cinema

img

டம்பாச்சாரி... சமகால வாழ்க்கையைப் பேசிய படம்...

சமூகக் கதையாடல்களில் பலவிதமானவற்றைப் பரீட்சித்துப் பார்க்கிற வழமையும் மெல்ல மெல்ல துவக்க காலத் தமிழ் சினிமாவில் வரத் துவங்கிய காலத்தில், 1935 வெளிவந்த படம்தான் ‘‘டம்பாச்சாரி’’. முன்னோர்கள் சேர்த்துவைத்த செல்வத்தைக் கொண்டு, ஊதாரித்தனமாகச் செலவு செய்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்கிற முறைமையை மக்கள் வழக்கில், ‘‘டம்பம் அல்லது டாம்பீகம்’’ - என்று குறிப்பிடுவதுண்டு. அப்படியானதொரு டம்பப் பேர்வழியைப் பற்றிய கதைதான் இந்த டம்பாச்சாரி. 
திருவெற்றியூர் காசிவிஸ்வநாத முதலியார் சென்னையின் முக்கியப் பிரமுகர்களுள் ஒருவர். அவர் அந்நாளில் முன்னணி நாடக  ஆசிரியராவார். பிரம்ம சமாஜ இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காசிவிஸ்வநாத முதலியார் சொந்தமாக நாடகக் குழு ஒன்றை வைத்திருந்தார். அந்தக் குழு பலமுறை மேடையேற்றிப் பிரபலமான நாடகங்கள்தான் தாசில்தார் நாடகம் மற்றும் டம்பாச்சாரி விலாசம். அந்த டம்பாச்சாரி விலாசம்தான் சினிமாவானது.   

கதாநாயகன் டம்பாச்சாரி தனது தந்தை வழியில் கிடைத்த செல்வத்தை வைத்துக்கொண்டு கட்டிய மனைவி இருக்க, மதனசுந்தரி என்னும் இன்னொரு பெண்ணுடன் தகாத உறவை வளர்த்துக்கொள்கிறான். அவனையே உலகமாகக் கருதி வாழும் அவனது மனைவியைப் ஆதரிக்காமல் அலட்சியப்படுத்துகிறான். இப்படியாக நகரும் கதையில் கிருஷ்ணமூர்த்தியின் பணக்காரத் தகப்பன் மரணப் படுக்கையில் கிடக்கிறபோது, ஒரு ரகசியத்தைத் தனது மகனிடம் சொல்கிறார். அது என்னவென்றால், அவர்கள் வசிக்கும் பெரிய பங்களாவின் கொல்லைப்புறத்தில் செல்வங்கள் நிறைந்த ஒரு புதையல் இருப்பதாகவும் அதனைத் தேவைப்படுகிற அவசர காலத்தில் தோண்டியெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும் அவனிடத்தில் கூறிவிட்டுக் கண்ணை மூடுகிறார் அவனது அப்பா.

இந்தச் சூழலில் தனது தவறை உணர்ந்து, மனந்திருந்தி, தன்னை நம்பிவந்த மனைவியிடம் மன்னிப்புக்கோரி அவளுடன் இணைகிறான். அதன் பின்னர் தனது ஊதாரித் தனங்களை விட்டுவிட்டு, நல்ல வாழ்க்கை வாழத் தொடங்குவதாகக் கதை முடிகிறது. இந்தப் படத்திற்கு ‘‘டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி’’ - என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் சுவரொட்டிகள் ஒட்டுவது அந்நாளைய வழக்கமாக இருந்தது. அதன் ஆங்கிலச் சுவரொட்டியில், ‘‘DUMBACHARY OR IDEAL WIFE’’ என்றே காணப்பட்டது. 

கல்கத்தாவின் பயனீர் ஸ்டூடியோவில் உருவான இந்த டம்பாச்சாரி படத்திற்கு ‘செல்லம்’ என்றழைக்கப்பட்ட கோவை ஏ.என். மருதாச்சலம் செட்டியாரின் செல்லம் டாக்கீஸ் பின்புலமாக இருந்து நிதியுதவி செய்தது. புராணக் கதைகளையே சினிமாவாக எடுத்துக்கொண்டிருந்த அந்தத் துவக்க காலத்தில் இந்த டம்பாச்சாரியின் விளம்பரத்தில் முதல் சமூகப் படம் என்று பெருமையோடு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் முன்னணி இயக்குநராக அறியப்பட்டிருந்த மாணிக்லால் டாண்டன் என்ற எம்.எல்.டாண்டன் இந்தப் படத்தை இயக்கினார். 

டாண்டன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெற்குக் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் திரைப்படக் கல்வியைப் பயின்றவர். அமெரிக்காவில் பிறந்து, தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த எல்லீஸ் ஆர்.டங்கன் மற்றும் ‘‘நவயுவன்’’ புகழ் மைக்கேல் ஓமலோவ் ஆகியோர் டாண்டனின் வகுப்புத் தோழர்கள். நாடகமாக நடத்தப்பட்டபோது, அதில் நகைச்சுவை வேடத்தில் வந்து கலக்கியவர் சி.எஸ்.சாமண்ணா. பின்னாளில் நவராத்திரி, அண்மையில் தசாவதாரம் என்று நம் நாயக நடிகர்கள் செய்த அதே சாகசத்தை நாடகத்திலேயே ஏழு வேடங்களில் நடித்து அசத்தினார் அவர். சில நிமிட நேரத்திலேயே ஒரு வேடத்திலிருந்து இன்னொரு வேடத்திற்கு மாறி, ரசிகர்களே நம்ப இயலாதவண்ணம் திறமை காட்டினார். அதுவே இந்த டம்பாச்சாரி  சினிமாவிலும் இடம்பெற்றபோது ரசிகர்களிடத்தில் இந்த ஏழு வேட நகைச்சுவை எடுபடவில்லை. 

நாயகன் டம்பாச்சாரியாக எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அவரின் மனைவி குணபூஷணியாக பி.எஸ்.ரத்னாபாய், நாயகனின் காதலி மதனசுந்தரியாக பி.எஸ்.சரஸ்வதிபாய், நகைச்சுவையில் ஏழு வேடங்களில் சி.எஸ்.சாமண்ணா மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். ரத்னாபாயும் சரஸ்வதிபாயும் பாளையங்கோட்டை சகோதரிகள் என்று அறியப்பட்டவர்கள். டம்பாச்சாரியில் மொத்தம் 38 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஒருசில பாடல்களைத் தவிர மற்றவை அன்றைக்கு இந்தி சினிமாவில் பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள்தான். படத்தின் பெரும்பாலான நடிகர்கள் கர்நாடக இசையைப் பாடும் திறனுள்ளவர்களாக இருந்ததால் ரசிகர்கள் அவர்களிடம் வசனங்களைவிட பாடல்களையே அதிகம் எதிர்பார்த்தார்கள் என்பதும் ஒருவித விசித்திர நிலைதான். தமிழ் சினிமாவின் துவக்க நாட்களிலேயே வித்தியாசமான கதையாடலுக்காகவும் நாயகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாளையங்கோட்டை சகோதரிகள் ஆகியோரின் மேம்பட்ட நடிப்பிற்காகவும் இந்த டம்பாச்சாரி அப்போது கவனம் பெற்றது.

;