புதுதில்லி:
2021 மார்ச் மாதத்தில், இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் 2021 பிப்ரவரியில் 4.17 சதவிகிதமாக இருந்த நிலையில், 2021 மார்ச் மாதத்தில், அது 7.39 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்தை நம்பி இருக்கும் அனைத்து பொருட்களின் விளையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 3.24 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதேபோல் பருப்பு வகைகள் மீதான பணவீக்கம் 13.14 சதவிகிதமும், பழங்கள் மீதான பணவீக்கம் 16.33 சதவிகிதமும் அதிகரித்துள் ளது. பணவீக்க திடீர் உயர்வுக்கு காரணமாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 10.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.சில்லரை விலை பணவீக்கமும், கடந்த 4 மாதங்களில் இல்லாதவகையில் 5.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.நாட்டின் ஏற்றுமதி 2021 மார்ச் மாதத்தில் 60.29 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 3,445 கோடி டாலரை எட்டினாலும், 2020-21-ஆம் முழு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியானது 7.26 சதவிகிதம் பின்னடைவைக் கண்டு 29,063 கோடி டாலராக சரிந்துள்ளது.நடப்பாண்டு மார்ச்சின் வர்த்தக பற்றாக்குறையை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அது 998 கோடி டாலரிலிருந்து 1,393 கோடி டாலராக உயர்ந்துள்ளது.