articles

img

வாக்காளர் சேர்க்கையை கட்டணமாக்கும் தேர்தல் ஆணையம்?

நேரடி முகாம் மூலம் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தம், விண்ணப்பம் செய்தல் 2020 நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் விண்ணப்பம் செய்ய முடியாதவர்கள் இணையதளம் அல்லது ஓட்டர் ஹெல்ப்லைன் (voter helpline) மூலம் சேர்ப்பதையும் ஆணையம் நிறுத்திவிட்டது.

புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இதில் விடுபட்டவர்கள், திருத்தம் செய்ய இயலாதவர்கள், இந்த காலத்தில் இடம் மாறியவர்கள் எப்படி விண்ணப்பம் செய்வது என்று தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் சொல்லவில்லை. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் இவர்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று தெரியவில்லை. வாக்காளர் சேர்ப்பதை நீடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார் ஆகியோர் மத்திய தேர்தல் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் இதுவரை பதில் இல்லை.

இந்நிலையில் ஓட்டர் ஹெல்ப்லைன் வாக்காளர் உதவி செயலியை  மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மிக மிக கடினமாக மாற்றிவிட்டனர். குறிப்பாக ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒரு நபர் தன்னைத் தவிர தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகள், மகன் யாரையும் சேர்க்க முடியாது.ஒவ்வொருவரும் தனித்தனியாக ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு முறையும் செயலியை நீக்கம் செய்து புதியதாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இது மிக மிக கடினமான பணி. இதனால் தனியார் இணையசேவை நடத்தும் கடைக்காரரிடம் செல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

வாக்காளர் சேர்ப்பு என்பது கடந்த காலத்தில் வீடு வீடாக வந்து சேர்த்தார்கள். பிறகு முகாம் மூலம் சேர்க்கவும் இணையம் மூலம் சேர்க்கப்பட்டும் வந்துள்ளது. இப்பொழுது முகாம் என்பது வருடம் ஒருமுறையாக மாற்றப்பட்டுவிட்டது. மேலும் இணையவசதியையும் சுருக்கி விட்டது.தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்பது வாக்காளர் சேர்த்தல் திருத்தம் பணிகளை தனியார் மூலம் கட்டண முறையை உருவாக்கி லாபம் பார்க்க வேண்டும் என்பது போல் தெரிகிறது.உதாரணமாக ஆதார் பதிய செல் நம்பர் முன்பு தேவையில்லை. ஆனால் இப்பொழுது ஆதார் அட்டையுடன் கட்டாயமாக செல் நம்பர் தேவை என்று முடிவு செய்யப்பட்டது. செல் நம்பரை ஆதாருடன் பதிய கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். ஓட்டர் ஹெல்ப்லைன் மூலம் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவர், வாக்காளர்களுக்கு சேவை செய்ய  இணையவசதி இல்லாதவர்களுக்கு தனது போன் மூலம் சேர்த்தல், திருத்தம் பணிகளை செய்து கொடுக்க முடியும்.இப்படிப்பட்ட எளிய செயலியை யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கடினமாக மாற்றிவிட்டது தேர்தல் ஆணையம்.

சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்காளர் உதவி செயலியை கடினமாக மாற்றப்போகிறோம் என்பதை ஆணையம் சொல்லவில்லை. கட்சிகளின் கருத்தை கேட்டிருக்க வேண்டும். இது அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கின்ற செயலாகும். மேலும் இமெயில் மூலம் புகார் அளித்தால் பதில் இல்லை. தேர்தல் ஆணைய அதிகாரிகள் செல்போனை எடுப்பதில்லை. இது போன்ற செயல்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக வாக்காளர் உதவி செயலியை பழைய முறையில் எளிமையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் : கே.கந்தசாமி, சிபிஎம் பழனி நகரச் செயலாளர்

;