இந்திய நாட்டின் குடியரசு தின கொண் டாட்டங்களின் ஒரு பகுதியாக படை கள் பாசறை திரும்பும் போது இசைக்கப்படும் மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான பாடல் இந்த ஆண்டு இசைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. ஸ்காட்லாந்து கவிஞர் எழுதிய பாடல் மகாத்மாவின் பெரு விருப்பத்திற்குரியது. மகாத்மாவின் மனதுக்கு நெருக்கமான விஷயங்களை தடுத்து நிறுத்துவது சங் பரிவார் வழக்கமாக செய்து வருகிற வேலைதான். காந்தி மறைவுக்குப் பிறகு சபர்மதி ஆசிரமத்தில் அவர் எப்போதும் விரும்பிக் கேட்கும் ‘ஈஸ்வர அல்லா தேரே நாம் ‘பாடல் இசைப்பதை சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்த நிகழ்வு கள் நடந்துள்ளன.
காந்தியடிகள் எப்போதுமே அவர்களுக்கு உவப்பானவர் அல்ல
விடுதலைப் போராட்டம் நடைபெற்று வந்த நாட்களில் , தனது அமைப்பின் விரி வாக்கத்திற்கு, மத வெறுப்பு பிரச்சாரத்தை ஒரு கருவியாக சங்பரிவார் கையாண்டு வந்த நிலையில் , மக்கள் ஒற்றுமையை உருவாக்க மதநல்லிணக்கத்தை ஒரு ஆயுதமாக காந்தி பயன்படுத்தி வந்தார். இந்த இடத்தில்தான் காந்தியும், சங்பரி வார் அமைப்பும் நேரெதிராக முரண்பட்டு நின்றனர். 1925 இல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அப்போதிருந்தே வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஷாகாக்களை நடத்தி வந்தது. குறிப்பாக வட மாநிலங்க ளில் ஷாகாக்களின் எண்ணிக்கையை அதி கரிப்பதை அது தனது முக்கிய பணியாகக் கருதி செயல்பட்டு வந்தது. சிறுநகரங்களில் மத வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபடுவது,
சிறு,சிறு கலவரங்களை நடத்துவது என அவ்வமைப்பு செயலாற்றி வந்தது. ஷாகாக்களை நடத்தும் ஊழியர்களு க்கு தொடர்ச்சியான பயிற்சி முகாம்களை யும் நடத்தி வந்தது. அதன் விளைவாக 1940 - 42 காலகட்டத்தில் தான் நடத்திவந்த ஷாகாக்களின் எண்ணிக்கையை அந்த அமைப்பால் இரண்டு மடங்காக அதி கரிக்க முடிந்தது. 1945க்குள் வட மாநிலங்க ளில் நடந்த ஆர்எஸ்எஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம்களில் 10,000 சுயம் சேவக்கு களுக்கு பயிற்சி அளித்ததாக அதன் ஆவணங்கள் கூறுகின்றன. இதே கால கட்டத்தில் நாட்டில் விடுதலைப் போராட் டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. தனது அமைப்பு பலத்தை ஆர்எஸ்எஸ் தவறியும் கூட இந்திய விடுதலைப் போராட் டத்திற்கு பயன்படுத்தவில்லை.
அவர்கள் நடத்திய ஷாகாக்களிலும் , பயிற்சி முகாம்க ளிலும் கலந்து கொண்டோருக்கு விடு தலைப் போராட்ட உணர்வு ஊட்டப் படவே இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். ஆர்.எஸ்.எஸ் தனக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. தேசப்பிரி வினை தொடர்பான விவாதங்கள் முன்னு க்கு வந்த 1946-47 காலகட்டத்தில் அவ் வமைப்பு அந்த விவாதங்களை தனது மதவெறி அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது. மத வெறுப்பு பிரச்சாரங்களை வேகமாக விசிறி விட்டது. அதன் விளை வாக ஆங்காங்கே சிறுசிறு கலவரங்களை அதனால் உண்டாக்க முடிந்தது. தேசப் பிரிவினை காரணமாக வெளியேறி வந்த அகதிகளுக்கான முகாம்களில் சங்பரிவார் அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டன. அகதிகளுக்கு உதவுவதாக சொல்லிக் கொண்டு வெறுப்புப் பிரச்சாரத்தை சாதுரிய மாக முன்னெடுத்தது. பிரிவினை ஏற்படுத்தி இருந்த ரணங்களுக்கு மருந்திடுவதற்குப் பதிலாக, வலி நிவாரணியாக மதவெறி போதையை ஏற்றியது.
காந்தியின் முக்கியக் கடமையாக...
இக்காலகட்டங்களில் இரு தரப்பு மதவெறியும் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்தன. இந்த சூழலில் காந்தி அவர்கள் “இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் மதத்தின் அடிப் படையில் மக்களை இடம் மாற்றிக் கொள்ளக் கூடாது “ என்றார் . மேலும், “ இரு நாடுகளி லும் உள்ள சிறுபான்மை மக்கள் பாது காப்பாகவும், அமைதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே இருநாட்டு அரசுகளின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். வன்முறை , கலவரங்கள் ஏற்படும் இடங்களுக்கு நேரில் செல்வதும், நல்லிணக்கத்தை அங்கே மக்களிடையே உருவாக்குவதும் தனது முக்கியக் கடமை எனக் கொண்டே அவர் இயங்கினார். அந்த அடிப்படையில் 1947 செப்டம்பர் 16இல் தில்லியில் ஆர்எஸ்எஸ் நடத்தி வந்த முகாமுக்கு காந்தி சென்றார். அங்கு அவர்களிடம் பேசும் போது “ஒரு உண்மை யான இந்துவுக்கு ஒரு இஸ்லாமியரிடம் மோதுவதற்கு எதுவும் இல்லை. தீண்டாமை அகற்றப்படாவிட்டால் இந்து மதம் அழிந்து விடும்” என்றார்.
மேலும்” ஒரு தேசத்தில் ஒரு மத நம்பிக்கையாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம் “ என்றும் குறிப்பிட்டார். இந்துக்கள் அல்லாதவர்களு க்கு தங்களால் எவ்வித தீங்கும் ஏற்படாது என்று கோல்வாக்கரிடம் உறுதிமொழி பெற்றார். ஆனாலும் அந்த உறுதிமொழி யை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள் என்பதையும் அவர் அறிந்து வைத்தி ருந்தார். அன்று மாலை தில்லி கிங்ஸ்வே அருகே இருந்த அகதிகள் முகாமில் காந்தி நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் சமஸ்கிருத பாட லுக்குப் பிறகு குர்ஆனிலிருந்து வாசகங்க ளை படிக்கும் போது சிலர் கடுமையாக கூச்சல் போட்டு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறாமல் தடுத்தனர் அச்சம்பவம் அவரை வெகுவாக பாதித்தது. அடுத்த நாள் மாலை, பிரார்த்தனைக் கூட்டம் துவங்கும்போது “இன்று குரானிலிருந்து சில பாடல்கள் பாடப்படுவதுடன்தான் பிரார்த்தனை தொடங்கும். இதனை யாரே னும் ஒருவர் எதிர்த்தால் கூட கூட்டத்தை ரத்து செய்துவிடலாம்” என அறிவித்தார். அப் போது யாரும் ஆட்சேபிக்கவில்லை. அனைத்து மத பாடல்களும் பாடப்பட்டு பிரார்த்தனை நிறைவுற்றது. தனது இறுதி மூச்சு வரை சர்வசமய பிரார்த்தனை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள்ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபைக்கு கோபத்தை உருவாக்கின.
கலவர மேகங்களைக் கலைக்கும் பெருங்காற்றாய்
‘ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு’ என்ற முதுமொழிக் கேற்ப தனக்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், தேசப் பிரிவினை ஏற்படுத்தி இருந்த கலவர மேகங்களைக் கொண்டு தங்களுக்கான அறுவடையை செய்துகொள்ளலாம் என்று மண்ணை தயார் செய்து வைத்திருந்த நேரத்தில் அந்த மேகங்களைக் கலைக்கும் பெருங் காற்றாய் காந்தி இருந்தார். நவகாளியில் செய்ததைப் போலவே தில்லியிலும் அவர் செயல்பட்டார். 1948 ஜனவரி 12-ஆம் தேதி தில்லியில் கலவரங்க ளுக்கு எதிராக உண்ணாவிரதத்தைத் துவங்கினார். அதிர்ந்து போன மக்கள், பெருமளவில் திரண்டு வந்து அவரது உண் ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர். அதற்கு அவர் சில நிபந்தனைகள் விதித் தார். ‘இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும். கலவரத்தால் சிதைக்கப்பட்ட இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை அனைத்து மக்களும் இணைந்து கட்டித்தர வேண்டும். இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று உறுதி தர வேண்டும்’ என்ற அவரது நிபந்தனை களை ஏற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். இருப்பி னும் அது நடைமுறைக்கு வருவதை பார்த்து விட்டுத்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இதனை எல்லாம் கண்டு கோபமடைந்த இந்துத்துவவாதிகள் மத வெறுப்பு பிரச்சாரத்தோடு, காந்திக்கு எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதி ராக அவதூறு துண்டுப் பிரசுரங்கள் பல இடங்களில் வழங்கப்பட்டன . தங்களது அமைப்பு விரிவாக்கத்திற்கு அவர் மிகப் பெரிய தடைக்கல் என்று அவரை அப்புறப் படுத்த தலைப்பட்டனர். கோட்சே அதை செய்து முடித்தான். இந்து மகா சபையின் உறுப்பினராக இருந்த கோட்சே, ஆர்எஸ் எஸ் அமைப்புடனும் தொடர்பில் இருந்தான். அதன் பௌதீக் கார்யாவாக செயல்பட்ட தாக அவரது சகோதரர் கோபால் கோட்சே குறிப் பிடுகின்றார். அதேபோல,காந்தி படுகொலை யில் சாவர்க்கருக்கு இருந்த தொடர்பு குறித்தும் ஏராளமான தகவல்கள் உள்ளன. வழக்கில் அப்ரூவரான திகம்பர்பட்கே சாட்சியம் சாவர்க்கர் தொடர்பு குறித்து சுட்டி காட்டியது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி வேறு சான்றுகளையும், சாட்சி யங்களையும் கொண்டு உறுதிப்படுத்தப்படாத தால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
வெறுப்பூறிய மனங்களின்...
1965 இல் ஒன்றிய அரசு உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் தலைமையில் மகாத்மா காந்தியை கொலை செய்ய நடந்த சதி குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதன் விசார ணையிலும் சாவர்க்கர் தொடர்பு குறித்து ஏராளமான விவரங்கள் கிடைத்தன. ஆனால், தங்களுக்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பே இல்லை என்று திரும்பப் திரும்ப பொய் சொல்லி வருகிறார்கள். அன்று காந்தி படுகொலை யை கொண்டாடியவர்கள், இன்று கோட்சேவை கொண்டாடக்கூடிய பொது மனநிலையை உருவாக்க முயற்சிக்கி றார்கள். தேச விடுதலைப் போராட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் மக்கள் ஒற்றுமையை சிதைத்து வன்முறையை வளர்த்தவர்கள், மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்கள் இன்று எல்லோருக்கும் தேசபக்தி சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
திட்டமிட்ட மத வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் நாட்டின் மதச்சார்பின்மை அடித் தளத்தை சிதைத்திட சங்பரிவார் ஓயாமல் உழைக்கிறது. வெறுப்பு ஊறிய மனங்களை அது தயாரிக்கிறது. அந்த மனங்கள் என்ன செய்யும் என்பதை 2002 குஜராத் படு கொலைகளில் நாம் பார்த்தோம். இன்று ஆட்சி அதிகாரத்தின் துணையோடும், பல்வேறு அமைப்புகளின் துணையோ டும் தேசம் முழுவதும் வெறுப்பு அரசியல் பிரச்சாரம் நடக்கிறது. ஜனநாயக மாண்பு கள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. வெறுப்பு மனங்களை மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். நீண்ட கால இலக்கோடு மாற்று மதத்தினர் மீதான வெறுப்பரசியல் முன்னெடுக்கப்படுகிறது. மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் குறிப்பிடுவதைப் போல “இத்தா லிய பாசிசமும், ஜெர்மனிய நாஜியிசமும் கூட இவ்வளவு நீண்ட கால தயாரிப்புகளை கொண்டிருக்கவில்லை.” ஆனாலும், இவர் களை எதிர்கொள்ள மகாத்மா காந்தியின் பணிகள் எப்போதும் துணை நிற்கும். எல்லோ ருக்குமான நாடாக இந்தியாவை பாதுகாக்க, மத நல்லிணக்கம் காக்க மகாத்மா காந்தி யின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.