articles

img

தேசபக்தி கொண்ட உழவர்களும் உழவர் மீது நேசம் கொண்ட தேச பக்தர்களும்....

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மூன்றாவது நாளாக புதனன்று காத்திருப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதேபோல, நாட்டின் பல பகுதிகளிலும் ஆதரவு பேரியக்கங்கள் நடந்த வண்ணமுள்ளன. இதனொரு பகுதியாக மதுரை மாவட்டத்தில், இஸ்லாமிய மக்கள் ஒன்றுதிரண்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள். மதுரையில் புதனன்று, மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் சார்பில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் உரையின் அம்சங்கள் வருமாறு: 

பாஜக தலைவர் ஒருவர் சொல்கிறார் சீக்கியர்கள் போராட்டத்திற்கு எதற்கு இஸ்லாமியர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று. போராடுபவர்கள் சீக்கியர்கள் அல்ல,தேசபக்த உணர்வு கொண்ட உழவர்கள்; ஆதரவு தெரிவித்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல, உழவர்களை நேசிக்கும் தேசபக்தர்கள். இதுதான் இந்தியா. இந்தமகத்தான இந்தியாவை மத்திய பாஜக அரசு பிளவுபடுத்தும் வேலைகளை செய்து கொண்டே இருக்கிறது. இந்த ஒற்றுமைதான் இந்தியாவினுடைய காட்சி. இன்றைக்கு மத்திய பாஜக அரசு நடுங்கிப் போய் உள்ளது. நேற்றைக்கு அவர்கள் அறிவித்தார்கள், குளிர்கால கூட்டத்தொடர் ரத்து என்று. இது அவர்கள் ஆணவத்தால் எடுத்த முடிவு அல்ல; அச்சத்தால் எடுத்த முடிவு. அந்த முடிவை எடுக்க வைத்தது இந்தியாவில் உள்ள தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கம். 

நடுங்கிக் கிடக்கும் அரசு
உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார், தில்லி புராரி மைதானத்திற்கு விவசாயிகள் வரட்டும், நான் பேசுகிறேன் என்று. ஆனால் அந்த அதிகார மமதையை அடியோடு மாற்றினார்கள் விவசாயிகள்.21 நாட்கள் ஆகிவிட்டது இந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் துவங்கி. இந்த சட்டத்தைநிறைவேற்றுவதற்கு முன் மக்களவையில் இந்த சட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்கு 3 மணிநேரம் ஒதுக்கினார்கள். அதில் 2 மணி நேரம் இந்த சட்டத்தை ஆதரித்து ஆளும் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பேசுவதற்கே செலவழித்தார்கள். எதிர்க்கட்சிகள் விவாதிப்பதற்கு வெறும் 50 நிமிடம் கொடுத்தார்கள். பின்னர் பெரும் அமளிக்குப் பிறகு அதை ஒரு மணி நேரமாக மாற்றினார்கள். ஆனால் இன்றைக்கு 20 மணி நேரமாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து விவசாயிகள் உட்கார வைத்துள்ளார்கள் 6 சுற்று பேச்சுவார்த்தையில் மத்திய அரசை 20 மணி நேரமாக உட்கார வைத்துள்ளார்கள்.

ரூ.16 லட்சம் கோடி புழங்கும் தொழில்
இந்த நாட்டின் விவசாய சந்தையின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.16 லட்சம் கோடி. இந்த ரூ.16 லட்சம் கோடி சந்தையினை அம்பானிக்கும், அதானிக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசு தூக்கிக் கொடுக்க நினைக்கிறது. இந்த நாட்டில் 55 சதவீதம் பேர் விவசாயிகள். இந்த மூன்று சட்டங்கள் நிறைவேறினால் என்னவாகும்?நேற்று பிரதமர் மோடி குஜராத்தில் பேசியுள்ளார், இந்த சட்டம் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் சட்டமென்று. சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்கிறார் ஒரு அமைச்சர். இந்தியாவின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ சிதைத்து, ஜியோ, ரிலையன்ஸ் என அதானி, அம்பானி நிறுவனங்களை வாழவைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. இப்படி நாட்டின் ஒருபொதுத்துறை நிறுவனத்தை சிதைக்கும் வேலையை செய்து வரும் மோடி அவர்களே, ஒன்றரை கோடி விவசாயிகள் தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நாட்டின் சுமார் 500 விவசாய அமைப்புகள் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் என்பது ஆடுகள் தலைமை தாங்குவது அல்ல; சிங்கங்கள் தலைமை தாங்குவது. எனவே மத்திய அரசு இந்தப் போராட்டத்தை ஒன்றும் செய்ய முடியாது. 

கார்ப்பரேட்டுகள் எப்படி  நிவாரணம் தருவார்கள்?
மதுரை மேலூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் எரிவாயு குழாய் புதைப்பதற்கான பணிகள் எண்ணூர் துவங்கி தூத்துக்குடி வரை நடைபெற்று வருகிறது. அது விளைநிலங்கள் பகுதியில் பதிக்கப்பட்டு வருவதால் அங்கு ஆய்வை மேற்கொள்ளச் சென்றிருந்தேன். தற்போது உள்ள விளை நிலங்களுக்கு உரிய விலை என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கவில்லை. இதில் இடைத்தரகர்கள் வேறு அதிகம் உள்ளார்கள். இப்படி அரசு நிறுவனமே உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கொடுக்க முன்வராதபோது, கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க முடியும்? ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக ஒரு சிறு விவசாயி சட்டப் போராட்டத்தை நடத்திட முடியுமா? அப்படியே சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்ன தண்டனை என்று ஒரு வரி கூட இவர்கள் கொண்டு வந்துள்ள சட்டத்தில் இல்லை.

இந்த சட்டங்கள் குறித்து வேளாண்மைத் துறை இணை அமைச்சராக இருந்த சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த கவுல் பாதல், இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது; எனவே நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறி வெளியேறினார். அப்போது அவரது கணவரும் மக்களவையில் இருக்கிறார். விவாதங்கள் முடிந்தவுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே சென்று அவரிடம் ஏன் ராஜினாமா செய்தார் என்று கேட்டதற்கு இந்த சட்டத்தை ஆதரித்தால் பஞ்சாப் மாநிலத்திற்கு உள்ளேயே விவசாயிகள் எங்களை விடமாட்டார்கள் என்று கூறினார். எதிர்க்கட்சிகள், உள்ளே இந்த சட்டத்தை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கின்றோம்; அப்போது எந்த மீடியாவும் இந்த செய்தியைஒளிபரப்பவில்லை. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக அமைச்சர் ஒருவரே ராஜினாமா செய்கிறார் என்றவுடன் செய்தி ஊடகங்களின் மூலமாக வெளியாகின்றது. ஏனென்றால் இன்றைக்கு ஊடகங்கள் முழுவதும் கார்ப்பரேட் கைகளிலும் மோடி, அமித் ஷா ஆகியோர் கைகளிலும் தான். பஞ்சாப் மாநிலத்திற்கு  ஒரு ரயில் கூட செல்ல முடியவில்லை. 75 நாட்கள் ரயிலை நிறுத்தியது மட்டுமல்ல, மத்திய அரசின் உயிரை நிறுத்துவேன் என்று தில்லியில் அமர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நாட்டின் ரயில்வே துறை அமைச்சர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கிறார். போராட்டத்திற்கு உள்ளே காலிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளார்கள், பாகிஸ்தான், சீனஏஜெண்ட்கள் உள்ளார்கள், நக்சலைட்டுகள் உள்ளார்கள் என்று கூறுகிறார். இன்றைக்கு இந்தியா முழுவதும் ரயில்கள் இயங்கவில்லை, அதுகுறித்து அவர் எதுவும் பேசவில்லை. இன்றைக்கு வரை பயணிகள் ரயில் சேவைஇயக்கப்படவில்லை. ஊட்டி மலைப்பாதை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. 3000 ரூபாய் வரை கட்டணம்உயர்ந்துள்ளது. இப்படி ரயில்வே துறையை தனியாருக்கு கொடுத்தவர்கள் நாம் உண்ணும் உணவை தனியாருக்கு கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

கூட்டுக் களவாணிகள்
இதில் எதுவுமே சம்பந்தமே இல்லாதது போல், என்னுடைய நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றுஅம்பானி கூறுகிறார். கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமானது அல்ல இந்த நாடு. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சொந்தமானது இந்த நாடு என்று உழவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கு எல்லையில் சுமார் 18 கிலோ மீட்டருக்கு தற்போது டென்ட் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு விவசாயினுடைய குழந்தை ஆன்லைனில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் ஊடகங்கள் எல்லாம் இவைகளை மறைக்கின்றன. ஊடகங்கள் என்னதான் மறைத்தாலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஒரு வீரன் இன்றைக்கு அந்த விவசாயிக்கு உட்கார்ந்து காலை அமுக்கிக் கொண்டு இருக்கின்றான்; அந்த ஒருபடம் போதும். ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் என்று வடமாநிலத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் தில்லியை நோக்கி செல்கிறார்கள். அதேபோல் தென் பகுதியிலே டெல்டா பகுதிகளில் உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம் என்று தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மோசமான சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது; ஓயாது. 

படக்குறிப்பு : மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் தலைவர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், பகுதிக் குழுச் செயலாளர் ஜெ.லெனின், மதிமுக மாவட்டச் செயலாளர் மு.பூமிநாதன், மகபூப்ஜான், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், மாவட்டச் செயலாளர் பா.கதிரவன், எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

==சு.வெங்கடேசன் எம்,பி,==

மதுரை தொகுதி எம்.பி., (மார்க்சிஸ்ட்) 

;