புதுதில்லி:
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஏழை எளிய மக்களைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், இரு அரசு பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடவும், 3 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய ரசாயனம்- உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசியதாவது:
மத்திய ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மருந்துத்துறை 5 பொதுத்துறை மருந்து நிறுவனங்களை நிர்வகிக்கிறது. 5 பொதுத்துறை நிறுவனங்களில் 2 மருந்துநிறுவனங்களை மூடத் திட்டமிட்டுள் ளோம். இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிட், ராஜஸ்தான் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய இரு அரசு நிறுவனங்களை மூட முடிவு எடுத்துள்ளோம்.
பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவும் திட்டம்
மேலும், இந்துஸ்தான் ஆன்ட்டிபயோடிக்ஸ் லிமிட், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ், கர்நாடகா ஆன்ட்டிபயோடிக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை அரசு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிட், ராஜஸ்தான் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய இரு அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் விஆர்எஸ் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம்செய்துள்ளது. கடந்த 2019 செப்டம்பர் 9 ஆம் தேதி அமைச்சர்கள் குழு கூடி இந்த நிறுவனங்களை மூடுவது குறித்தும், பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.