மணிக்கொடி எழுத்தாளர்கள் வரிசையைச் சேர்ந்தவர் இளங்கோவன். பத்திரிகையாள ராக இருந்தவர் திரைக்கதாசிரியராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக என்று உயர்ந்து சிறந்தவர். மணிக்கொடியின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அவரின் இயற்பெயர் தணிகாசலம் என்பதுதான். தினமணி நாளிதழில் அவர் துணை ஆசிரிய ராகப் பணியாற்றியபோது அவரின் சக துணை ஆசிரியராகப் பணியிலிருந்தவர் புதுமைப்பித்தன். 1937 ல் எம்.கே.டி. பாகவதர் நடித்த அம்பிகா பதி படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு முதன்முதலில் அவருக்கு வாய்த்தது. இலக்கிய நயம் மிக்க அவரது வசனங் களுக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. கண்ணகி படத்திற்கு அவர் எழுதிய வச னங்கள் சிகரம். அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், அலிபாபவும் நற்பது திருடர் களும், கண்ணகி, சிவகவி, ஹரிதாஸ், சக்கர வர்த்தித் திருமகள் உள்ளிட்ட 30 படங்களுக்கு வசனமெழுதிச் சாதித்தார். தமிழறியும் பெரு மாள் (1942) படத்தின் திரைக்கதை, வசனம் இளங்கோவன் எழுத்தில் உருவானது. மானம் காத்த மனைவி என்ற படத்தைத் தயாரித்தார். மகாமாயா என்ற படத்தை சோமுவுடன் இணைந்து இயக்கினார். சிவகவியில் ஒரு காட்சி. வில்லியாக வரும் டி.ஆர்.ராஜகுமாரி பாகவதரை விரும்பு கிறார். பாகவதருக்கு ராஜகுமாரியைப் பிடிக்க வில்லை. வசனத்தை இளங்கோவனின் பேனா இப்படி வரைந்தது: ராஜகுமாரி:
நான் ஆடும்போது அழகாக இல்லையா? பாகவதர்: பாம்பு படமெடுத்து ஆடும்போதுகூட அழகாகத்தான் இருக்கிறது. ராஜகுமாரி: என்னிடத்தில் விஷமில்லையே... பாகவதர்: அஞ்ஞானம் ஆலகால விஷத்தைவிடக் கொடியது. - இப்படித்தான் இளங்கோவனின் வசனங்கள் நமக்கொல்லாம் புதிய முறைகளில் பாடம் நடத்தும். சிந்திக்கவும் வைக்கும். அவற்றின் இலக்கிய நயமும் நமக்கெல்லாம் இன்பமூட்டும். எம்.ஜி.ஆர். நடித்த ராஜராஜன் படத்தில் அரசகுமாரனை அரசகுமாரியும் அவளது தோழியும் காதலிப்பார்கள். அரசகுமாரி போலவே அவளும் தன்னை அலங்காரம் செய்துகொள்கிறாள். அரசகுமாரனுக்கோ அரச குமாரியின்மீதுதான் விருப்பம். இதை யறிந்த அவளது தோழி இப்படிச் சொல்கிறார்: “வானம் நீலநிறமாக இருக்கிறதே என்பதற்காக கடலும் தன்னை நீலநிறமாக மாற்றிக்கொண்டது. தன்மீது வானம் வெண்மேகங்களை மிதக்க விட்டுக்கொண்டதே என்பதற்காக கடலும் தனக்குமேலே நுரைகளை மிதக்கவிட்டுக் கொண்டது. வானம் தன்மீது நட்சத்திர முத்துக்களைப் பதித்துக்கொண்டதே என்பதற்காக கடலும் தனக்குக் கீழே முத்துக்களை வைத்துக்கொண்டது. இருந்தாலும் வானம்தான் மேலே இருக்க முடியும். கடல் கீழேதான் இருக்க முடியும். புரிந்துகொண்டேன்... வருகிறேன்...” கதையின் சூழலுக்கேற்ப என்றாலும் இதில் வாழ்வின் இயல்பு, யதார்த்தத்தின் கூறு, இயற்கைக் காட்சிகளின் உவமை நயம் இவற்றோடு வர்க்கபேதமும் பளிச்சென்று வெளிப்படுகிறதல்லவா? அதுதான் வசன வேந்தன் இளங்கோவனின் பேனா அந்நாளின் தமிழ் சினிமாவில் செய்த அற்புதம்!