business

img

எகிறும் லாபம்... வீழும் ஊதியம் நீள் கதையின் ரகசியம் என்ன?

2020- 21    நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் - ஜூலை முதல்செப்டம்பர் வரை- 3827 நிறுவனங்களின் மொத்த வருமானம் 37 சதவீதம் வளர்ந்துள்ளது எனவும் நிகர லாபமோ 470 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் ஆய்வுகள் வந்துள்ளன. கிராக்கியும் உயராத சூழலில் இந்த கணக்குகள் ஆச்சரியமாகவும், எண்களுக்குள் உள்ள இடைவெளி விளக்க இயலாததாகவும் உள்ளதே? பெரிய கதைக்குள் புதைந்துள்ள ரகசியம் என்ன?

“பெரிய கதை”இந்து பிசினஸ் லைன் (23.11.2020) “பெரிய கதை” (Big Story) கட்டுரையாளர் கீர்த்தி சனாகசெத்தி தரும் விவரங்கள் இக்கேள்வியை எழுப்புகின்றன. கோவிட் துயரங்களை பெரும் நிறுவனங்கள் எப்படி தொழிலாளர்களின் முதுகுகளில் சுமக்க விட்டு விட்டு லாபங்களை குரூரமாக சுவைக்கிறார்கள் என்பதை விளக்குகிற தகவல்கள் இவை.

வருமானம் - லாபம் கூடியதற்கும், வருமான விகித உயர்வை விட லாப விகித உயர்வு பன் மடங்கு அதிகமாக இருப்பதற்கும் என்ன காரணங்கள்?கச்சாப் பொருள், மின்சாரம் & எரிபொருள் விலைகள் முறையே 13 சதவீதம் மற்றும் 11 சதவீதம் குறைந்திருக்கிறது என்பது ஒரு காரணம். ஆனால் ஊதிய செலவினம் குறைந்திருப்பதும் முக்கியக் காரணம்.

தலை குப்புற விழுந்து
உதாரணமாக “அல்ட்ரா டெக் சிமிண்ட்” நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். அதன் EBITDA ( Earning Before Interest, Tax, Depreciation and Amortization) அதாவது வட்டி, வரிகள், தேய்மானத்திற்கு முந்தைய வருமானம் ஒரு டன்னுக்கு 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் மின்சாரம் + எரிபொருள் விலைகள் 7சதவீதம் குறைந்தது எனில் ஊழியர் செலவினம் 12 சதவீதம் குறைந்ததுமே ஆகும். அதாவது தொழிலாளர் கைகளுக்கு போக வேண்டியது போகவில்லை என்று அர்த்தம்.சில்லறை வணிகத் துறையில் இன்னும் அதிகமான அளவிற்கு ஊழியர் செலவினம் வெட்டப்பட்டுள்ளது. வி மார்ட் (V Mart ), அரவிந்த் ஃபாஷன்ஸ், ட்ரெண்ட் (Trent) ஆகிய நிறுவனங்கள் 20 சதவீதம் ஊழியர் செலவினத்தை வெட்டிச் சுருக்கியுள்ளன.இந்து பிசினஸ் லைன் கட்டுரை ஒரு  கிராஃப் ஒன்றை போட்டுள்ளது. அதில் ஊழியர் செலவுகள் ஜூன் 19 ல் இருந்து செப் 20 க்குள்ளாக தலை குப்புற விழுந்து பிறகு தலையை மட்டும் நிமிர்த்த முயற்சிப்பது போல சித்திரம் கிடைக்கிறது.

எப்படியெல்லாம் ஊழியர் செலவினம் குறைக்கப்படுகிறது? ஒர்க் ஃபிரம் ஹோம், சம்பள வெட்டு, கட்டாய சம்பளமில்லா விடுப்பு ஆகியன. இதற்கு மேலும் வழிகளைக் கண்டு பிடிக்கிறார்கள். அரசு நிறுவனமான செயில் (SAIL) இம் மாதம் 72000 ஊழியர்களுக்கு வேலை நேரத்தை குறைத்து சம்பளத்தையும் வெட்டியுள்ளது. 

நெருக்கடியிலும் கொண்டாட்டம்
இது தவிர செப்டம்பர் மாதம் நிதியமைச்சர் அறிவித்த கார்ப்பரேட் வரிச் சலுகைக்கான திட்டம். இதன் காரணமாக “வரிச் செலவினம்: வரிக்கு முந்தைய லாபம்” என்ற விகிதம் 2020 செப்டம்பரில் 24 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. இந்த விகிதம் 2019 செப்டம்பரில் 44 சதவீதம் ஆக இருந்தது.கோவிட் காலம் எனில் கூடுதல் நிறுவனங்கள் நட்டக் கணக்கு காண்பிக்கும் என்றுதானே நினைப்போம். ஆனால் செப் 2019 ல் நட்டத்தில் இருந்த 1381 நிறுவனங்களில் 460 இப்போது லாபம் காண்பிக்க ஆரம்பித்து விட்டது என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பாவிட்டால் இன்னும் லாபம்தான். இவையெல்லாம் சாதாரண நிறுவனங்கள் என்று நினைக்க வேண்டாம். ஜிண்டால் ஸ்டீல் போன்றவர்கள் இதில் உண்டு.பராசக்தி பாடல்தான் நினைவுக்கு வருகிறது.“பிணத்த கட்டியழும் போதும் தாண்டவக் கோனே, பணப் பொட்டி மீது கண் வையடா தாண்டவக் கோனே”

==க.சுவாமிநாதன்==

;