articles

img

பொதுத்துறை பாதுகாப்பே இந்தியாவின் எதிர்காலம்...

தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் 255 பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 169 ( 66.8%) நிறுவனங்கள் பெருமளவு லாபத்தில் இயங்கி வருகின்றன. நாட்டிற்கு இதன் மூலமாக  2019 ஆம் நிதியாண்டில் 1.74 லட்சம் கோடி ரூபாயும்,2020 ஆம் நிதியாண்டில் 1.38 லட்சம் கோடி ரூபாயும் லாபமாக கிடைத்துள்ளது. மீதிநிறுவனங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழுபத்தி ஆறு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவைக்கான அனுமதி அளிக்க மறுத்து, ஜியோ நிறுவனத்தை ஊட்டிவளர்த்த மோடி அரசால் தான் ரூ.15.5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதேபோல ஏர் இந்தியா நிறுவனத்தை நாசப்படுத்தி விட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டம் ஏற்பட அரசின் கொள்கைகளே காரணமாக உள்ளன. இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் உழைப்பவர்களின் எண்ணிக்கையில் தற்சமயம் இரண்டு லட்சம் பேர் குறைக்கப்பட்டு உள்ளனர். தற்போது போதுமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

இந்நிறுவனங்களில் அதிகபட்சமாக ஓஎன்ஜிசி நிறுவனம் அரசுக்கு தந்த பங்காதாபம் ரூ.25,300 கோடியாகும். இந்த எண்ணெய் நிறுவனத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது.  இப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 70 லட்சம் கோடி ரூபாய். இதுவரை நாட்டு மக்களின், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்ற,வளமான, செல்வச்செழிப்பான நிறுவனங்களை தனியாருக்கு கைமாற்றி அழிக்கும் வேலையை மோடி தலைமையிலான பாஜக  அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

அந்நிய முதலீடும் பங்கு விற்பனையும்
இந்தியாவில் 1991 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை அமல்படுத்திடும் நிறுவனங்களான உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நிதியம், உலக  வங்கி  ஆகியவற்றின் கட்டளைக்கு ஆளும் அரசுஅடிபணிந்தது. இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை அந்நிய முதலீட்டிற்கும்,தனியார் நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கின்ற பங்கு விற்பனையைஅரசு துவங்கியது. ஆரம்பத்தில் நஷ்டமடையும் பொதுத் துறை நிறுவனங்களை விற்பதில் துவங்கி தற்சமயம் உலகத்தின் புகழ்பெற்ற  இந்திய காப்பீட்டு நிறுவனங்களை விற்பதில் வந்து நிற்கிறது. 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோடி அரசானது கார்ப்பரேட் பெரு முதலாளிகள் சொத்துக்களை குவிப்பதற்கு முன்னின்று செயல்படுகிறது. மக்களின் சொத்துக்கான ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களையும் அந்நிய மற்றும் இந்திய பெருமுதலாளிகளின் தனி சொத்துகளாக மாற்றுகிற தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஓரு லட்சத்து ஏழுபத்தி ஐந்து ஆயிரம் கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

எல்ஐசி எனும் அட்சய பாத்திரம்
எல்.ஐ.சி துவங்கி 65 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு வருகிற  பொதுத்துறை நிறுவனம் ஆகும். மோடி அரசானது எல்ஐசியின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியல் இடுவதற்கு ஏற்ப, அதற்கான சட்டத்திருத்தத்தையும் செய்துள்ளது. தனிநபர் காப்பீடு மற்றும் குழுக்காப்பீட்டின் மூலமாக 40.62 கோடி பாலிசிகளுடன்  முப்பத்தி எட்டு லட்சம் கோடி ருபாய் சொத்து மதிப்பு உள்ளது. இந்த நிறுவனம்இருபத்தி ஆறு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை மக்கள் நலனுக்காக பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டில் ஒன்றிய அரசிற்கு லாப ஈவுத் தொகையாக 2698 கோடி ரூபாய் தந்துள்ளது.  எல்.ஐ.சி என்ற நிறுவனமே மக்களின் வரிப்பணத்தால் மக்கள் நலனுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களின் சொத்து ஆகும். மாபெரும்  நிறுவனத்தை பங்குச்சந்தையில் ஈடுபட்டிருக்கக்கூடிய  வெறும் 3 சதவிகிதத்தினருக்காக மாற்றிட நடவடிக்கை எடுப்பதுஏன்? உண்மையில் பல இந்திய முதலாளிகளும், அந்நிய நிறுவனங்களுமே பங்குகளை வாங்கத்துடிக்கிறார்கள். இதை அரசால் மறுக்கமுடியுமா?இந்நிலையில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காலத்தை “நல் வாய்ப்பாக” பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என பிரதமர் மோடி கூறினார். இவ்வாண்டுபட்ஜெட்  சமர்ப்பிக்கும் போதே ஒன்றிய நிதியமைச்சர்,பொருளாதார மீட்பு என்ற பெயரில் (யாருடைய) லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு அளிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

தேசிய பணமாக்கல் திட்டம்
இந்த பின்னணியில் தான் மிகுந்த பரபரப்புடன்‘தேசிய பணமாக்கல் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இது மக்களின் சொத்துக்களை தனியாருக்கு கைமாற்றி தந்து வருகிற ‘சீர்திருத்த’ நடவடிக்கைகளின் புதிய வடிவமேஆகும்.
G திட்டத்தின் பெயர்; தேசிய பணமாக்கல் திட்டம்G ஆறு லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலமாக வருமானத்தை ஈட்டுவது. ஓவ்வொரு பொதுத்துறையிலும்  துறைவாரியாக இலக்கு அடிப்படையில் நிறை
வேற்றப்படுகிறது.

G சாலைகள், ரயில்வே, மின்சாரம் பகிர்மானம், மின்சார உற்பத்தி, இயற்கை எரிவாயு விநியோகம்,உற்பத்தி, டெலிகாம், சேமிப்பு கிடங்குகள், சுரங்கம்,விமானங்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட், துறைமுகங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய துறைகளில்  பொதுச் சொத்துக்களை குத்தகை விடுவது.

1. திட்ட காலம் 2022-2023 முதல் 2024-25 வரையாகும். முதல் ஆண்டில் 88 ஆயிரம் கோடி ரூபாய்மதிப்புள்ள சொத்துக்களை குத்தகை விடுவது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 1.62,1.79,1.67 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குத்தகைவிடுவது.

2. இதில் ரயில்வே மற்றும் சாலைகள் மூலமாக 3.13 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும். இது மொத்த மதிப்பீட்டில் 52 % சதவீதம் ஆகும்.

3. இத்திட்டத்தின் மூலம் மேற்கொண்டு கிடைக்கின்ற  வருமானம் மூலமாக மூலதனச்  செலவுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

4. இந்த திட்டம் பொது - தனியார் கூட்டு பங்காண்மை(public private partnership) மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான முதலீடு (trust based investment) மூலமாக மேற்கொள்ளப்படும்.

5. உயர்தர பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்படுகிறதாம்.

6. மக்களின் சொத்துக்களை  தனியார் மூலமாக திறம்படபயன்படுத்தி வருமானத்தை ஈட்டுவது. அதற்கான முழு பணிகளை செய்து தருவது.

உண்மைதான் என்ன?

10.43 லட்சம் கோடி மதிப்புள்ள  தேசிய உட்கட்டமைப்பு பைப் லைன் திட்டத்தின் (தனியார்மயம்) முதல் கட்டமாக 14 சதவீதம் மதிப்புள்ள ஆறு லட்சம்கோடி திட்டமாகும் இது.

பணமாக்கல் திட்டம் மூலதன செலவினை மேற்கொள்வதற்காக பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை பயன்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டம், ஏற்கனவே  பங்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீடு போன்றவற்றிலிருந்து  எந்தவகையில் மாறுபடுகிறது என்பது உள்ளிட்டு ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.இந்தியாவில் தீவிரமாக அமலாக்கப்பட்டுள்ள கூட்டுக் களவாணி முதலாளித்துவம் என்ற வழியில் அரசுமற்றும் தனியார் கூட்டு பங்காண்மை மற்றும் புதிய கூட்டு நிறுவனங்களின் மூலமாக அமல்படுத்தப்பட திட்டமிடுகிறது.  இத்துடன் பொதுச் சொத்து மதிப்பு நிர்ணயித்தல், பயன்பாடு,மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டத்தில் மக்களின் சொத்து சுரண்டப்படும் என்பதே கடந்தகால உண்மையாகும்.புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப்போல இந்திய மக்களின் சொத்துக்களை தனியாருக்கு மிக விரைவாக தாரைவார்க்கும் மற்றொரு திட்டமே. இதைத் தடுத்து நிறுத்துவதில்தான் இந்தியாவின்  எதிர்காலம் அடங்கியுள்ளது.

கட்டுரையாளர் : எஸ்.பாலா, மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

;