articles

img

வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பற்றியவை மட்டுமென்று நினைக்கிறீர்களா? 

“மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது மத்திய அரசின் எந்தவொரு அதிகாரி அல்லது மாநில அரசின் எந்தவொரு அதிகாரி அல்லது இவர்கள் உட்பட, நல்லெண்ணத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட எந்தவொரு அதிகாரி மீதோ அல்லது இந்த சட்டத்தின் கீழான எந்தவொரு விதிகளின் அடிப்படையிலோ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு எதிராக எந்தவொரு வழக்கோ, விசாரணையோ அல்லது இதர சட்டநடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது.”
விவசாயிகளது விளை பொருட்கள்வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடுமற்றும் வாய்ப்பு உருவாக்குதல்) சட்டம்2020-ன் பிரிவு 13 இப்படித்தான் நம்மை வரவேற்கிறது. (இந்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளை பொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் என்ற கட்டமைப்பையே முற்றாக அழித்தொழிக்கும் நோக்கம் கொண்டது.)

நல்லெண்ணத்தின் அடிப்படையில்... 
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள், வெறுமனே விவசாயிகளைப் பற்றியவை மட்டும்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதர இரண்டு சட்டங்களும், மேற்கூறியதை போலவே எவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று வரையறை செய்கின்றன. ‘நல்லெண்ணத்தின் அடிப்படையில்’ மேற்கொள்ளப்பட்ட செயல் என்று கூறி, விவசாயிகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கின்றன. ‘நல்லெண்ணத்தின் அடிப்படையில்’ - என்ற பெயரில் அரசுகளோ அல்லது அதிகாரிகளோ விவசாயிகளுக்கு எதிராக நடத்துகிற எந்தவொரு குற்றத்திற்காகவும் அவர்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட முடியாது - அதுமட்டுமல்ல, (நல்லெண்ணத்தின் அடிப்படையில்) இனிமேல் செய்யப்
போகிற விவசாயிகளுக்கு எதிரான எந்தவொரு குற்றத்திற்காகவும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என்ற பாதுகாப்பினை இச்சட்டங்கள் அளிக்கின்றன. 

எந்தவொரு வழக்கிலும் நீதிமன்றங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை கோருவதற்கு கூட உங்களுக்கு அனுமதி இல்லை என்று வரையறை செய்கிறது மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 15.“இச்சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆணையத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்ட எந்தவொரு வழக்கையோ அல்லது பிரச்சனையையோ மீண்டும் ஒரு வழக்காக எடுத்து நடத்துவதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ எந்தவொரு சிவில் நீதிமன்றத்திற்கும் அதிகாரமில்லை.”சரி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள, ‘நல்லெண்ணத்தின் அடிப்படையில்’ நடவடிக்கை மேற்கொள்கிற ‘எந்தவொரு நபரும்’ சட்டத்தால் கேள்வி கேட்கப்பட முடியாது? உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன் : இன்றைக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது முழக்கங்களில் ஆவேசமாக சாடுகிற பெரும் கார்ப்பரேட் குழுமங்களின் பெயர்களை பட்டியலிட முயற்சி செய்யுங்கள். மேற்படி சட்டங்கள், பெரிய - மிகப் பெரிய - மிக மிக பெரிய கார்ப்பரேட் வர்த்தகப் பெரும் புள்ளிகளுக்கு - அவர்களது வர்த்தகத்தை எளிதாக நடத்துவதற்காக கொண்டு வரப்பட்டவை. 

எவரும் கேள்வி கேட்கக்கூடாது; முடியாது
“எந்தவொரு வழக்கோ, விசாரணையோ அல்லது சட்ட நடைமுறைகளோ மேற்கொள்ளப்படக்கூடாது...” - இந்த வார்த்தைகளை நன்றாக கவனியுங்கள். ஏதோ, விவசாயிகள் வழக்கு போடக்கூடாது என்று மட்டும் இல்லை. யாரும் வழக்கு போடக்கூடாது. எவரும் கேள்வி கேட்கக் கூடாது. இது பொதுநல வழக்குகளுக்கும் கூட பொருந்தும். லாபநோக்கு இல்லாத எந்தவொரு அமைப்போ அல்லது விவசாயிகள் சங்கங்களோ அல்லதுஎந்தவொரு குடிமக்களோ (அவர் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும் சரி, உள் நோக்கம்கொண்டிருந்தாலும் சரி) எவரும் தலையிடக்கூடாது என்பதுதான். இந்த சட்டங்கள், 1975 - 77 காலத்தில் (அனைத்து அடிப்படை உரிமைகளும் ஒரே உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த) அவசர நிலை காலத்திற்கு பிறகு முதல்முறையாக, சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான குடிமக்களின் உரிமையை முற்றாக துடைத்தெறிந்து விட்டுச் செல்கின்றன. ஒவ்வொரு இந்தியரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பளிச்சென்று சொல்வதானால்இந்த மூன்று சட்டங்களின் விதிகளுக்குள்பொதிந்திருக்கிற உண்மை என்னவென்றால்,கீழ் மட்டம் வரைக்கும் உள்ள அரசு நிர்வாக எந்திரத்தையே ஒரு நீதித்துறையாக மாற்றிவிடுவதுதான். உண்மையில் நீதிபதி, நீதிமன்றம், அரசு அதிகாரி என எல்லோருமே ஒருவராகி விடுவார்கள்.

ஏற்கெனவே விவசாயிகளுக்கும் மிகப் பெரிய கார்ப்பரேட் ராட்சத நிறுவனங்களுக்கும் இடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகவும் மோசடியான, மிகவும் அநீதியான பாரபட்சம் என்பது இன்னும் வலுப்பெறும். இதைத்தான் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தில்லி பார் கவுன்சில் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி பார் கவுன்சில் அனுப்பியுள்ள கடிதத்தில், “குடிமைச் சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவது தொடர்பான பிரச்சனைகள் குறித்த எந்தவொரு பொது நல வழக்கும், எப்படி நிர்வாகவிசயங்களில் ஈடுபட்டிருக்கிற, நிர்வாக அதிகாரிகளால் நடத்தப்படுகிற, நிர்வாக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று இந்த சட்டங்கள் வரையறை செய்கின்றன?” என கேள்வி எழுப்பியிருக்கிறது.

நீதித்துறை அதிகாரங்கள் நிர்வாக எந்திரத்துக்கு
(நிர்வாக அதிகாரிகள் என்பதை கோட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் என்றுவாசியுங்கள் - ஒவ்வொரு இந்தியரும் அறிவார்கள், இந்த அதிகாரிகள் எப்படியெல்லாம் இந்த நாட்டில் ‘நல்லெண்ணத்தின்படியும்’, ‘நல்ல நோக்கத்தின்படியும்’ நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை.) நீதித்துறையின் அதிகாரங்களை நிர்வாக எந்திரத்திற்கு மாற்றி விடுவது என்பது “மிகவும் ஆபத்தானது; முட்டாள்தனமானது” என்றும் தில்லி பார்கவுன்சில் எச்சரிக்கிறது. சட்டத் தொழிலிலும்இது கடுமையான தாக்கங்களை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது; “இந்த விதிகள் குறிப்பாக மாவட்ட நீதிமன்றங்களை படிப்படியாக சிதைத்து அழிக்கும்; சட்ட வல்லுநர்களையும், வழக்கறிஞர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இத்துறையிலிருந்து வெளியேற்றும்.” 

இன்னும் நினைக்கிறீர்கள், இந்த வேளாண் சட்டங்கள் வெறுமனே விவசாயிகளைப் பற்றியவை மட்டும் என்று?இன்னும் கூடுதலான விவரங்கள் உள்ளன. நீதித்துறையின் அதிகாரங்களை நிர்வாக எந்திரத்திற்கு மாற்றி விடுவது என்பதுவிவசாய ஒப்பந்த சாகுபடி தொடர்பான சட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. அதாவது - விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவைகள் ஒப்பந்த சட்டம் -2020.
இந்த சட்டத்தின் பிரிவு -18, மேலே முதல்சட்டத்தில் கூறப்பட்ட அதே, “நல்லெண்ணத்தின் அடிப்படையில்” என்ற வாதத்தை முன் வைக்கிறது. பிரிவு-19 சொல்கிறது: “இந்த சட்ட விதிகளின் கீழ் அல்லது இந்தவிதிகளால் அளிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கைக்கு எதிராகவும்எந்தவொரு நீதிமன்றமோ அல்லது இதரஅதிகார அமைப்போ தவறு என்று சொல்வதையோ அல்லது விசாரணைக்கு உள்ளாக்குவதையோ அனுமதிக்க முடியாது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒரு சப் டிவிசனல் அதிகாரி (கோட்டாட்சியர்) அல்லதுமேல்முறையீட்டு அதிகாரிக்கு இந்த சட்டம்வழங்குகிறது; இந்த அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு வழக்கையோ அல்லது சட்ட நடைமுறைகளையோ நடத்தும் அதிகாரம் எந்தவொரு சிவில் நீதிமன்றத்திற்கும் இல்லை.”

நிர்மூலமாக்கும் சட்டப்பிரிவு
இப்போது நினைத்துப் பாருங்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை - 19, பேசுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், அமைதியான முறையில் கூடுவதற்கும், எங்கிருந்தும் எங்கும் செல்வதற்கும், சங்கங்கள் அல்லது யூனியன்கள் அமைப்பதற்கும் சுதந்திரமும், உரிமையும் அளித்திருக்கிறது...மேற்கண்ட வேளாண் சட்டத்தின் பிரிவு 19, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை 32ஐயும் நிர்மூலமாக்குகிறது. அட்டவணை 32 என்பது, நாட்டின் குடிமக்கள் அரசமைப்புச் சட்டப்பூர்வ தீர்வுகளைப் பெறுவதற்கான உரிமையை உத்தரவாதம் செய்திருக்கிறது. அட்டவணை 32, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புதிய வேளாண் சட்டங்களால் இந்திய ஜனநாயகத்தின் மீது ஏற்படவுள்ள பாதகமான தாக்கங்கள் குறித்து நாட்டின் ‘பிரதான’ ஊடகங்கள் எதையும் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. (பிரதான ஊடகங்கள் என்று சொல்வது முற்றிலும் விநோதமானது; ஏனென்றால் இவற்றில் வெளியாகும் செய்திகள் நாட்டின் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றி விடுகின்றன.) ஆனால், இந்த ஊடகங்கள் பொதுநலன் அல்லது ஜனநாயகம் ஆகியவற்றை விட தங்களுக்கு எப்படி லாபத்தை குவிப்பது என்பதிலேயே குறியாக உள்ளன. 

எனவே இந்த ஊடகங்கள் பிரதிபலிக்கும் முரண்பாடுகளின் நலன்களை பற்றிய மாயைகளை கைவிட்டு விடுங்கள். இந்த ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள். இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட் குழுமங்களின் பிக்பாஸ் யாரென்று கேட்டால், அதுதான் இந்த நாட்டின் மிகப் பெரும் பணக்கார மற்றும் மிக மிக பெரிய ஊடக நிறுவனத்தின் சொந்தக்காரர். தில்லியின் நுழைவாயில்களில் போராடும் விவசாயிகள் தங்களது முழக்கங்களில் சாடுகிற பெயர்களில் ஒன்று ‘அம்பானி’. நாட்டின் இதர பகுதிகளில், இன்னும் கடைக்கோடி மட்டங்களில் கூட, ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படுகிற ஊடகத்திற்கும் கார்ப்பரேட்டுகள் நடத்தும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசத்தை உணர்வதற்கு இன்னும் நீண்டகாலம் பிடிக்கும். விவசாயிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடிமக்களின் நலன்கள் கார்ப்பரேட்டுகளின் நலன்களை விட மேலானவை என்று முன்னிறுத்துவதற்கு, இந்த பிரபஞ்சத்தின் ஆள் அரவமற்ற பகுதியில் அமிழ்ந்து கிடக்கிறபிரதான ஊடகங்களால் முடியாது.

இந்த ஊடகங்கள் தங்களது செய்தித்தாள்களிலும், சேனல்களிலும் விவசாயிகளை முடிந்த அளவுக்கு இழிவுபடுத்துகின்றன. பஞ்சாபிலிருந்து மட்டும் தான் வந்திருக்கிறார்கள், பணக்கார விவசாயிகள், காலிஸ்தானிகள், ஹிப்போகிரட்டுகள், காங்கிரஸ் சதிகாரர்கள் இன்னும் பல விதங்களில்- வசைபாடுகிறார்கள். இவையெல்லாம் இந்த ஊடகங்களில் அரசியல் செய்திகளாக வந்தவண்ணம் இருக்கின்றன. 

முதலைக் கண்ணீர் வடிக்கும் ஊடகங்கள்
பெரும் ஊடகங்களின் தலையங்கங்கள், விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. இந்த அரசாங்கம் இன்னும் நன்றாக விவசாயிகள் பிரச்சனையை கையாண்டிருக்க வேண்டும் எனஎழுதுகின்றன. இவையெல்லாம் போதியவிபரங்கள் அற்ற குப்பைகளை தவிரவேறல்ல; ஆனால் இவை, விவசாயிகளுக்கும் நமது மிகப் பெரிய பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதி பிரதமரும் ஆளும் வர்க்க ஆதரவு பொருளாதார வல்லுநர்களுமாகிய அறிவுஜீவிகள் இந்த சட்டத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கு உதவக்கூடும். அவர்களுக்கு ஏற்றவாறு அந்த தலையங்கங்கள் கூறுகின்றன: ‘இந்த சட்டங்கள் முக்கியமானவை, அமலாக்க வேண்டிய அளவிற்கு அவசியமானவை.’ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு தனது தலை
யங்கத்தில், “பிரச்சனை இந்த சீர்திருத்தங்களில் இல்லை, ஆனால் அரசு இந்த வேளாண்சட்டங்களை நிறைவேற்றிய விதத்தில் இருக்கிறது; மேலும் இதை மக்களிடையே கொண்டு சேர்க்கிற தகவல் தொடர்பில் குறைபாடு இருக்கிறது” என்று இந்த மொத்த பிரச்சனையையும் இப்படி திசை திருப்பியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் ஏடு இன்னொரு கவலையும் பட்டிருக்கிறது. மேற்கண்ட மூன்று வேளாண் சட்டங்களை போல, இந்திய விவசாயத்தின் உண்மையான ஒட்டு மொத்த விளைச்சலையும் அறுவடை செய்கிற அளவிற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்வதற்கு,இப்போது இந்த பிரச்சனையை பொருத்தமில்லாத வகையில் அரசு கையாண்டதுகவலையளிக்கிறது என வருத்தப்பட்டிருக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு தனது தலையங்கத்தில், விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் நடைமுறை காலாவதியாகிவிடுமோ என்று விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள தவறானஎண்ணங்களை களைவதுதான் ஆளும் அரசாங்கங்கள் முன்னுள்ள முதன்மையான பணி என்று அறிவுரை கூறியிருக்கிறது. விவசாய வர்த்தகத்தில் தனியார் பங்கேற்பை மேம்படுத்துவதற்கு ஒரு உண்மையான முயற்சியாக மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கை அமைந்தது என்றும் இந்த சீர்திருத்தங்களை தீவிரமாகவும் வெற்றிகரமாகவும் அமலாக்குவதன் மூலமாக விவசாய வருமானம் இரட்டிப்பாகும் என்றும் எழுதியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த சீர்திருத்தங்கள் இந்திய உணவுச் சந்தையில் நடந்து கொண்டிருக்கக் கூடிய தீங்கான போக்குகளை சரி செய்யும் என்றும் கூறியிருக்கிறது. 

இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு புதிய வேளாண்சட்டங்கள் ஒரு துணிச்சலான நகர்வு என்றும், இந்த சட்டங்களின் உண்மைத்தன்மையை மாற்ற முடியாது என்பதை விவசாயிகள் அங்கீகரிக்க வேண்டுமென்றும், இதை எதிர்க்கும் விவசாயிகள் தீவிரவாத அடையாளத்துடன் இணைவதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுரை கூறியிருக்கிறது. இத்தகைய தலையங்க எழுத்தாளர்கள் தாங்கள் யாருடைய பிரதிநிதியாக இருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார்கள். தங்களுக்குசம்பளம் கொடுக்கும் கார்ப்பரேட் கனவான்களை சற்றும் கடிந்து கூறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்களில் நிலைமைஇன்னும் பரிதாபகரமாக உள்ளது. விவாதங்களில் முன் வைக்கப்படும் கேள்விகள் அரசுக்குஆதரவான வரையறைக்குள் இருந்தே எழுப்பப்படுகின்றன. அரசுக்கு ஆதரவான அறிவுஜீவிகள் அந்த வட்டத்திற்குள்ளிருந்தே பேசுகிறார்கள்.

இந்தத் தருணத்தில் செய்தது ஏன்? 
ஒருபோதும் நியாயமான கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. தொழிலாளர்சட்டங்கள் இப்படித்தான் நியாயமானவையாக சித்தரிக்கப்பட்டன. நரேந்திர மோடி கடந்த தேர்தலில் மிருகபலத்தோடு வெற்றி பெற்றிருக்கிறார். இன்னும் இரண்டு- மூன்று ஆண்டுகளுக்கு இந்த பலத்தோடுதான் இருக்கப் போகிறார்கள். அப்படியானால், இத்தனை பலம் கொண்ட பாஜக அரசு ஏன் இத்தகைய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெருந்தொற்றுக் காலம் உச்சத்தில் இருந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டது- கவனம் செலுத்த வேண்டிய ஆயிரம் பிரச்சனைகள் இருந்த நேரத்தில்...? 

காரணம் மிகத் தெளிவானது. கோவிட்-19 பரவலால் நாடே ஸ்தம்பித்திருந்த நிலையில், விவசாயிகளாலும், தொழிலாளர்களாலும் அணி திரள முடியாது; ஒரு அர்த்தமுள்ள வகையில் எதிர்ப்பை தெரிவிக்க முடியாது என்று அரசு ஒரு கணக்கு போட்டது. சுருக்கமாகச் சொன்னால், கோவிட் காலம் ஒரு சிறந்தகாலம் என எண்ணியது. அவர்களது அறிவுஜீவிகள் மூலம், ‘இது ஒரு இரண்டாவது 1991 தருணம்’ என்றும், துயரமும், வேதனையும், பதற்றமும் நிரம்பியிருக்கிற நேரத்தில் அதை பயன்படுத்திக்கொண்டு அதிதீவிரமான சீர்திருத்தங்களை உந்தித்தள்ளி அமலாக்கி விடுவதற்கான வாய்ப்பு என்றும் கணக்குப் போட்டது. பிரதான ஊடகங்களின் ஆசிரியர்கள், “ஒரு நல்ல நெருக்கடியை ஒருபோதும்வீணாக்கி விடாதீர்கள்” என்று அரசை கெஞ்சினார்கள். நிதி ஆயோக் தலைவரோ ஒரு படி மேலே போய் “அதிகபட்ச ஜனநாயகத்தை” இந்திய மக்களுக்கு அளித்துவிட்டதாக தனக்குத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டார்.

தனக்குரிமை இல்லாத பொருள் மீது இயற்றிய சட்டம்
மொத்தத்தில் இந்தச் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானவை என்ற உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை இவர்கள் மறந்து விட்டார்கள். மாநில பட்டியலில் உள்ள வேளாண்மை எனும் பிரச்சனை மீது, தனக்கு முற்றிலும் உரிமை இல்லாத ஒருபொருள் மீது மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டங்களை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான குழுவை அமைப்பதன் மூலம் விவசாயிகள் மரணமடைவதற்கு ஒருவாய்ப்பு தாருங்கள் என எழுதுகிறபிரதான ஊடகங்களின் தலையங்கங்களைப் பற்றி இன்னும் அதிகம் எழுதத் தேவையில்லை. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒரு கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள் என்றால் அது சுவாமிநாதன் அறிக்கை என்று அழைக்கப்படுகிற விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை தான். இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளித்த காங்கிரசும், பாஜகவும் அதை குழிதோண்டி புதைத்தன என்பதே உண்மை.  ஆம், இந்த சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமலாக்க வலியுறுத்தித்தான் 2018 நவம்பரில் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் கூடபோராட்டம் நடத்தினார்கள். அவர்கள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கூறினார்கள். குறைந்தபட்ச ஆதாரவிலை உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்கள். விவசாய நெருக்கடியை விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சுருக்கமாகச் சொல்வதானால், இன்றைக்கு தில்லி தர்பாருக்கு சவால் விடுத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்னவெல்லாம் கோரிக்கை வைக்கிறார்களோ அவையெல்லாம் அன்றைய போராட்டத்தில் முழங்கப்பட்டன. அன்றைய போராட்டத்தில் 22 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களிலிருந்து விவசாயிகள் குவிந்திருந்தார்கள், பஞ்சாபிலிருந்து மட்டுமல்ல.

விவசாயிகள் போராடுவது அவர்களுக்காக மட்டுமல்ல
அரசாங்கத்திடமிருந்து ஒரு குவளை தேநீர் கூட வாங்கி பருக மறுத்துவிட்ட விவசாயிகள், அச்சத்திலும், பீதியிலும் உறைந்துபோவார்கள் என்ற அரசாங்கத்தின் கணக்குகளை தவிடு பொடியாக்கிவிட்டார்கள். அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து உறுதியாக நின்றார்கள், நிற்கிறார்கள், சட்டங்களை எதிர்த்தும், தங்களது மற்றும் நமது உரிமைகளை பாதுகாப்பதற்கும். அவர்கள் மீண்டும் மீண்டும் சில விசயங்களை சொல்லி வருகிறார்கள். ஆனால்பிரதான ஊடகங்கள் என்று சொல்லப்படுபவை அவற்றை மறைக்கின்றன. உணவின் மீதான கார்ப்பரேட் கம்பெனிகளின் அதிகாரம் இந்த நாட்டிற்கு எத்தனை மிகப் பெரிய துயரத்தை கொண்டு வரப்போகிறது என்பதை அந்த விவசாயிகள் மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து வருகிற எந்தவொரு தலையங்கத்திலேனும் இது பிரதிபலிக்குமா? 

களத்தில் நிற்கும் விவசாயிகள் பலருக்கும் தெரியும், தாங்கள் போராடிக் கொண்டிருப்பது மூன்று சட்டங்களை ரத்து செய்யவைப்பது மட்டுமல்ல, தங்களது நலன் காப்பதற்கு மட்டுமல்ல, அல்லது பஞ்சாபுக்காக மட்டுமல்ல, அதையும் தாண்டி மிகப் பெரிய லட்சியத்திற்காக என்று. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே நம்மை நாம் விரும்பும் வாழ்வுக்கு திரும்பச் செய்துவிடாது - ஒருபோதும் நமது பழைய வாழ்க்கை நல்ல வாழ்வாக இருந்ததில்லை. அது ஒரு துயர் மிகுந்த விவசாய நெருக்கடி. ஆனால் இந்த போராட்டத்தில் பெறுகிற வெற்றி விவசாய நெருக்கடியில் புதிதாக எந்த துயரும் இணைவதை தடுக்கும்; அல்லது அதை கட்டுப்படுத்தும். மேலும், பிரதான ஊடகங்களைப் போல் அல்லாமல், விவசாயிகள், இந்த சட்டங்களை தகர்ப்பதன் மூலம்,சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமையை, அரிக்கப்படும் நமது உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்று இதை கருதுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இப்படி சொல்லாவிட்டாலும் - அவர்கள் நடத்துகிற போராட்டம் இந்தியாவின் ஜனநாயகத்தையும், அதன் அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கான மகத்தான போராட்டமாகும்.

===பத்திரிகையாளர் பி.சாய்நாத்===

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன் நன்றி: தி வயர் இணைய இதழ்
 

;