articles

img

எல்லோரும் விவசாயத்திற்கு! - பினராயி விஜயன்,கேரள முதல்வர்

விவசாயத் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் அணுகுமுறையையே ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், விவசாயத் துறையில் பொதுமக்களின் தலையீட்டை அதிகரிப்பதன் மூலம் கேரளாவில் விவசாய வளர்ச்சியையும், விவசாயிகள் நலனையும் உறுதி செய்வதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுதான் இடதுசாரிகள் முன் வைத்த மாற்று.

விவசாயத் துறையில் அனைத்து குடும்பங்க ளின் ஆக்கப்பூர்வமான பங்கேற்பை உறுதி செய்வதற்கும், கேரளாவை உணவுத் தன்னி றைவு அடையச் செய்வதற்காகவும் கேரள மாநில அர சின் புதிய முயற்சியே  ‘நாங்களும் விவசாயத்திற்கு’ (நாமும் விவசாயத்தை நோக்கி). இந்த ஆண்டு கேரளா வின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 10,000 விவ சாயக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்துவதும் விவசாயிகளின் வரு வாயை அதிகரிப்பதும்  இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். விவசாயத் தன்னிறைவு வளர்ச்சிக்கு மக்கள் தலை யீடுகள் மிகவும் முக்கியம். இதை உறுதி செய்வது இத் திட்டத்தின் மூலம் சாத்தியமாகும்.  அதற்காக  மாணவர் கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாய வல்லுநர் கள் என அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் விவசாயத்தில் தன்னிறைவு அடையும் நோக்கில் பல தலையீடுகளை மேற்கொண்டது. பதினாறு காய்கறிகளுக் கான அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் லுக்கு அதிக கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டது. கேராகிராம் (தென்னை கிராமம்), சுபிக்ச கேரளா (வள மான கேரளா) மற்றும் பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் உரு வாக்கப்பட்டு அமலாகி வருகிறது. இதனால், கடந்த இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் விவசாயப் பயிர் களின் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விவசாயிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் முன்னேற்றம் காண முடிந்தது. இதை மேலும் மேம்படுத்த ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இப்போது தொடர் முயற்சிகள் செய்துவருகிறது.

சாகுபடி நிலமான  50 ஆயிரம் ஏக்கர் தரிசுநிலம்

தரிசு நிலத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவ சாய நடவடிக்கைகளை கேரளா உருவாக்கியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் 50,000 ஏக்கர் தரிசு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்துள் ளது. 2016ல் 1.71 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் சாகு படி, தற்போது வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கிய போதும் அதிலிருந்து தப்பித்து 2.3 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. கேரளாவின் காய் கறி உற்பத்தி 2016ல் 6.28 மெட்ரிக் டன்னாக இருந்தது, இது  2021ல் 15.7 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இன்னும் 7 லட்சம் மெட்ரிக் டன் காய்கறி உற்பத்தி செய்தால், கேரளா காய்கறி தன்னிறைவு மாநிலமாக மாற முடியும். 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தென்னை வளர்ச்சி மன்றம் (நாளிகேரா விகசன கவுன்சில்) மூல மாக  உள்ளாட்சி வார்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 75 தென்னை மரக்கன்றுகளை விநியோகம் செய்து வரு கிறது. 10 ஆண்டுகளில் 2 கோடி தென்னை மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், தலா 250 ஹெக்டேர் பரப்பளவில் 335 தென்னை கிராமங்கள் (கேரா கிராமங்கள்) உருவாக் கப்பட்டுள்ளன. இது விவசாயிகளுக்கு அறிவியல்பூர்வ மான பராமரிப்பு  முறைகளை அறிந்து கொள்ளவும், நோய் தாக்கிய தென்னைகளை அகற்றி சாகுபடி செய்ய வும் உதவி செய்கிறது.

விவசாயிகள் நல நிதி வாரியம்

நாட்டிலேயே விவசாயிகளின் நலனுக்காக விவசாயி கள் நல நிதி வாரியத்தை அமைத்த முதல் மாநிலம் கேரளா. கடந்த நிதியாண்டில் பல்வேறு இயற்கைச் சீற்றங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடாக 113.64 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 1,10,677 விவசாயி களுக்கு மாநில பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து 31.79 கோடி ரூபாயும், இயற்கை பேரிடர் இழப்பீட்டுத் திட்ட நிதியிலிருந்து  67.29 கோடி ரூபாயும், பேரிடர் நிவாரண  நிதியில் இருந்து 16.92 கோடி ரூபாயும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,04,100 விவசாயி கள், மாநில பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்க ளாக சேர்ந்துள்ளனர். விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது போல் விவசாயிகளின் நலனை உறுதி செய்வதும் முக்கியம் என்பதை கேரள அரசு புரிந்து கொண்டுள்ளது இதிலி ருந்து தெரியும். விவசாயத் துறைக்கு இந்த அரசு கொடுக் கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள பட்ஜெட் டைப் பார்த்தாலே போதும். இந்த ஆண்டு வேளாண் மைத் துறைக்கான செலவுக்காக  881.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 48 கோடி ரூபாய் அதிகமாகும்.

கேரளாவில் ரப்பர் விலையை உறுதிப்படுத்த ‘விலை நிலைத்தன்மை நிதி’ ஏற்கனவே உருவாக்கப்பட்டுள் ளது. மசாலாப் பொருட்கள், ரப்பர், உணவு, காபி மற்றும் தேங்காய் போன்ற பொருட்களின் மதிப்பு கூட்டுத லுக்காக  மசாலா, ரப்பர், உணவு, காபி மற்றும் தேங்காய் பூங்காக்கள் உருவாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. விவசாய உற்பத்தியை மேலும் அதிகரிக்க மதிப்புக் கூட்டல் முக்கியமானது. விவசாயத் துறையில் இத்தகைய தீவிரமான தலையீடுகளை கேரளா அரசு செய்து வருகிறது. விவசாயத் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் அணுகுமுறையையே ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், விவசாயத் துறையில் பொதுமக்களின் தலையீட்டை அதிகரிப்பதன் மூலம் கேரளாவில் விவசாய வளர்ச்சியையும், விவசாயிகள் நலனையும் உறுதி செய்வதை  நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுதான் இடதுசாரிகள் முன் வைத்த மாற்று.

பண்ணைத் திட்டம்

விவசாயம் செய்யும் இடத்தை  அடிப்படை அலகாக கணக்கிட்டு  வளங்களை அறிவியல் பூர்வமாகப் பயன் படுத்தி, உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில்  பண்ணைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி அணுகுமுறையை மூன்று புதிய திட்டங்கள் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக மொத்தம் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர் சேத அளவு மற்றும் பூச்சி தாக்குதல் விவரங்கள் பற்றிய துல்லிய மான தகவல்களை சேகரிக்க ஸ்டார்ட்அப்கள் மூலம் ட்ரோன்களை உருவாக்கி பயன்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. நிலையான நெல் சாகுபடியின் வளர்ச்சிக்கான உள்ளீடுகளுக்கு உதவி ஹெக்டேருக்கு 550 ரூபாய் மற்றும் நெல் வயல் உரிமையாளர்களுக்கு ஒரு ஹெக் டேருக்கு 300 ரூபாய்,  ராயல்டி (Royalty) வழங்குதல் உட்பட நெல் விவசாய  மேம்பாட்டிற்காக 76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான அடிப்படை விலையை 28.20 ஆக உயர்த்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பயிர்களுக் கான காப்பீட்டுத் தொகை 30 கோடி ரூபாயாக உயர்த் தப்படுகிறது. காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க காய்கறி மற்றும் பழங்கள் ஊக்குவிப்பு கவுன்சிலுக்கான ஒதுக்கீட்டை 25 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சூழல் கடைகளின் (Echo Shops) வலையமைப்பும் உரு வாக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறி களை நுகர்வோருக்கு பாதுகாப்பாக வழங்குவ தற்காக குளிர் சங்கிலி (Cold Chain)வசதியை மேலும் வலுப்படுத்த 10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. பழங்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதி கரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு 18.92 கோடி ரூபாயும், பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் விஞ் ஞான கார்பன் சமநிலை விவசாய முறைகளுக்கு 6 கோடி ரூபாயும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையின் அறிவைப் பயன்படுத்திட..

விவசாய சேவைகள் மற்றும் விவசாயத் தொழிலா ளர் படைகளை வலுப்படுத்தி ஒற்றைச் சாளர விநியோக முறையை உருவாக்க  விவசாயத் துறையில் சுயஉத விக் குழுக்களை அமைக்க அரசு தயாராக உள்ளது. மாநிலத்தில் கல்வித்துறையை விவசாயத்துடன் இணைக்க வேண்டும். இளைய தலைமுறையினர் பெற் றுள்ள புதுமையான அறிவை விவசாயத் துறையின் நல னுக்காகப் பயன்படுத்த அரசு தெளிவான திட்டங்களை வகுத்துள்ளது. முதற்கட்டமாக, இறுதியாண்டு இயற்கை வேளாண்மை மாணவர்களுக்கும், படிப்பை முடிப்பவர்களுக்கும், மாதாந்திர ஊக்கத் தொகையாக 2,500 ரூபாய் வழங்கி ஆறுமாத நடைமுறைப் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. விவசாயத் துறையில் இதுபோன்ற பெரிய அளவி லான தலையீடுகள் தொடர்ந்தால் மட்டுமே தன்னி றைவை நோக்கி முன்னேற முடியும். அதனால்தான் விவசாயத் துறையில் இதுபோன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்திலும் இருந்து கேரளாவின் விவசாய வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்பது தெளி வாகிறது.  அந்த உறுதிப்பாட்டின்  அறிகுறிதான் விவசா யத் துறை தொடர்பான 2021 தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்.

உற்பத்தித் திறன் இலக்கு

ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் ஐந்தாண்டு களில் கேரளாவில் விவசாயிகளின் வருவாயை 50 சத வீதம் அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இதைக் கண்கா ணிக்க, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஒவ் வொரு ஆண்டும் அறிவியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட குடும்பங்களின் வருமானத்தை சேகரிக்கிறது. நெல் உற்பத்தி ஹெக்டேருக்கு 45 டன்னாக உயர்த்தப் படும். அதேபோல் விதை, உரம், நீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் அறிவியல் தலையீடுகள் மூலம் ஒவ் வொரு பயிரின் உற்பத்தித்திறன் இலக்கு நிர்ண யிக்கப்பட்டு அடையப்படும். நீர்நிலைத் திட்டங்களின் அடிப்படையில் ஆற்றுப் படுகை திட்டங்கள் வகுக்கப்படும். பயிர் காலண்டர் மற்றும் திட்டம் தயாரிக்கப்படும். அண்டை குழுக்க ளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பல பயிர் வீட்டுத்தோட்டம் ஊக்குவிக்கப்படும். விதைகள், உரங்கள் விநியோகம், சிறிய அளவிலான இயந்திரமய மாக்கல் மற்றும் தாவர பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட்டாக செய்யப்படும். நகர்ப்புற விவசாயம் ஊக்கு விக்கப்படும். குடியிருப்போர் சங்கங்களை மையமாகக் கொண்டு மொட்டை மாடி மற்றும் வீட்டு  முற்றம் விவசாயம் ஊக்குவிக்கப்படும். வீட்டுக் கழிவுகளை உரமாக்குதல் மற்றும் நகர்ப்புற விவசாயம் ஆகிய வற்றை இணைக்கவும்; குடியிருப்புகளில் கழிவுநீர் மறு சுழற்சி செய்வது போன்றவையும் காய்கறி சாகுபடிக்கு பயன்படுத்தப்படும்.

ரப்பர் உற்பத்தி

கேரளாவில் ரப்பர் உற்பத்தி முக்கிய விவசாயத் துறையாகும். இருப்பினும், சர்வதேச வர்த்தக ஒப்பந் தங்களின் பக்க விளைவுகளை இத்துறை எதிர்கொள்கி றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரப்பர் லேடெக்ஸ், ரப்பர் ஷீட் ஆகியவற்றை விவசாயப் பொ ருட்களாக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரப்பர் இறக்குமதி யை கட்டுப்படுத்தவும் தலையிட்டு வருகிறது. கோட்ட யத்தில் உள்ள நியூஸ் பிரிண்ட் தொழிற்சாலையை மாநில அரசு கையகப்படுத்தியுள்ளது. உபரி நிலத்தில் ரப்பர் பூங்கா, டயர் தொழிற்சாலை உள்ளிட்டவை அமைப் பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விவசா யிகளிடமிருந்து ரப்பர் பாலை கொள்முதல் செய்ய அமுல் மாதிரியில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும். லேடெக்ஸ் சார்ந்த தொழில்களுக்கு வட்டி மானியம் மற்றும் இலவச குத்தகை நிலம் வழங்கப்படும். இத்தகைய முயற்சிகள் அரசாங்கத்தின் தரப்பில் இருந்தாலும், விவசாயத் தன்னிறைவு ஒவ்வொரு குடி மகனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அப்போது  தான் அரசு எதிர்பார்த்த விவசாய முன்னேற்றத்தை அடைய முடியும். நமது பொருளாதாரத்தின் நிலைத்தன்மைக்கு விவசாயத் தன்னிறைவு இன்றியமையாதது என்பதை நமது அண்டை நாடுகளின் நிலைமை நமக்கு நினை வூட்டுகிறது. எனவே, விவசாயத் தன்னிறைவு அடைய வேண்டும். அதற்கு புதிய திட்டம் ஒரு முக்கியப் படியாக இருக்கும்.

(சிந்தா வார இதழில் இருந்து) 
தமிழில் : குறிஞ்சி ஜெனித்




 

;