cinema

img

மீரா - நாடக பாணியைப் புரட்டிப்போட்ட

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சிறந்த படங்களில் மிகமுக்கியமான ஒன்றென ஆய்வாளர்களால் இன்றும் குறிக்கப்படும் மீரா ஒரு அமெரிக்கத் திரைக்கலைஞரின் கொடை என்றால் வியப்பாகத்தானே இருக்கிறது! ஆமாம், அந்த அமெரிக்க அற்புதக் கலைஞர்தான் எல்லிஸ் ஆர்.டங்கன். தமிழ் சினிமாவில் பல புதுமைப்போக்குகளைக் கற்றுத்தந்த மேதை அவர். அவர் இயக்கிய இந்த மீராவின் நாயகி இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி. செவ்வியல் இசைச் சித்திரமாகவே உருவானது மீரா. முதலில் தமிழிலும் பின்னர் இந்தியிலும் வெளிவந்தது இந்த மீரா.  எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சித்தூர் வி. நாகையா, டி.எஸ். பாலையா, செருகளத்தூர் சாமா, எம்.ஜி.ராமச்சந்திரன், டி.எஸ்.துரைராஜ், பேபி ராதா, கே.ஆர்.செல்லம், பேபி கமலா, அப்பா கே. துரைசாமி முதலானோரும் நடித்திருந்தார்கள். ராஜபுதன அரசனாக வி.நாகையா மீராவின் கணவராக நடித்தார். பேபி கமலா கிருஷ்ணனாக வந்தார். 1945இல் வெளிவந்த மீராவை சந்திரபிரபா சினிடோன் ஃபிலிம் நிறுவனத்திற்காக அதைத் தயாரித்தது வேறுயாருமல்ல... எம்.எஸ். சுப்புலட்சுமியின் காதல் கணவர் டி. சதாசிவம்தான். 

படத்தின் ஆன்மா என்று சொல்லத்தக்க செவ்விசை விருந்தை அள்ளி வழங்கியது அந்நாளின் மிகச்சிறந்த இசையாளுமை எஸ்.வி. வெங்கடராமன். மீராவில் மொத்தம் 16 பாடல்கள். அத்தனையும் செவிக்கு இன்பமளித்தன. குறிப்பாக காற்றினிலே வரும் கீதம் என்று தொடங்கும் பாடல் இன்றைக்குக் கேட்டாலும் ஒரு சுகானுபவம் வழங்குவதாக உள்ளது. அதனை சுப்புலட்சுமியின் குரலின் குழைவுகளோடு கேட்பதற்குச் செவியிரண்டு போதாது எனப்படுகிறது. காற்றினிலே வரும் கீதம் பாடல் உள்ளிட்ட 5 பாடல்களைக் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். அத்துடன் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் கல்கி எழுதியிருந்தார். மற்ற எல்லா பாடல்களையும் எழுதியவர் பாபநாசம் சிவன். வழுவூர் இராமையா பிள்ளை இந்தப் படத்தின் நடனக் காட்சிகளை அமைத்திருந்தார்.  டங்கனும் அவரது பிரதான ஒளிப்பதிவாளர் ஜிதேன் பானர்ஜியும் இணைந்து இந்த மீராவை ஒரு கருப்பு - வெள்ளை அற்புதமாகப் படைத்துக் கொடுத்தார்கள். அண்மைக் காட்சிகளில் சுப்புலட்சுமியின் முகப்பொலிவு படத்திற்கு மேலதிக வசீகரத்தை ஊட்டியது. சுப்புலட்சுமியின் முகத்தை அப்படியே ஒரு அச்சாக வார்த்துக்கொண்டார் டங்கன். அந்த அச்சை ஒளிப்பதிவாளர் பானர்ஜியோடு சேர்ந்து பல கோணங்களில் பலவிதமான ஒளி அமைப்புகளில் படம் பிடித்தார். பலவிதமான ஃபிரேம்களை வைத்தார். அவற்றையெல்லாம் திரையில் மீண்டும் மீண்டும் ஓடவிட்ட எல்லிஸ் ஆர்.டங்கன் ஒவ்வொரு ஷாட்டையும் கூர்ந்துநோக்கி ஆராய்ந்தார். அவற்றைக் கற்று, அவை உண்டாக்கின பலதரப்பட்ட மாயாஜாலங்களை மனதில் வாங்கினார். இப்படித்தான் எம்.எஸ்.ஸின் தோற்றப்பொலிவைப் படத்தில் எப்படியெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவு எட்டப்பட்டது. இப்படியானதொரு புதுமை வழிமுறை இந்த நாளிலும் வியப்பையே தருவது. 

உள்ளரங்கக் காட்சிகளை டங்கன் நியூடோன் ஸ்டூடியோவில் படமாக்கினார். படத்திற்கு ஒரு யதார்த்த உணர்வை ஊட்ட வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் சென்றார். அங்கே அனுமதி பெறுவதில் சிக்கல்கள் வந்தன. அது ஆங்கிலேய ஆட்சி நடந்த காலமென்பதால் அந்தச் சிக்கல்கள் எளிதில் தீர்ந்தன. இருந்தபோதிலும் இந்து ஆலயம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த விரும்பினார் டங்கன். அவர் மிலேச்சர் என்று காரணம் காட்டி கோவிலுக்குள் அனுமதி மறுக்கும் நிலை இருந்தது. பார்த்தார் டங்கன். தன்னை ஒரு காஷ்மீர் பண்டிட் போல வேடமிட்டுக்கொண்டார். நுனிநாக்கில் அச்சா என்பதுபோன்ற ஒரு சில இந்தி வார்த்தைகளை மட்டும் மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டே ஆலயப் பிரவேசம் செய்துவிட்டார். தான் விரும்பிய வண்ணம் படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார். மேலும் மீராவின் மனதில் குடியிருந்த கிருஷ்ணனின் துவாரகையிலும் படப்பிடிப்பு நடத்தினார் டங்கன். இப்படியான வெளிப்புறக் காட்சிகள் படத்தின் தரத்தை உயர்த்தியதோடு கதைக்கும் ஒரு நம்பகத்தன்மையை வழங்கின.  இசையில் அற்புதத்தையும் காட்சிகளில் புதுமை வியப்பையும் வழங்கியது இந்த மீரா திரைப்படம். புராண வகைக் கதைப்படங்களை மேடை நாடக பாணியிலேயே சினிமா எனும் பெயரில் மீண்டும் மீண்டும் எடுத்துக் கொண்டிருந்த அந்நாளைய தமிழ்த் திரைப்படத்தின் போக்கினை அடியோடு புரட்டிப்போட்டு, புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கும், படைப்பூக்கம்மிக்க காட்சிப் பொலிவு முயற்சிகளுக்கும் கட்டியம் கூறினாள் இந்த மீரா.

;