிர்க்கட்சிகளை மட்டுமன்றி, உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சர்வதேச நாடுகள், ஊடகங்கள் பலவும் மோடி அரசின் அலட்சியம், நிர்வாகத் திறமையின்மையை குறிப்பிட்டு விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், பாஜக ஆதரவு பாலிவுட் நடிகரான அனுபம் கெர்-ரும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் கோபம் அடைந்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில், அனுபம் கெர்-தான் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்தார். இதற்காகஅப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். எனினும், பிரதமர் மோடி மற்றும் பாஜக-வை வெளிப்படையாக அவர் ஆதரித்தார். தன்னை இந்துத்துவா ஆதரவாளராகவும் காட்டிக் கொண்டார். இதற்குப் பரிசாக, அனுபம் கெர்-ரின் மனைவிகிரண் கெர்-ருக்கு பாஜக எம்.பி. பதவியும் வழங்கியது.
இவ்வாறு பலவகையிலும் பாஜக-வுக்கு நெருக்கமான அனுபர் கெர்-தான், மோடியைத் தற்போது விமர்சித்துள்ளார். இதுதொடர்பான என்டிடிவி-க்கு பேட்டி ஒன்றை அனுபம் கெர் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:
‘கங்கை முதல் நாட்டில் உள்ள அத்தனை புண்ணிய நதிகளிலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மிதப்பது மிகப்பெரிய அபாய எச்சரிக்கையாக தெரிகிறது. போர்க் கால அடிப்படையில் செயல்பட்டு இந்த கொரோனா எனும்கொடிய நோய்க்கு மத்திய அரசு ஒருமுற்றுப்புள்ளி வைத்து மக்களை காப்பாற்றியே ஆக வேண்டும்.இந்த இக்கட்டான கொரோனா சூழ்நிலையில், மக்களின் உயிர்களைகாப்பாற்றுவதுதான் முக்கியம். அரசு அதைத்தான் முழு மூச்சாககொண்டு செயல்பட வேண்டும். தேவையற்ற பிம்பத்தை பாதுகாக்கும் முயற்சியிலும், மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. ஒரு மனிதாபிமானமற்ற நபர் மட்டுமே, கொரோனா விஷயத்தில் கவலைப்படாமல் இருக்க முடியும்.
மக்கள் இன்று அரசுக்கு எதிராககோபப்படுகிறார்கள் என்றால், ஆக்சிஜன், மருத்துவ வசதிகள் அல்லது படுக்கைகள் பற்றாக்குறையால் குடும்ப உறுப்பினரை இழந்தவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை எவ்வாறு ஆறுதல் படுத்த முடியும்? இன்று பிரதமர் மோடிக்கு எதிராககோபப்படுபவர்கள்தான், முன்பு அவருக்கு ஓட்டுப் போட்டு நாட்டை ஆளதேர்ந்தெடுத்தவர்கள். மக்கள் சாவதை பிரதமர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால், பொதுமக்கள் கோபப்பட்டு திட்டவும், சபிக்கவும் செய்வார்கள்தான். அதற்காக, அவர்களை தண்டிப்பதற்கான யோசனைகளில் இறங்கி விடாமல், கொரோனாவால் ஒரு உயிர்கூட போகாமல் இருப்பதற்கு என்ன வழி என யோசிக்க வேண்டும்.சிந்தித்து செயல் ஆற்ற வேண்டும்’ என்று அனுபம் கெர் கூறியுள்ளார்.அனுபம் கெர்-ரின் இந்த விமர்சனத்தை, அவரது ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். மேலும், டுவிட்டர் சமூகவலைதளத்தில் ‘#Anupam Kher’ என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.