articles

img

இனாம்தார் நில விவசாய உரிமைப் போரில் செம்புரான் வயல் செங்கொடித் தியாகி

தமிழகத்தின் செங்கொடி வரலாற்றில் முதல் களப்பலி புதுக்கோட்டை திரு மயம் பகுதியில் என்பது 1967இல் வெளியான தீக்கதிர் நாளிதழில் இருக்கும் ஒரு நான்குபத்திச் செய்தி. தொழில் நுட்பம் வளர்ச்சி பெறாத காலம் என்பதால் வேறு எந்தத் தரவுகளும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக இத்தகவலை உறுதி செய்ய மூத்த தலைவர்களிடம் விசாரித்தபோதும் இனாம் விவசாயிகள் போராட்டம் நடந்தது, அதில் ஏற்பட்ட சம்பவமாக இருக்கக்கூடும் என்பதே பதிலாக இருந்தது. இந்நிலை யில் இந்த ஆண்டு வெகுஜன வசூலுக்கு மாவட்டம் முழுவதும் அனைத்துக் கிரா மங்களின் மக்களையும் சந்திக்கக் களத்தில் இறங்கினோம். திருமயம் தாலுகா, நைனாபட்டி செம்புரான்வயல் கிராமத்தில் தியாகி திருமயம் அடைக் கப்பன் குடும்பத்தைத் தோழர்கள் அடை யாளம் கண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், துரை. நாராயணன் இருவரும் துருவித்துருவி விசாரிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக விபரங் கள் வெளிவந்தன. விபரங்களைச் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் சொல்ல, உடனே தோழர்களோடு விரைந்தோம்.
இனாம் தாரர் நிலங்கள்
நாட்டு விடுதலைக்குப் பின்னர் மாகாண அரசுகள் இனாம்தார் அனுபவிக்கும் நிலங்களின் உரிமையைத் தகுதி நீக்கம் செய்து, இனாம் நிலங்களை, நிலமற்றவர்க ளுக்கு வழங்கிச் சட்டங்கள் இயற்றின. ஆனால் புதுக்கோட்டையில் மட்டும் இனாம் நிலங்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தன. பாடசாலைகள் அமைக்கக்கோவிலுக்கு விளக்கு எரிக்க , கிணறு-குளம் கோவிலுக்கு வெட்ட, பக்தர்களுக்குச் சத்திரம், அன்ன தானம் செய்ய, மண்டபங்கள் கட்ட என்று அறக்கட்டளைகளுக்குக் கொடுக்கப்பட்ட இனாம் நிலங்களிலும், விவசாயத்திற்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களிலும் வரி வசூல், குத்தகை வசூல் ஆகியவற்றிற்காக மன்னரால் மிராசுதாரர்கள் நியமிக்கப்பட்டி ருந்தனர். நிலங்கள் மேஜர் இனாம், மைனர் இனாம், ரயத்துவாரி என வகைப்படுத்தப் பட்டு வரிவசூல் நடைபெற்றுவந்தது. இனாம்தார் என்பவர்கள் இந்தி யாவை ஆட்சி செய்த மராத்தியப் பேஷ் வாக்கள், தக்காணச் சுல்தான்கள் மற்றும் பிரிட்டிஷ் இந்திய அரசுக்குச் செய்யும் ஊழி யத்திற்காக மானியமாக வழங்கப்படும் விளைநிலங்களைக் கொண்ட நிலக்கி ழார்கள் ஆவார். சுதேசச் சமஸ்தான மன் னர்களின் நம்பிக்கைக்கு உரியவர்க ளுக்கு நிலமாக அல்லது பெரும் பரிசுப் பொருளாகப் பெறுபவர்களுக்கு இனாம்தார் எனும் பட்டம் வழங்கப்பட்டது. தோழர் ஆர்.உமாநாத் 1966-களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, திருமயம், அரிமளம், அன்னவா சல், பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் மக்களுக்கான எழுச்சி மிகு போராட் டங்களை முன்னெடுத்தார். அப்போது புதுக்கோட்டை ஒன்றுபட்ட திருச்சி மாவட்ட மாக இருந்தது. நமனசமுத்திரம் பஞ் சாலை, அன்னவாசல் காவேரி மில் பகுதிகளில் செங்கொடி இயக்கம், தொழிற்சங்க இயக்கம், விவசாய அமைப்புகளைக் கிரா மங்கள் தோறும் ஏற்படுத்தி எழுச்சிமிகு அமைப்பாக நிலைநிறுத்தியிருந்தார் ஆர். உமாநாத், அதன் பிரதிபளிப்பு இப்போதும் வெளிப்படுகிறது. அப்பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க யாரைக்கேட்டாலும் கம்யூ னிஸ்ட் கட்சியையும் தோழர் உமாநாத்தையும் தெரியாதவர்கள் இல்லை எனலாம்.
மிராசுகளின் மிரட்டல்
நைனாபட்டி செம்புரான் வயலில் தியாகி அடைக்கப்பன் வீட்டுக்குத் தோழர்களோடு சென்றோம், வீட்டு வாசலில் ஒரு மூதாட்டி எங்களைக் கைகூப்பி வரவேற்றார். அவர் அடைக்கப்பனின் மனைவி ஏகாம்பாள். வயது 90. 1967இல் கட்சியின் கிளைச் செய லாளராக இருந்தவர் பெயரும் அடைக் கப்பன். அவரும், அன்று போராட்டங்க ளில் பங்கேற்ற கிளைச் செயலாளரின் தம்பி சின்னக்கருப்பனும் அங்கு வந்து விட்டனர். அவர்களிடம் பேசியபோதுதான் தியாகி அடைக்கப்பன் எப்படி இறந்தார், யார் அவரைக் கொன்றவர்கள், அதன் பிறகு என்ன நடந்தது என்ற விபரங்களை உறுதி செய்தோம். நைனாபட்டி செம்புரான் வயலில்  இனாம் நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று மிராசுகள் அப்பகுதி விவ சாயிகளை மிரட்டுகின்றனர். விவசாயம் செய்யத் தடைவிதிக்கின்றனர். அப்போது சிபிஐ(எம்), விவசாயச் சங்கம் மூலம், இனாம் நிலத்தில் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துகொண்டிருக்கும் விவசாயிகளிடம் இனாம் நிலங்களை ஒப்படைத்துப் பட்டா வழங்கவேண்டும். என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. போராட்டத்தை ஆர்.உமாநாத் முன் னெடுக்கிறார். புதுக்கோட்டையில் நடை பெற்ற போராட்டத்தில் பலர் கைது செய் யப்பட்டுத் திருச்சி சிறையில் 15 நாட்கள் வைக்கப்படுகின்றனர். விவசாயிகளை ஒன்று திரட்டுவதற்காக ஆர்.உமாநாத் தலைமையில் கிராமம் கிராமாக விவசாயி கள் சந்திப்பு நடைபெற்றதை அப்போ தைய கிளைச் செயலாளர் அடைக்கப்பன் நம்மிடம் விளக்குகிறார்.  மிராசுதாரர்கள் 1967 ஆம் ஆண்டு இனாம் நிலங்களைக் கைப்பற்ற அடி யாட்களைப் பயன்படுத்தி வேல் கம்பு களோடு இனாம் விவசாயிகளின் நிலங்க ளில் உள்ள நெற்கதிரை அறுக்க முடிவு செய்கிறார்கள். இதை அறிந்த மக்கள், நமுனசமுத்திரம் சென்று கட்சி அலுவல கத்தில் மாவட்டத் தலைவர்களிடம் முறையிடுகின்றனர். அந்தத் தகவல் உமாநாத்திடம் சொல்லப்படுகிறது. இப்பிரச்சனையை எதிர்கொள்வதற்குத் திட்டமிடப்படுகிறது. விவசாயிகள் வேல் கம்புகளோடு திரண்டு மிராசுகளின் கூலிப் படையினரை விரட்டி அடிக்கின்றனர்.
பதிலுக்குப் பதில்
இச்சம்பவத்தில் தியாகி அடைக்கப் பன், கிளைச்செயலாளர் அடைக்கப்பன், கிளைச் செயலாளர் தம்பி சின்னக்கருப் பன் ஆகியோர் முன்னிற்கின்றனர். ஆத்திர மடைந்த மிராசுதார்கள், அடியாட்களை அதிகமாக்கி எதிர்த்து வந்து இனாம் நிலங்களில் விவசாயிகளின் நெல்லை அறுத்துவிடுகின்றனர். இதையடுத்து விவ சாயிகள் மிராசுகளின் நிலங்களில் இறங்கிப் பதிலுக்கு அவர்கள் நெல்லை அறுவடை செய்துவிடுகின்றனர். பிரச்சனை உக்கிர மாகிறது. தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலம் என்பதால் இச்சம்பவங்கள் கட்சியின் தலைமைக்குத் தாமதமாகக் கிடைக்கி றது, அதற்குள் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்து விடுகின்றன.
குரல்வளை அறுத்த கொடியவர்கள் 
மிராசுகளின் அடியாட்கள் ஊருக்குள் வந்துவிடுகின்றனர். கையில் ஈட்டி, வீச்சரி வாள் போன்ற கொடும் ஆயுதங்களோடு கூடுதலான அடியாட்கள் வந்ததை அறிந்த வர்கள் இப்போது எதிர்ப்பது புத்திசாலித் தனமல்ல என்று உணர்கின்றனர். மறை வான இடத்தைத் தேடி ஒவ்வொருவராகச் செல்கின்றனர். அப்போது தியாகி அடைக்கப்பன் மிராசுதார் ஆட்களின் கண்ணில் படாமல் அருகில் இருந்த ஒரு மிகச்சிறிய குடிசை வீட்டிற்குள் சென்று மறைந்துகொள்கிறார். அடியாட்கள் வீட்டிற்குள் புகுந்து ஈட்டியை வைத்துத் துலாவுகிறார்கள் அப்போது ஆள் இருப்பதைத் தெரிந்துகொண்டு ஈட்டியால் குத்துகிறார்கள் மரணச்சத்தம் கேட்கிறது. பிறகு உள்ளே நுழைந்து குரல்வளையை அரிவாளால் அறுத்துவிட்டு ஓடிவிடு கின்றனர். இப்போது நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும் 85வயது நிறைவ டைந்த, கிளைச் செயலாளர் அடைக்கப்பன் தான், இரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அடைக்கப்பனின் உடலைத் திருமயத்திற்கு எடுத்துச் சென்ற வர். அங்குப் பிரேதபரிசோதனை செய்த  பிறகு வீட்டிற்கு எடுத்துவராமல் எரித்துவிடு கின்றனர். செய்தி கிடைக்காததால் தியாகி அடைக்கப்பன் இறுதி நிகழ்வில் தோழர் உமாநாத் பங்கேற்கமுடியவில்லை. தகவல் தெரிந்த பிறகு விரைந்து சென்று அனைவரையும் சந்தித்தார். அதன்பிறகு இனாம் விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்தும் குற்றவா ளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் பல போராட்டங்கள் நடைபெற்றன. தீனதயா ளன் என்ற சிறப்பு அதிகாரி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்றதும் இந்த வழக்கில் இரண்டு பேர் குற்றவாளிகள் என 1972இல் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தோழர் ஆர்.உமாநாத் புதுக்கோட்டை இனாம் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாகப் பேசி யதும், இனாம் விவசாயிகள் போராட்டம் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி காலத்திலி ருந்து எழுப்பப்பட்டு வந்ததும் வரலாற்று பதிவுகளாக இருக்கின்றன.
இனாம் நில விவசாய உரிமைத்தியாகி
தியாகி அடைக்கப்பன் உயிர் இனாம் விவசாயிகளுக்காகக் கொடுக்கப்பட்ட விலை. அவர் இறக்கும் போது வயது 33. மனைவி மற்றும் 3 மகன்களையும் பரி தவிக்கவிட்டுவிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். நினைவு கூர்ந்து போற்றப்பட வேண்டிய இந்தத் தியாக வரலாற்று விபரங்கள் எங்களுக்கு இப்போதுதான் முழுமையாகக் கிடைத்துள்ளது. இது புதிய வெளிச்சத்தையும் போராட்டத்தையும் எங் களை முன்னெடுக்க வைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் செங்கொடி இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்களில் முதன்மையானதாக இனாம் விவசாயிகள் போராட்டம் இருந் துள்ளது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதல் தியாகிதோழர் அடைக்கப்பன் என்ற உண்மையை அறியும் போது உடம்பு சிலிர்த்துப் போனது. தியாகி அடைக்கப்பனின் மனைவி, மகன்கள், பேரன், பேத்திகளோடு இன்று நம்மோடு இருப்பது பெருமையாக இருக்கி றது. களத்தில் இக்கோரச்சம்பவத்தை உட னிருந்து பார்த்தவரும் கிளைச் செயலாள ருமான அடைக்கப்பன் போன்ற வாழும் வரலாறுகளும், விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கத் தன் உயிரைத் தியாகம் செய்த அடைக்கப்பன்களும் தான் செங்கொடி இயக்கத்தின் இரத்தநாளங்களாகவும், இதயங்களாகவும் இயங்கிக்கொண்டி ருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தியாகி அடைக்கப்பன் என்ற வரலாற்று உண்மை யை உலகுக்குச் சொல்வோம். வீறு கொண்டெழுவோம், இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாப்போம்.


எஸ்.கவிவர்மன் 
மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்), புதுக்கோட்டை

;