articles

img

நாக்பூர் நீதிமன்றத்தின் கொடிய தீர்ப்பு.....

“குழந்தையின் பிறப்புறுப்பை, ஆண்குறியை, ஆசனவாயை அல்லது மார்பகத்தை பாலியல் நோக்கத்தோடு தொட்டாலோ அல்லது தனது உடலின் அல்லது வேறு எந்தவொரு நபரின் உடலின் பிறப்புறுப்பை, ஆண்குறியை, ஆசனவாயை அல்லது மார்பகத்தை குழந்தையை தொடச் செய்தாலோ அல்லது குழந்தையின் உடலை ஊடுருவவில்லை என்றாலும் பாலியல் நோக்கத்தோடு உடலைத் தீண்டும் எந்தவொரு செயலைச் செய்யும் நபர் யாரொருவரும் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையை செய்தவர் ஆவார்” என போக்சோ சட்டத்தின் பிரிவு 7 குறிப்பிடுகிறது.  அப்படியிருக்கையில், “தோலோடு தோல் நேரடியாகப் படாதபோது” சம்பந்தப்பட்டவரை பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவராகக் கருத முடியாது என்றும்,  மேலும், இத்தகைய வழக்கு போக்சோ சட்டத்தின் பிரிவு-7ல் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் தாக்குதல் என்ற குற்றத்தின் கீழ் வராது என்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.  இத்தகைய அசாதாரணமான, பிற்போக்கான தீர்ப்பை அளித்த நீதிபதியை அழைத்து  தமது கண்டனத்தைத் தெரிவிக்க எவருக்கும் தோன்றும்.

குற்றம் சுமத்தப்பட்டவரை குற்றவாளி எனக் குறிப்பிட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்த நீதிபதி ரத்து செய்துள்ளார்.போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் வரும் குற்றத்திற்குகுறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் என்று இருப்பது விகிதாச்சாரக் கோட்பாட்டின் அடிப்படையில் மிகவும் கடுமையானது என நீதிபதி கருதியதால் வெளிப்படையாகவே இத்தகைய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. “ஒரு குற்றத்திற்கான தண்டனை அக்குற்றத்தின் தீவிரத்தின் தன்மைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதே அடிப்படை கொள்கையாகும்” என இந்த நீதிமன்ற தீர்ப்பு குறிப்பிடுகிறது.

நடந்தது என்ன?

இதுகுறித்து விவாதிப்பதற்கு முன்னர், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை முதலில் நாம் பார்ப்போம்.  2016ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியன்று, “அவளுக்கு மனநலன் இல்லாதிருந்திருக்கலாம்” என ஈவிரக்கமின்றி நீதிமன்றத்தால் வருணிக்கப்பட்ட 12 வயது சிறுமி பழம் வாங்க கடைக்குச் சென்றாள்;  அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 39 வயதான ஆண் அவளது கையைப் பிடித்து, அவளுக்குத் தான் சில பழங்களைத் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றான்.  
தனது குழந்தையை தாய் தேடத் துவங்கியபோது, குழந்தையை மேற்படி நபர் அழைத்துச் சென்றது குறித்த தகவலை பக்கத்துவீட்டார் அத் தாயிடம் தெரிவிக்கின்றனர்.  மேற்படி நபரின் வீட்டிற்குச் சென்று தாய் கேட்டபோது, குழந்தை தன்னோடு இருந்ததை அவன் மறுத்தான்.  எனினும், தாய் குழந்தையை அந்த வீட்டில் தேடினார்.  தாழிடப்பட்டிருந்த கதவொன்றை வலுக்கட்டாயமாகத் திறந்தபோது, அங்கே அழுது கொண்டிருந்த தனது மகளைக் கண்டார்.  தனது மார்பகத்தை அழுத்தியதோடு, தனது உடையைக் களைந்திட அவன் முயன்றதாக அக்குழந்தை தனது தாயிடம் கூறியது. அவள் கூச்சலிடத் துவங்கியபோது, அவளை உள்ளே வைத்து தாழிட்டு விட்டதாகவும் குழந்தை கூறியது. தீர்ப்பில் குறிப்பிட்டபடி இக்குழந்தை மாற்றுத் திறனாளி எனில், குற்றம் இன்னமும் தீவிரமான ஒன்றாகும். 

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்குவது
பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட பெண் அல்லது குழந்தையின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்காமல் குற்றமிழைத்த ஆணின் கண்ணோட்டத்திலிருந்தே குற்றத்தை பார்க்கும் மிக மோசமான, உணர்வற்ற தன்மை நமது நீதித்துறையில் காணப்படுகிறது.பாலியல் நோக்கத்துடனான செயல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது, அதுவும் குழந்தையின் மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?  1972ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் வெறும் 14 வயதே ஆன இளம் ஆதிவாசிப் பெண் காவல் நிலையத்திற்குள் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டாள்.  இது குறித்த வழக்கில், தனதுஎதிர்ப்பைக் காட்டாததாலும், எந்தவிதமான காயங்களும் அவளது உடலில் காணப்படாததாலும், அவளது இசைவுடனே உடலுறவு கொள்ளப்பட்டதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.  “உடலுறவு கொள்வது அவளுக்கு வழக்கமானஒன்று என்பதால், தன்னோடு உடலுறவு கொள்ள அவள் காவலர்களை (வேலை நேரத்தில் மதுபோதையிலிருந்த) தூண்டியிருக்கக் கூடும்” என குற்றவாளிகளை விடுவித்து உத்தரவளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாலியல் துன்புறுத்தலை விவரித்திட “ஈவ்டீசிங்” என்ற சொற்றொடர் பல பத்தாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனது சிற்றின்ப வேட்கையால், தடை செய்யப்பட்ட பழத்தை உண்ணுமாறு பெண்ணான ‘ஈவ்’, ஆணை தூண்டியதாக விவிலியம் குறிப்பிடுகிறது. எனவே, “தொந்தரவு செய்யப்படவே” அவள் பிறந்ததாகக் கருதப்படுகிறது.  

இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் பாலியல் துன்புறுத்தல் என்ற குற்றம் தற்போதும் கூட “ஓர் பெண்ணின் கண்ணியத்தின் மீதான வன்செயல்” என்றே குறிப்பிடப்படுகிறது.  இது விவிலிய மொழியின் பொருள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. ஒரு பெண் தனது உடை மற்றும் நடத்தையின் வாயிலாக “கண்ணியத்தின்” விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்;  இல்லையெனில், “அவள் அதைக் கேட்கிறாள்” எனக் கருதும் கலாச்சாரங்களுக்கு வழிவகுத்து, ஊக்குவிக்கிறது. 

குழந்தைகளின் கதி?
ஒரு பெண்ணின் உடல் சார்ந்த கண்ணியம், மற்றும் தன் உடல் மீதான அவளது உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இத்தேசத்தின் சட்டதிட்டங்கள் உருவாக்கப்படுவ தில்லை.குழந்தையைப் பொறுத்தவரை, பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களை கையாள்வதற்கான தனியான சட்டமோ அல்லது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளோ இருக்கவில்லை.  நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் குறித்த விவரங்களை குற்றம் சாட்டப்பட்ட வயது வந்த நபரின் வழக்கறிஞர்கள் கேட்கும்போது, பெரும்பாலும் தனக்கு நிகழ்ந்த அந்தபயங்கர நிகழ்வைப் பற்றி விவரிக்க இயலாத நிலையில், பயந்து போய், பெரும்பாலும் அழுது கொண்டே நீதிமன்றத்தில் பெண் குழந்தை நிற்க வேண்டியிருந்தது.  பாலியல் வன்கொடுமை நிகழ்வில் பாதிக்கப்பட்டவரை மையமாகக் கொண்டு நீதிமன்ற நடைமுறைகளை செயல்படுத்தக் கூடிய வகையில் சட்டங்களை மாற்றியமைத்திட பாதிக்கப்பட்ட பெண்களின் மன உறுதியும்,மாதர் அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான குடிமக்களும் நிர்ப்பந்தித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த மேற்கண்ட வழக்கிற்குப் பின்னர் இத்தகைய கூட்டு முயற்சிகளே சட்டத்தில் மாற்றத்தைக்கொண்டு வந்தன.  பின்னர் மீண்டும் நிர்பயா வழக்கிற்குப் பின்னர்பாலியல் குற்றத்திலிருந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பளிப்பதற்கான தனியான சட்டம் உருவாக்கப்பட்டது.

பல பத்தாண்டுகள் நீடித்த அநீதிக்குப் பின்னரே, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன உளைச்சலை அங்கீகரித்து, தற்போதைய சட்டத்தின் வரம்புகளுக்குள் அதனை பிரதிபலிக்கச் செய்ய முடிந்தது. தற்போதுள்ள சட்ட வரம்புகளே மிகச் சிறந்தவையா எனில் இல்லை என்பதே அற்கான பதிலாகும். தற்போது சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள தண்டனை பொருத்தமானதா?  மரண தண்டனைக்கு எதிராக உள்ள நம்மைப் போன்றவர்கள், தண்டனை எவ்வளவு கடுமையானது என்பதல்லாது, நமது நீதிமன்ற நடைமுறையில் காணப்படாமல் உள்ள ‘குற்றவாளி தண்டிக்கப்படுவார்’ என்ற உத்தரவாதமே குற்றச் செயலைத் தடுக்க உதவும் என்று வாதிடுகிறோம்.  குற்ற அடிப்படையின் தன்மையில் நாம் வாதிடுவதில்லை.  ஏனெனில், மரண தண்டனை விதிப்பதன் மூலம் பாலியல் வன்முறை சம்பவங்கள் தடுக்கப்படுவதில்லை என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. மாறாக, தனக்கு நிகழ்த்தப்பட்ட குற்றம் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள பாதிக்கப்பட்டவர் உயிரோடு இல்லாமல் இருக்கச் செய்ய கொலை செய்யப்படவும், குற்றவாளி தண்டனையிலிருந்து பெரும்பாலும் தப்பிக்கவுமே வழி கோலுகிறது. 

நாக்பூர் நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம் என்ன?
தண்டனையின் கடுமை குறைக்கப்பட வேண்டும் என நாக்பூர் நீதிமன்றத்தீர்ப்பு பிரச்சனையை எழுப்பியுள்ளது.  அவ்வாறு தண்டனையின் கடுமையைக் குறைக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமெனில் அதற்கு தர்க்க ரீதியான விமர்சனம் இருக்கவேண்டும்.  தற்போதைய நாக்பூர் பெஞ்ச்சின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் நியாயம் அளிப்பதற்கென பணிக்கப்பட்டுள்ள நபர்களின் திறமை மற்றும் தகுதி குறித்த பெருத்த கேள்விகளை எழுப்புகின்றன.  பாலியல் நோக்கத்தோடு, அணிந்திருக்கும் ஆடைக்குள் கைவிட்டு தீண்டினால் மட்டுமே அது கடுமையான ஒன்றாக நீதிபதி ஒருவர் கருதலாம்.  ஆனால்,  கிலிபிடித்த குழந்தைக்கு இந்நிகழ்வு அவ்வாறாக இருக்காது.  அது அவளது உடல் மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறலாகும்.  அது மட்டுமின்றி, இச்சம்பவத்தில் அவளது ஆடையைக் களைந்திட குற்றவாளி முயன்றான்.  அப்படியானால் இது பாலியல் ரீதியிலான தாக்குதல் இல்லையா?  சொல்லப்போனால், இவ்வழக்கில் பாலியல் வல்லுறவுக்கு முயன்றான் என்ற குற்றம் சுமத்தப்படாததே பிழையாகும்.  மார்பகத்தைத் “தொடுவது’‘ என்றுதான் சட்டம் கூறுகிறதே தவிர “ஆடையற்ற மார்பகம்” என்றுகூறவில்லை.  அப்படியிருக்க, தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புக்கான ஆதாரத்திற்கான  இது போன்ற விளக்கவுரை எங்கிருந்து வருகிறது? 

ஏற்றுக் கொள்ளவே முடியாது
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவது சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது.  எனவே, குழந்தைக்கு பாதுகாப்பளிக்கவும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி குற்றவாளியை தண்டிக்க “மிகக் கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்க வேண்டும்” என்ற யதார்த்தத்திலிருந்து ஒருவேளை இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கலாம்.  ஒரு குழந்தையைப் பலவந்தமாகக் கடத்துவது, அவளை அறையில் அடைத்து வைப்பது, அவளது மார்பகத்தை அழுத்துவது, அவளது ஆடைகளை களைய முயற்சிப்பது என்பனவெல்லாம் மூன்றாண்டு தண்டனையை அளிப்பதற்கான கடுமையான குற்றங்கள் அல்ல என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது, சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்ற கோணத்திலும், குற்றத்தின் தீவிரத்தின் தன்மையின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளவே இயலாத ஒன்றாகும்.  இது ஒரு மிக மோசமான, அபாயகரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.  இவ்வழக்கு தொடர்பான சம்பவத்தில் அப்பெண்ணை பாலியல் ரீதியான வல்லுறவுக்கு உட்படுத்துவதே தெளிவான நோக்கமாக இருந்தது.  ஆனால், அக்குழந்தை அதிலிருந்து தப்பித்து விட்டது.  அப்படியிருக்கையில், பாலியல் வல்லுறவுக்கு அப்பெண் உள்ளாகவில்லை என்பதைக் காரணம் காட்டி தண்டனையின் அளவைக் குறைப்பது, தங்களது பாலியல் இச்சைக்குக் குழந்தைகளை சுலபமான இலக்காகக் கருதுபவர்களுக்கு அத்தகைய செயலைச் செய்வதற்கான அனுமதியாக அமைந்துவிடும். 

தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு கொடுமையான ஒன்றாகும்.  இதற்கு எதிரான மேல்முறையீடு நிச்சயம் செய்யப்படும்.  ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீதி கிடைக்கச் செய்வதற்கான நமது போராட்டப் பாதையில் நாம் இன்னமும் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதையே இத்தீர்ப்பு நமக்கு நினைவூட்டுகிறது. 

கட்டுரையாளர் : பிருந்தா காரத்

நன்றி – என்டிடிவி.காம்

தமிழில்: எம்.கிரிஜா

;