articles

img

ஆசியாவின் இரு வேறு உதாரணங்கள்....

சீன அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் - சைனா யூனிகாம், சைனா டெலிகாம் இரண்டும் 5ஜி தொழில்நுட்ப மூலதன செலவுகளைக் குறைக்க 3 லட்சம் தொலைத்தொடர்பு தரை கோபுரங்களை கூட்டாக நிறுவி உள்ளன. வயர்லெஸ் நெட்வொர்க் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்களான இவை இரண்டும் 5ஜி தொழில்நுட்பத்தில் உலகில் முதன்மையாக விளங்குகின்றன. குறுகிய காலத்தில் 5ஜி நெட்வொர்க்கை அமைப்பதற்கான இவ்விரு நிறுவனங்களின் கூட்டு 5ஜி கட்டுமானம் முதலீட்டு செலவில் 60 பில்லியன் யுவான்களை (8.87 பில்லியன் யு.எஸ் டாலர்கள்) சேமிக்க உதவியுள்ளது. உலகின் தொலைத்தொடர்புத் துறையில் வேறெந்த நாட்டிலும் காணமுடியாத அரசுத்துறை நிறுவனங்களின் சாதனைகள் இவை. மொபைல் போன்கள், நுகர்வோர் மின்னணுவியல் தொலைத் தொடர்பு மின்னணு கருவிகள், நெட்வொர்க்கிங் சாதனங்கள் தயாரிப்புத் துறையில் 170க்கும் மேலான நாடுகளில் தனது வணிக வேர்களை பதித்திருக்கும் சீனாவின் ஹுவாய் நிறுவனம் இன்று உலகின் முதன்மை நிறுவனமாக உள்ளது. 

தொழிலாளர்களே உரிமையாளர்கள்
தொலைத் தொடர்புத் துறையில் உலகில் மூன்றாம் இடத்தில் இருந்த ஸ்வீடனின் எரிக்சன் நிறுவனத்தை 2012ஆம் ஆண்டு இது முந்தியது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் இடத்தை 2018 ஆம் ஆண்டு ஹீவாய் கைப்பற்றியது. 2020 ஜூலை நிலவரப்படி உலகில் முதலாம் இடத்தில் இருந்த சாம்சங் நிறுவனத்தை ஹீவாய் பெற்றது. ஹீவாயின் 99 சத பங்குகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பெற்றிருப்பதால் அவர்களே அதன் உரிமையாளர்கள் என நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. அதாவது தொழிலாளர்களே உரிமையாளர்களாக இருக்கும் உலகின் ஒரே நிறுவனம் ஹீவாய் தான் என்று கூற வேண்டும். சீனாவின் பொதுத்துறை நிறுவனமான இஸட். டி.இ, தொலைத்தொடர்பு நெட்வொர்க்கிங் மின்னணு கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு மென்பொருள் தயாரிக்கும் பிரம்மாண்டமான நிறுவனமாகும். 2017 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய உலக நிறுவனங்களில் சீனாவின் ஹீவாய் 92.55 பில்லியன் டாலர் வருவாயில் முதலிடத்திலும் இஸட்.டி.இ நான்காம் இடத்திலும் உள்ளன. 1980ஆம் ஆண்டுகளில் துவக்கப்பட்ட இந்நிறுவனங்களின், குறிப்பாக, ஹீவாயின் வளர்ச்சியை கண்டு திகைத்துப்போன அமெரிக்கா, ஹீவாயின் மின்னணு பிரிவுகளில் உளவு பார்க்கும் திட்டங்களையும் சீனா வைத்துள்ளது என குற்றம் சாட்டியது. இப்பிரச்சாரங்களில் சோஷலிச எதிர்ப்புணர்வு மற்றும் சைனோபோபியா எனப்படும் சீன இனவெறுப்புணர்வையும் சீனவிற்கு எதிராக பயன்படுத்திக் கொண்டது. 5 ஜி உள்கட்டமைப்பை அமைப்பதில் ஹீவாய்நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா தடைசெய்தது. தனது நட்பு நாடுகளையும் இதைச் செய்யவேண்டும் என கட்டாயப்படுத்தியது. ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் அமெரிக்காவை பின்பற்றின. ஆனால் ஜெர்மனி உள்பட பல ஐரோப்பிய நாடுகள் நிராகரித்தன. ஹீவாய், இசட்.டி.இ. தகவல் தொடர்பு கருவிகளை அகற்றுவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நிர்வாகத்தின் துணை செயலாளர் கிரெக் கல்பாக் நிர்ப்பந்தித்தார். 

உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைய விருப்பம் தெரிவித்தபோது கடுமையான கட்டுப்பாடுகள் இன்றி சீனா இணைவதை விரும்பாத அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வந்தது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு பின்னால் 2001 நவம்பரில் சர்வதேச வர்த்தக அமைப்பில் சீனா இணைந்தது. இதன் பின்னர் சீன நிறுவனங்கள் உலகமய சந்தைக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. ஆனால் இத்திட்டங்களின் பின்புலத்தில் தனது சோசலிச கட்டுமானத்தை வலுப்படுத்தும் நோக்கம் சீனாவுக்கு உறுதியாக இருந்தது. சீனா உலக சந்தையை பயன்படுத்திக் கொண்டது. அதன் பின்னர்தான் அதன் வர்த்தகம் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்தது. 

நகைப்பிற்குரிய குற்றச்சாட்டுகள்
சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் நகைப்பிற்குரியவை. “சர்வதேச வர்த்தகஅமைப்பின் விதிகளுக்கு எதிராக ஏற்றுமதி செய்யும் தனது நிறுவனங்களுக்கு அரசு மானியங்களை வழங்குகிறது; இதன் மூலம் சர்வதேச சந்தையில் பதிவு செய்துள்ளதனது நிறுவனங்களை ஆதரிக்கிறது; நிதி அளித்து பலப்படுத்துகிற; அந்நிய நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினம் - இவையே சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானவை. சர்வதேச
வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு விரோதமாக சீனா செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை சர்வதேச பொதுக் கருத்தாக்குவதன் மூலம் சீன வர்த்தகத்தை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும், சீனா தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. சர்வதேச வர்த்தக அமைப்பு சீனாவை கட்டுப்படுத்தும் என்று பில் கிளிண்டனும் மற்றவர்களும் துவக்கத்தில் நம்பினர். ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்தது போல நடைபெறவில்லை. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி.ஓபிரையன் 24.6.2020 அன்று அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார்: “சீனாவை உலக வர்த்தக அமைப்பில் வரவேற்றோம். சோவியத் கம்யூனிசத்தின் மீதான வெற்றியின் (அமெரிக்க) அனுபவத்தால் சீனாவையும் நம்பினோம். ஆனால் இது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக மாறியுள்ளது.” அதாவது சோவியத் யூனியனில் அமெரிக்கா நிறைவேற்றிய கேவலமான சதிகளை சீனாவிலும் அரங்கேற்ற முடியவில்லை என்பதையே ராபர்ட் சி. ஓபிரையனின் பேட்டி அம்பலப்படுத்தியது. டொனால்டு டிரம்ப் 24.9.2019 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அவரது உரை முழுவதும் சீன எதிர்ப்பு பிரச்சாரமே மேலோங்கியிருந்தது. அவர் பேசும்போது உலக வர்த்தக அமைப்பில் சீனா நுழைந்த பின்னர்தான் அமெரிக்கா தனது 60,000 தொழிற்சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டது என்று குறிப்பிட்டார். 

முற்றிலும் அரசின் கைகளில்...
வான் பாதுகாப்பு மின்னணு மற்றும் போர் விமானங்கள், தொலைத்தொடர்பு நெட்வொர்க்கிங் மொபைல் போன்கள் மற்றும் இவைகளுக்கான மென்பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துக்கான மூலப் பொருட்கள் இவைதான் சர்வதேச சந்தையில் மதிப்பும் லாபத்தையும் அள்ளித் தரும் மிக முக்கியத் தொழில்கள். இவை அனைத்திலும் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. தங்களின் தத்துவார்த்த எதிரியான மக்கள் சீனத்தின் சர்வதேச சந்தை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக சீனாவின் எழுச்சி தவிர்க்க முடியாத அமெரிக்க வீழ்ச்சிக்கு வழிவகுப்பதால் தனது ஏகபோகத்தை தகர்த்து விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. 

1990 ஆம் ஆண்டுகளில் சீனாவின் இரண்டாம் தலைமுறை தகவல்தொடர்பு சந்தையில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின.ஆனால் 2020இல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அமைப்பான ஜி எஸ் எம் ஏ தனது அறிக்கையில், “5ஜி யில் தனதுநிலையை சீனா பலப்படுத்தி உள்ளது. 2020 ஆம் ஆண்டில் உலக 5ஜி இணைப்புகளின் 70 சதவீதத்தை சீனா பெற்றிருக்கும்” என்று கூறியுள்ளது. (ஆதாரம்: ஜஎஸ் எம் ஏ- தி மொபைல் எக்கானமி சைனா 2020.) ஆனால் கடந்த ஜூலை மாத இறுதியில் உலகளவில் 5 ஜி பயனர்களில் 80சதவீதத்திற்கும் அதிகமாக சீனாவில் உள்ளனர். சீனத்தில், 4,10,000 5 ஜி அடிப்படை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெட்வொர்க்கிங் அதன் மின்னணுசாதனங்கள், மொபைல் போன்கள் தான் இன்று உலகில் மிகப்பெரும் லாபகர வணிகமாக உள்ளது. இத்துறையில் உள்ள சைனா டெலிகாம், சைனா யூனிகாம், ஹீவாய், சீனா மொபைல், இஸட் டி ஜி மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக அரசு மற்றும் பொதுத்துறை மற்றும் பிற நிறுவனங்களின் பங்குகளை கொண்டுள்ள (ஹோல்டிங் கம்பெனி) - ஆனால் முடிவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களாக உள்ளன. இதுதான் அமெரிக்கா மற்றும் இதர முதலாளித்துவ சக்திகளுக்கு விழுந்த சம்மட்டி அடியாகும். 

இந்தியாவில் நடந்தது என்ன?
சீனாவின் இந்த அனுபவத்திற்கு நேரெதிராக, 1995 இல் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியா இணைந்ததை தொடர்ந்து இந்திய தொலைத் தொடர்புத்துறை, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், சுரங்கங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, மின்சாரம், வங்கிகள், பெட்ரோலியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட மிக முக்கிய அடிப்படை கட்டுமான தொழில்கள் எல்லாம் படிப்படியாக தனியார்மயமாகத் துவங்கின. 1997 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கி தனது பொறுப்பிலிருந்து மத்திய அரசு விடுவித்துக் கொண்டது. தனியார்மயமாக்கலின் அடுத்த கட்டமாக 2000 ஆண்டு பிஎஸ்என்எல் உருவாக்கப்பட்டது. 1990- 2000-ஆம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐடியா, டாட்டா இண்டி
காம், வோடோபோன், லூப் மொபைல், ஏர்டெல் போன்ற தனியார் இந்திய மற்றும் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் இறங்கின. இதே காலத்தில் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்கும் அதே வேளையில் சீன சோசலிச வளர்ச்சிக்கேற்ற அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களாக உருவாக்கிடவும் சீன தொலைத்தொடர்பு கழகம் மற்றும் சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் போன்ற அதிகார அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 5ஜி இணைப்புகளில் சீனாவின் வெற்றிக்கு அந்நாட்டு அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ஒரு முக்கிய காரணமாகும். சலுகை விலையில் சரியான அளவில் வளமையான 2.6 ஜிகாஹெர்ட்ஸ், 3.4 3.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.8 5.0 ஜிகாஹெர்ட்ஸ் உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் கற்றைகளை ஒதுக்கியதன் மூலம் சீனாவின் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் உலகில் சிறந்த முன்மாதிரியாக உள்ளது. உலகிலேயே 5ஜி தொழில் நுட்பத்தில் வினாடிக்கு 2.7 ஜிகாபைட் உச்ச வேக விகிதத்தை அடைந்தவை சீன நிறுவனங்களாகும். ஆனால் இந்தியாவில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க குறிப்பாக இந்திய பெரு முதலாளியான அம்பானிக்கு சாதகமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி தொழில்நுட்ப கட்டுமானம் திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. 

கூட்டுக் களவாணிகள்
1948ல் உருவாக்கப்பட்ட பெங்களூர் இந்திய தொலைபேசி (ஐடிஐ) நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் ஒருவர் ஆதங்கத்துடன் கூறினார்: “மத்திய அரசின் போதுமான முதலீட்டு ஆதரவு, பொருத்தமான ஐடி கொள்கை, வளர்ந்த தொழில்நுட்பங்களை திரட்ட சர்வதேச தொடர்புகளுக்கான அரசியல் ஆதரவும் அளிக்கப்பட்டிருந்தால் எங்கள் ஐடிஐ நிறுவனம் சீனாவின் ஹீவாய், இசட்.டி.இ அளவிற்கு வளர்ந்திருக்க முடியும். எங்கள் தொலைத்தொடர்பு அரசு நிறுவனங்கள் தனியார் பலிபீடத்தில் கிடத்தப்பட்ட சவலைப் பிள்ளையாகவே உள்ளது” என வேதனையுடன் கூறினார். 

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த 2007 பிப்ரவரியில் அம்பானியின் ஜியோ துவக்கப்பட்டது. மோடி இந்திய பிரதமரான 2014-லிருந்துதான் உலகில் எந்த நிறுவனமும் பெறமுடியாத அசுர வளர்ச்சியை ஜியோ பெற்றது. 2.9.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஜியோ சொக்காய் அணிந்து ஊடக கேமராக்கள் முன்பு விளம்பர மாடலாக காட்சியளித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (ட்ராய்) கறுப்பு ஆடுகள் அமர்த்தப்பட்டு ஜியோ-விற்கு ஆதரவாகவே செயல்பட வைக்கப்பட்டது. கேபிள் ஒளிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தளங்களை புறக்கணிக்கும் மேலதிக ஊடக சேவை (ஓ.டி.டி)-யின் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களான நெட்ப்ளிக்ஸ், லையன்கேட்ஸ், வூட் அமேசான், ப்ரைம்,ஹாட்ஸ்டார் போன்ற பொழுதுபோக்கு சந்தை நிறுவனங்களுடன் இணைந்து ஜியோ சாவன், ஜியோ டிவி, ஜியோ சினிமா செயலிகள் மூலமும் தரவு வணிகத்தை அமோகமாக்கிக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறையை சீர்குலைத்தும் மற்ற நிறுவனங்களை வீழ்த்தியும்இந்திய ஏகபோகமாக மாற நினைக்கும் அம்பானியின் நியாயமற்ற வர்த்தகத்திற்கு மோடி அரசு துணையாக இருந்து வருகிறது. ஜியோவின் 2019-2020 நிதியாண்டின் முழு மொத்த வருமானம் அதன் கடந்த ஆண்டைவிட 33.47 சதவீதம் உயர்ந்து 63,983 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாற்றத்திற்கான நாள் நவம்பர் 26
அனைவரின் கனவுகளை நிறைவேற்றவும், 120 கோடி இந்தியர்களுக்கு தரவு சக்தியை வழங்கவும் பிரதமரின் டிஜிட்டல் இந்தியாவிற்கும் ஜியோவை அர்ப்பணிக்க விரும்புகிறேன் என 1.9.2016 அன்று அம்பானிடாம்பீகமாக கூறினார். ‘டிஜிட்டல் சக்திமான்’ மோடி அறிவித்த டிஜிட்டல் இந்தியா உண்மையில் அம்பானிக்குத்தான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் இந்திய மாணவர்கள் நேரலை வகுப்பிற்காக வேறு வழியின்றி ஜியோ இணைப்பைத்தான் அதிகம் தேர்வு செய்தனர். இதிலும் பல்லாயிரக்கணக்கான கோடியை டேட்டா கட்டணமாக கொள்ளையடித்து ஜியோ ஆதாயமடைந்தது. ஜியோ டிவியையும் இதற்காக பயன்படுத்திக் கொண்டது. 

அதே சமயத்தில் சீனாவில் கல்வி அமைச்சகம் மற்றும் சீனா மொபைல் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய கல்வி இயங்கு தளங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் அனைத்திலும் மாணவர்களுக்காக செயல்பட்டது உள்கிராமங்களின் குடும்பங்களுக்கு பிராட்பேண்ட் வேகமேம்பாடு மற்றும் மொபைல் தரவு நிவாரண கொள்கைகளை சீனா செயல்படுத்தியது. தேவைப்படும் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளை பல நிறுவனங்கள் நன்கொடையாக அளித்தன. தவிர, முன்னணி இணைய நிறுவனங்களும் இலவச ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்தின.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதில் மிகப்பெரிய பங்களிப்பினை அளித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 

ஆசியாவின் இந்த இருவேறு உதாரணங்கள் தெளிவாக மூன்று செய்திகளை கூறுகின்றன. ஒன்று; பொதுத்துறையை நாசம் செய்து ஒரு மாபெரும் நாட்டின் உற்பத்தி கருவிகள், மூலதனம், அறிவுசார் பொதுச் சொத்து, மனித வளம் தனியார் வசமாக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு பில்லியன் மடங்குகள் வருவாயை அளிக்கும் இந்திய தொலைத் தொடர்புதுறை ஒரு முதன்மை உதாரணமாக உள்ளது. இரண்டு: அரசு மற்றும் பொதுத்துறையை வளர்த்தெடுத்து தனது கட்டுப்பாட்டில் பராமரித்தால் எப்படிப்பட்ட பலனும் சேவையும் நாட்டிற்கு கிடைக்கும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாக சீனா விளங்குகிறது.

மூன்றாவதாக: நரேந்திர மோடி ஆட்சியில் பிஎஸ்என்எல், ஐடிஐ போன்ற நிறுவனங்களை காவு கொடுத்து அம்பானியின் ஜியோவிற்கு ஆதரவாக செயல்பட்ட போலி தேச பக்தியையும் அம்பலப்படுத்துகிறது. நரேந்திர மோடி, முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மூவரின் கூட்டுக் களவாணித்தனமும் அதற்கு ஆதரவாக செயல்படும் மாநில அரசுகளும் இந்திய நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. அரசுத்துறை மற்றும் பொதுத்துறையை சீரழித்து நாட்டைஅதலபாதாளத்தில் தள்ளும் இவர்களிடமிருந்து எப்போது நாட்டிற்கு விடுதலை கிடைக்கும் என்பதே நாட்டுப்பற்றாளர்களின் கேள்வி. நவம்பர் 26 அகில இந்திய வேலை நிறுத்தம் மாற்றத்திற்கான துவக்கம் உருவாகும் நாள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக கூறுகிறது. மதவாத மூட்டத்தை எவ்வளவுதான் விசிறிவிட்டாலும் மூச்சுத்திணறும் இந்திய மக்கள் வெகுசீக்கிரம் இதை உணர்ந்து கொள்வார்கள்.

===சுஜித் அச்சுக்குட்டன்==

;