நாவல்களைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கிய படங்கள் அனைத்தும் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றியடைந்தவை என்பது தமிழ் சினிமா அறிந்ததுதான். இருப்பினும் அவருடைய படங்கள் அவை தழுவி எடுக்கும் புனைவுகளுக்கு முழுவதும் நியாயம் செய்தனவா என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்னும் சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் மூலம் வெற்றிமாறன் தன்னுடைய தொடர் வெற்றிகளைத் தக்கவைத்து வருகிறார். நாவல்களைத் தழுவி வெளியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அவற்றிலும் விமர்சன ரீதியாக வரவேற்கப்படும் படங்கள் அனைத்தும் வர்த்தகரீதியாக வெற்றியடைவதில்லை. ஆனால் இயக்குநர் வெற்றிமாறனின் படங்கள் இதற்கு விதிவிலக்கு. இன்று தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர இயக்குநர்களுள் வெற்றிமாறன் ஒருவரே நாவல்களைத் தழுவிய திரைப்படங்களில் தொடர்ந்து வெற்றி கண்டு வருபவர். மு.சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படமும் விடுதலை போலவே காவல்துறையின் அத்துமீறலை மையக் கருவாகக் கொண்டது. குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட விசாரணை, வர்த்தகப் போட்டியில் வென்றதுடன் பல தேசிய விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் வென்றது.
பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்ததாக சினிமா வர்த்தக வல்லுநர்கள் கூறினர். அந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது. இவற்றைப் போலவே தற்போது வெளியாகியுள்ள விடுதலை படமும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இலக்கிய வடிவில் உள்ள கதை ஒன்றை வணிக நோக்கில் வெற்றியடையக்கூடிய ஒரு படமாக உருவாக்குவதற்கு வெற்றிமாறன் மேற்கொள்ளும் மாற்றங்கள் குறித்தும் இதுபோன்ற தழுவல்கள் நம் தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பார்ப்போம். ஒரு நாவலின் கதைக்கருவை மட்டும் கொண்டு அதைப் படமாக்குவதற்கு தழுவல் முறை (Adaptation) என்று பெயர். இந்த முறை மூலம் இயக்குநருக்கு தன்னுடைய கருத்துகளையும் காட்சிகளையும் திரைக்குக் கொண்டு வரும் சுதந்திரம் கிடைக்கும். வெற்றிமாறன் பெரும்பாலும் கையாண்டு வந்துள்ளது இந்தத் தழுவல் முறையைத்தான். பல நேரங்களில் இது இயக்குநருக்கு சுதந்திரத்தைக் கொடுத்தாலும், அவர் மேற்கொள்ளும் மாற்றங்களால் நாவலின் சாராம்சமே இதுதான் என்று திரைப்பட ரசிகர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமும் உள்ளதாகக் கருதுகிறார்கள் இலக்கிய பிரியர்கள். உச்ச நட்சத்திரம் ஒருவருக்காக ஓர் இயக்குனர் மூலக்கதையை சமரசம் செய்யவேண்டியுள்ளதா என்ற விவாதம் இன்றும் உள்ளது.
அசுரன் திரைப்படம் இதற்குச் சான்றாகச் சொல்லப்படுவதுண்டு. அசுரன் திரைப்படத்தில், படம் பார்ப்பவர்களின் கவனம் முழுக்க கதாநாயகன் தனுஷ் மேல் இருக்க வேண்டும் என்பதற்காக, நாவலின் கதாநாயகனான சிதம்பரம் கதாபாத்திரம், தனுஷுடைய சிவசாமி கதாபாத்திரத்தை சார்ந்திருப்பதாகவே காட்டப்பட்டிருக்கும். முக்கியமான சில கதாபாத்திரங்கள் நீக்கப்பட்டும் இருக்கும். தானே அசுரன் திரைப்படத்தில் அத்தனை திருப்தி அடையாததாக ‘வெக்கை’ நாவலாசிரியர் பூமணி உணர்கிறார். “வெக்கை என்னும் தலைப்பே ‘சிதம்பரம்’ என்னும் சிறுவனின் வாழ்க்கையில் தீயாய் பரவும் துன்பத்தைக் குறிப்பதுதான். வெக்கை முழுக்க முழுக்க சிதம்பரத்தின் பார்வையில் பயணிக்கும் நாவல். படத்திலும் அவ்வாறே இருந்திருக்க வேண்டும். ஆனால், படத்தில் இடைவேளைக்குப் பின் வரும் கதை, என்னுடைய நாவலில் இல்லாதது. படம் முழுக்க வன்முறை நிறைந்திருந்தது. நாவல் அவ்வாறு இருக்காது,” என்று கூறுகிறார் பூமணி. வெற்றிமாறனே கூட, “வெக்கை நாவலின் ரசிகர்களுக்கு அசுரன் படம் திருப்தி அளிக்கவில்லை” என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால் விசாரணை படம் (‘லாக்கப்’ நாவலின் தழுவல்) வெளியானபோது இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழவில்லை. மாறாக, விசாரணையின் யதார்த்தமான திரைக்கதையும் லாக்கப் நாவல் பேசிய காவல்துறை அத்துமீறலை, விசாரணை காட்டமாக வெளிப்படுத்திய விதமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து ‘லாக்கப்’ நாவலாசிரியர் மு.சந்திரகுமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, “எழுத்துமொழி வேறு, சினிமா மொழி வேறு. ஒரு தழுவலில் ஓர் இயக்குநர் மேற்கொள்ளும் மாற்றங்கள்தான் அவருடைய தனித்துவத்தைக் காட்டும். சான்றாக, விசாரணை படத்தில், லாக்கப் நாவலின் கதை இடைவேளையுடன் முடிவடைகிறது. பிற்பகுதியில் வரும் கதையை வெற்றிமாறன் சமகால சம்பவங்களைக் கொண்டு எழுதினார். நம் சமூகம் பேசவேண்டிய அப்படிப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவத்தை என் நாவலின் தொடர்ச்சியாக வெளிக் கொணர்ந்தார்,” என்று கூறினார். இலக்கிய வடிவில் உள்ள கதை ஒன்றை காட்சி வடிவில் அளிக்க, ஓர் இயக்குநர் செய்யும் மாற்றங்கள் அவசியம் என்றும் அது மேலும் அக்கதையைச் செழுமைப்படுத்தும் என்றும் சந்திரகுமார் கருதுகிறார்.
இணைவது ஆரோக்கியமானது. ஆனால் இலக்கிய எழுத்தாளர்கள் சினிமாவையும் இயக்குநரையும் முன்னிறுத்தி தங்கள் படைப்பை எழுதக்கூடாது. அப்படிச் செய்தால் இலக்கியம் தன் தனித்துவத்தை இழந்துவிடும்,” என்ற கருத்தில் பூமணி, சந்திரகுமார் இருவருமே உடன்படுகிறார்கள். பிபிசி தமிழிடம் திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் இதுகுறித்துப் பேசியபோது, “தழுவப்படும் நாவலை நியாயப்படுத்துவது ஒரு படத்தின் வேலையல்ல. இரண்டையும் வெவ்வேறானவையாகப் பார்க்கும் ரசிகர்களைக் கொண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெற்றிமாறன், தான் படிக்கும் கதைகளை ஒரு உந்துதல் புள்ளியாக மட்டுமே கொண்டு தன் படைப்பை எழுதுகிறார். அந்த படங்கள், அவை தழுவப்படும் நாவலை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை,” என்று கூறினார்.
‘ஒரு நாவலை சிறந்த படமாக மாற்றுவதற்கு முக்கியம் அது கூறும் கதை அல்ல, அக்கதையில் வாழும் கதாபாத்திரங்கள்,’ என்று சொல்வார் ‘ஸ்பார்டகஸ்’, ‘தி ஷைனிங்’ போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய உலகப் புகழ் பெறற் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக். தழுவல்களில் வெற்றிமாறன் செய்யும் மாற்றங்கள் அந்த கதாபாத்திரங்களின் இலக்கை பாதிக்காத வகையில் இருப்பது அவருடைய படங்களின் பலம். நாவல்களில் வார்த்தைகளால் விவரிக்கப்படும் உணர்வுகளை, காட்சி வழியே படம் பார்க்கும் ரசிகனுக்குக் கடத்தும் நேர்த்திதான் இயக்குநர் வெற்றிமாறனின் தழுவல்கள் கண்ட மிகப்பெரிய வெற்றி. ஒரு கதையை எழுதுவதற்கான மூலக்கரு ஓர் இயக்குநருக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கக்கூடும். அது ஒரு செய்தியாகவோ, சிறுகதையாகவோ, நாவலாகவோ இருக்கலாம். அதை மேற்கோள் காட்டி இயக்குநர் தன் படைப்பைப் படைப்பது இரு துறைகளுக்குமே ஆரோக்கியமானதாக இருக்கும். மற்ற மொழி சினிமாவை போல் அல்லாது, தமிழ் சினிமாவில் இன்றும் இயக்குநரே கதை எழுத வேண்டிய சூழல் பிரதானமாக நிலவி வருகிறது. வெற்றிமாறனைப் போல் ஒரு முன்னணி இயக்குநர், முறையாக கதையாசிரியர்களுக்கு அங்கீகாரமளித்து படம் எடுப்பது, இனி வரக்கூடிய இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். தமிழ் சினிமா மேலும் புதிய கதைக்களங்களைக் காண்பதற்கும், திரையுலகின் மீது விழும் வெகுஜன மக்களின் பார்வை இலக்கியத்துறை மீது விழுவதற்கும் வெற்றிமாறனின் தழுவல்களும் பங்களித்திருப்பதுதான் அவர் கண்டுள்ள வெற்றி. அடுத்ததாக வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை கொண்டு இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம், சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.
நன்றி: பிபிசி தமிழ்