articles

img

செப்டம்பர் 15 மனிதச் சங்கிலிப் போராட்டம் ஏன்?

பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டபோது கடுமையான சாதியபாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர். ராணுவத்தில் இருந்து கூட மகர், மாங்க் சாதியினரை நீக்கினர். பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்துக்கொள்ளப்பட்ட மகர்கள் புனேவுக்கு அருகில் பீமா நதிக்கரையில் உள்ள கொரேகான் என்ற இடத்தில் 1818 ஜனவரி 1அன்று பேஷ்வா படையினரை வெற்றிகொண்டனர். அவ்வெற்றியை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று பீமா கொரேகானில் கூடி வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.

அதன் இருநூறாவது ஆண்டு கூடுகைக்குப் பிறகு இவ்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சாதாரண இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கூட வழக்குப் பதிவு செய்ய எந்த குற்ற முகாந்திரமும் இல்லாத நிலையில் கொடூரமான ‘உபா’ (UAPA) சட்டம் பதிவு செய்யப்பட்டது சந்தேகத்திற்கு இடமின்றி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே.இவர்களில் அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் 05.07.2021 அன்று சிறையிலேயே மரித்துப்போனார். அவர் பார்கின்சன் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் நிற்கவோ உணவு உண்ணவோ கழிவறைக்கு செல்லவோ கூட முடியாது. இந்த நிலையில் உணவை உறிஞ்சிக் குடிக்க உறிஞ்சு குழல் வேண்டும் என்ற அவரின் கோரிக்கை மிகத் தாமதமாகவே ஏற்கப்பட்டது.அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரும் இப்பொழுதும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியே சிறையில் இருக்கிறார்கள்.

சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் அறிவார்ந்த ஆளுமைகள், மக்களுக்காக பேசியவர்கள், எழுதியவர்கள், செயல்பாட்டாளர்கள்.இவர்கள் தங்களுக்காக மட்டுமே வாழ்ந்திருந்தால் அவர்கள் இருக்கும் இடம் வேறாக இருந்திருக்கும். இதோ மக்களுக்காக கொடுங்கோல் அரசின்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்களின் மடிக்கணினியில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய கடிதங்கள் இருந்தன என்றும் அது தான் வழக்குகளுக்கு அடிப்படை ஆதாரம் என்கிறது தேசிய புலனாய்வு முகமை (NIA). ஆனால் இது திட்டமிட்ட சதி என்பது இப்பொழுது வெளிப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் அமெரிக்க பார் கவுன்சிலின் உதவியோடு ‘‘ஆர்செனிக் கன்சல்டிங்’’ என்ற மென்பொருள் குற்றப் புலனாய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் செய்து இந்த கடிதங்கள் அனைத்தும் மடிக்கணினிகள் ஹேக் செய்யப்பட்டு அவர்களுக்கு தெரியாமலேயே  வைக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்துள்ளது. திட்டமிட்ட சதிஎன்று நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்கு பிணைகூட வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு கொடுமைப்படுத்தி வருகிறது.
சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் முக்கியமானவர்கள் என்றாலும் இந்திய மக்களோடு உணர்ச்சிப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பேத்தி ரமாவின் கணவர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என சர்வதேச ஜனநாயக தினமானசெப்டம்பர் 15 அன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம்  நடைபெறவுள்ளது.மனித உரிமைக்கான இந்த மகத்தான மனித சங்கிலியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சதி வழக்கில் சிறையில் உள்ள ஆளுமைகள்
ஆனந்த் டெல்டும்டே: பேராசிரியர், எழுத்தாளர், சமூக உரிமைப் போராளி. இவர் கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டின் முதன்மை பேராசிரியர். இவரது மனைவி ரமா, டாக்டர் அம்பேத்கரின் பேத்திஆவார். முன்னதாக பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் செயல் அலுவலராகவும், பெட்ரோநெட் இந்தியநிறுவனத்தில் நிர்வாக மேலாளராகவும் இருந்தார். முதலில் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லியில் ‘‘மார்ஜின் ஸ்பீக்’’ என்ற தலைப்பிலான பத்தியை எழுதி வந்தார். அவுட்லுக் இதழிலும் இவர் தனது பங்களிப்பை வழங்கி வந்தார். மேலும், தெகெல்கா என்ற பத்திரிகைக்காகவும், செமினார் என்ற வலைதளத்திலும் எழுதி வந்தார்.

வரவர ராவ் (வயது 81) : இவர் தெலங்கானாவின் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், மார்க்சிய விமர்சகர், பேச்சாளர், செயற்பாட்டாளர், ஆசிரியர் என பல தளங்களில் பணி செய்து கொண்டிருப்பவர்.‘விபல்வ ராச்சயிட்ல சங்கம்’ என்று அழைக்கப்படுகிற புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். 1966ல் நவீன தெலுங்கு இலக்கிய இதழான ‘சுருஜனா’ வை துவக்கியவர்.இலக்கியக் குழுவான ‘திருகுபாட்டு கவ்வலு’ (புரட்சிக் கவிஞர்கள்) என்னும் குழுவிலும் செயல்பட்டார். தனது ஹைதராபாத் வீட்டிலிருந்து பிரதமர் மோடியை கொலை செய்வதற்கு சதி செய்தார் என கைது செய்யப்பட்டார்.

சுதாபரத்வாஜ்: கான்பூர் ஐஐடி-யில் கணிதப் பட்டம், அதன்பிறகு சட்டக் கல்வி பட்டம். ஐஐடி மாணவராக இருந்தபோதே தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழல் குறித்து ஆய்வுகள் செய்தவர். வழக்கறிஞர், மனித உரிமை செயல்பாட்டாளர், தொழிற்சங்க தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) பொதுச் செயலாளர், நிலவுரிமை போராளி, ஜன் ஹித் என்ற வழக்கறிஞர்களின் அமைப்பைத் தோற்றுவித்தவர். தில்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியர், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், சத்தீசுகர் முக்தி மோர்ச்சாவில் இயங்கியவர். தலித்-ஆதிவாசிகள் உரிமை, மனித உரிமை, சுரங்க நிறுவனங்களுக்கு வன நிலங்கள் வகைமாற்றம் செய்வதை எதிர்த்தும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றுவதை எதிர்த்தும், சுற்றுச் சூழல் மற்றும் சமூகப் பொருளாதார சீரழிவை எதிர்த்தும், சிறு-குறு தொழில்நிறுவனங்களின் உரிமைகளுக்காகவும் அவர் வாதாடி வந்தார். அரசியல் சாசன உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி கைது செய்திருக்கிறது மோடி அரசு. 

கவுதம் நவ்லாகா: எக்னாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியின் ஆசிரியர். சிவில் உரிமைகள், சனநாயக மனித உரிமை ஆர்வலர் மற்றும் பத்திரிக்கையாளர். இவர், தில்லியில் மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பின் செயல்பாட்டாளர். இன்டர்நேஷனல் பீப்பிள்ஸ் அமைப்பின் மனித உரிமைகள் பிரிவின் நடத்தாளராக காஷ்மீரில் பணியாற்றியுள்ளார்.காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் பல்வேறு உண்மை கண்டறியும் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். இம்மாநிலங்களில் நடைபெற்ற அரச மீறல்களை எதிர்த்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். 

அருண் பெரைரா: கிரிமினல் வழக்கறிஞர். ‘‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் லாயர்ஸ்’’ (ஐஏபிஎல்) அமைப்பில் செயல்படுகிறார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் தலித் உரிமை செயற்பாட்டாளர் சுதிர் தவாலே கைது செய்யப்பட்டபோது எதிர்ப்பு குரல் எழுப்பினார். ‘தேஷ்பக்தி யுவ மஞ்ச்’ என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டார். தனது சிறை அனுபவத்தை மையமாக கொண்டு இவர் எழுதிய ‘‘கலர்ஸ் ஆஃப் த கேஜ்: ஏ ப்ரிசன் மேமோயர்’’ என்ற புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பீமா கொரேகான் வழக்கில் கைதானவர்களில் 5 பேரின் வழக்குகளை நடத்திக் கொண்டிருந்த அருண் பெரைரா அவ்வழக்கிலேயே பின்னர் கைது செய்யப்பட்டார்.

வெர்னோன் கன்சால்வ்ஸ்: முன்னாள் கல்லூரி பேராசியர், எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர். மும்பை பல்கலைக்கழகத்தில் படித்த இவர், அந்நகரத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளில் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சூசன் ஆப்ரஹாம் மனித உரிமை வழக்கறிஞராவார்.  பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேருக்கு சூசன் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுதிர் தாவ்லே: தலித் உரிமை செயல்பாட்டாளர், இவர் ஒரு தீவிர அம்பேத்கரியவாதி. எல்கர் பரிஷத் நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களுள் இவரும் ஒருவர். மகாராஷ்டிராவில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். கல்லூரி மாணவர் ரோஹித் வெமுலா மரணம், கௌரி லங்கேஷ்கர் படுகொலை ஆகியவற்றைக் கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியவர். ‘விரோதி’ என்னும் புரட்சிகர இதழை நடத்தினார். பின்னர் 2007ல் ‘ரிபப்ளிகன் பேன்தர்ஸ்’ சாதி ஒழிப்புக்கான இயக்கம் ஒன்றை சைத்திய பூமியில் துவக்கி செயல்படுத்தி வந்தார்.

சுரேந்திர காட்லிங்: இவர் வழக்கறிஞர். வரதட்சணை தொடர்பான பல வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். கையர்லாஞ்சி போராட்டத்தோடு தொடர்புடைய முன்னணி வழக்கறிஞர். மாவோயிஸ்ட் தொடர்பு என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தில்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். சமூக பண்பாட்டு போராட்டங்கள் பலவற்றில் பங்குபெற்றார். சட்டவிரோத மரணங்கள், காவல்துறை அத்துமீறல்கள், பொய்வழக்குகள், தலித், பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகிய வழக்குகளுக்கான வழக்கறிஞராக செயல்பட்டவர். உபா சட்டம், வன உரிமைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களில் நிபுணர். அரசியல் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் பலரின் வழக்குகளை இலவசமாக நடத்திவருகிறார். 

ரோனா வில்சன்: இவர் செயல்பாட்டாளர் / பத்திரிக்கையாளர் ஜேன்யு-வின் முன்னாள் மாணவர். அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழு ஒன்றின் உறுப்பினர். இந்தக் குழு உபா சட்டம் உள்ளிட்ட கொடும் சட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தது. அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட உதவிகளை ஏற்பாடு செய்துவந்தார். இதன் ஒரு பகுதியாக அரசியல் கைதிகள் செய்தமக்கள் பணிகள் பற்றி பொதுத்தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவது, உண்மையின் அடிப்படையில் எதிர் வாதத்தை கட்டமைப்பது போன்ற பணிகளை தைரியத்துடன் செய்து வந்தார். 

முனைவர் ஷோமா சென்: இவர் ஒரு பேராசிரியர். தனது கல்லூரிக் காலங்களில் ‘வித்யார்த்தி பிரகதிசங்கடன்’ என்னும் அமைப்பில் இருந்தார். மாணவர்பத்திரிகையான ‘கலாம்’ என்ற இதழின் ஆசிரியர். 1980 களில் மும்பையில் நடந்த தொழிலாளர்வேலைநிறுத்தப் போராட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர். ‘ஸ்த்ரீ சேத்னா’என்னும் பெண்கள் இயக்கத்தோடு தொடர்புடையவர். இந்த இயக்கம் வரதட்சணை மரணங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது. மணிப்பூரில் 2004க்குப் பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்படுவது பற்றி ஆய்வு செய்தார். பெண் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சட்ட ரீதியான பணிகளை முன்னெடுத்தார். கைதுக்கு முன்பு வரை நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைத் தலைவர். 

மகேஷ் ராவுத்: இவர் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக செயல்படுபவர். 30 வயது. சமூகப் பணிகல்வியை டாடா கல்வி நிறுவனத்தில் படித்தார். பிரதம மந்திரி ஊரக மேம்பாட்டு பெலோஷிப் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர். 2011லிருந்து காட்சிரோலி என்னும் பழங்குடிப் பகுதியில் செயல்பட்டு வந்தார். சுராஜ்கர் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்தவர். ‘‘விஸ்தபன் விரோதி ஜன் விகாஸ் அந்தோலன்’’ என்னும் அமைப்பில் மைய ஒருங்கிணைப்பாளர். இந்த அமைப்பின்மூலம் பீடி இலைகளை ஆதிவாசி மக்களே நேரிடையாக சந்தையில் விற்பதற்கான பிரச்சாரத்தை ஆதிவாசி மக்களோடு இணைந்து தீவிரமாக நடத்தினார். கைதுக்கு சில மாதங்கள் முன்பிருந்து குடல் பெருக்க நோயினால் தீவிர சிகிச்சையில் இருந்தார். 

ஜோதி ஜக்தாப்: ஜோதி ஜக்தாப் இந்துத்துவா, சாதியம், சமத்துவமின்மைக்கு எதிராக பாடல்கள் பாடுபவர். ‘கபிர் காலா மஞ்ச்’ என்கிற பண்பாட்டு அமைப்பின் உறுப்பினர். பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இளவயதினர் இவர். ‘‘பீமா கொரேகான் சௌரியா தின் பிரேர்னா அபியான்’’ என்னும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.  எம்.ஏ., சைக்காலாஜி படித்துள்ளார். தவிர பூனேவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஆற்றுப்படுத்துதல் தொடர்பான படிப்பை படித்துவருகிறார். படித்து முடித்தவுடன் மன நல கிளினீக் ஒன்றை திறக்க திட்டமிட்டிருந்தார்.

சாகர் டாட்யாராம் கோர்கே: இவர் ‘கபீர் காலா மஞ்ச்’ என்னும் பண்பாட்டு அமைப்பின் உறுப்பினர். பாடகர். 32 வயது.ரமேஷ் முரளிதர் கெய்சோர்: இவர் ‘கபீர் காலா மஞ்ச்’ என்னும் பண்பாட்டு அமைப்பின் உறுப்பினர். பாடகர். வயது 36. ஹனிபாபு: இவர் தில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர். ஆங்கிலத் துறை பேராசிரியர். இவர் இதேபல்கலைக் கழக பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கு தொடர்பாக மும்பையில் கைது செய்யப்பட்டார். இவர் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து தகவல் உரிமைச் சட்டம் மற்றும் சமூக ஒருங்கிணைப்புகள் மூலமாக கேள்விகளை எழுப்பிவந்தார். பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்காக வேலை செய்துவரும் டிபென்ஸ் குழுவில்ஹனிபாபு ஒரு உறுப்பினர்.

கட்டுரையாளர்: கே.சாமுவேல் ராஜ், பொதுச்செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

;