articles

img

நாங்க இருக்கோம்… கவலை வேண்டாம்… உயிரை பணயம் வைக்கும் சிபிஎம் தோழர்கள்....

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் இதுவரை கண்டிராத சோதனைகளை மக்கள் சந்தித்துள்ளனர். குறிப்பாக இம்மாவட்டத்தில் 12 லட்சத்து 64ஆயிரத்து277 பேர் உள்ளனர். இதில் 6லட்சத்து 26ஆயிரத்து 693 பேர் ஆண்களும் 6லட்சத்து 37ஆயிரத்து 584 பேர் பெண்களும் ஆகும். இந்த எண்ணிக்கையில் 36ஆயிரத்து 73பேருக்கு நோய் தொற்று உள்ளது. 34ஆயிரத்து 695பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1073பேர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி இவைகளை தவிர்த்து திருவாரூர், திரு.வி.க அரசு கலை கல்லூரி, மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை கல்லூரி, வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூரை அடுத்து அம்மையப்பன் பகுதியில்  செயல்பட்டு வரும் பாரத் கல்வியியல் தனியார் கல்லூரியில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆயர்வேத இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து இன்னும் சில தனியார் மருத்துவமனைகளான திருவாரூர் மெடிகல் சென்டர், நவஜீவன் உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் அலையின் போது 15ஆயிரம் பேர் அளவிற்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கிராமங்களில் பெரும் அளவு நோய் தொற்று பாதிப்பு அப்போது இல்லை. தற்போது ஏற்பட்ட 2-ம் அலையின் போது 46ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவது போல உருமாறிய கொரோனா என்பதால் முன்புமாதிரி இல்லாமல் கிராமங்கள் தோறும் நோய் தொற்று தீவிரமாக பரவியது. முதல் அலையில் 170 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகினர். இப்போது 350க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய் தொற்றால் பலியாகியுள்ளனர். கோவாக்ஸின், கோவிசீல்டு என 1லட்சத்து 46,000த்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  எப்படி பார்த்தாலும் மாவட்டத்தில் குறைந்தது இன்னும் 6லட்சம் பேருக்காவது தடுப்பூசி போடவேண்டியிருக்கும். இந்த சூழ்நிலையில் 3-வது அலை வரும் பட்சத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கான முன்கூட்டிய ஏற்பாடு என்பது மிக அவசியமாகும். 

களத்தில் கம்யூனிஸ்ட்டுகள்
முதல் அலை பாதிப்பின் போதும் இப்போதைய பாதிப்பின் போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சீரிய பணியில்  முனைப்புக் காட்டியதோடு இப்போதும் அந்த பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மையத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுவதற்காக எம். சேகர், பி. கந்தசாமி, கே.ஜி ரகுராமன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு வழிகாட்டு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகின்றனர். திருவாரூரை மையமாக வைத்து திருவாரூர் ஒன்றிய நகரம் நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி ஒன்றிய நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்  ஜி.சுந்தரமூர்த்தி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டி வருகிறார்.

திருத்துறைப்பூண்டி மையத்தில் திருத்துறைப்பூண்டி நகரம், திருத்துறைப்பூண்டி தெற்கு வடக்கு ஒன்றியங்கள், கோட்டூர் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஒருங்கிணைப்பு குழுவிற்கு வழிகாட்டி வருகிறார்.மாவட்டம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிபிஎம் ஒருங்கிணைப்பு குழு உதவி மையத்தை தொடர்பு கொள்பவர்களுக்கு மருத்துவமனையில் சேர்ப்பது, ஆக்சிஜன் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுப்பது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகத்திடம் பேசி தேவையான உதவிகள் உள்ளிட்ட பணிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துபோன திருத்துறைப்பூண்டி நகரம், கொரடாச்சேரி கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சமூகநல ஊழியர்களுக்கு அரசின் நிதியுதவி பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.

நன்னிலம் ஒன்றியத்தில் ரூ. 1லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் மற்றும் உதவிகளை சிபிஎம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான் மற்றும் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்துள்ளனர். திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு ஊழியர், சிஐடியு, ஓய்வூதியர், காப்பீட்டு ஊழியர் அரங்கங்களின் பேருதவியோடு 12 நாட்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50,000 மதிப்பிலான உணவு பொட்டலங்களை மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையிலான குழுவினர் வழங்கினர்.

திருத்துறைப்பூண்டி நகரத்தில் நோய் தொற்றால் இறந்து போன குடும்பத்திற்கு நகரகுழுவின் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. வார்டு வாரியாக கபசுர குடிநீர், நெல்லிக்காய்சாறு என ரூ. 15,000 மதிப்பிலான நோய் எதிர்ப்பு சக்திக்கான பொருட்கள் வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி தெற்கு கமிட்டியில் 15,000 மதிப்பிலான உணவு மற்றும் கபசுர குடிநீர் ஊராட்சி மற்றும் கிராமங்களில் ஒன்றிய குழுவால் வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி வடக்கு கமிட்டியில் முதல்அலையின் போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஒன்றிய குழு உறுப்பினர் பி.ராமசந்திரன் இதயநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். ஊரடங்குகால நெருக்கடியான அந்த சூழலில் ஒன்றியக் குழு மூலமாக நிதி திரட்டி ரூ.1 லட்சம் உதவி நிதியாக வழங்கப்பட்டது. மன்னார்குடி நகரம் கோட்டூர், முத்துபேட்டை ஒன்றியங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, உணவு, காய்கறி, பால், சர்க்கரை, டீத்தூள், குளியல் மற்றும் சலவை சோப்புகள், மாஸ்க் உள்ளிட்ட ரூ. 75,000 அளவிற்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோல் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் ஆகிய ஒன்றியங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை இப்போது வரை தொடர்ந்து செய்துவருகின்றனர்.

அர்ப்பணிப்பும் துணிவும்
மாவட்டத்தையே பேச வைத்த இன்னொரு செய்தி,  திருத்துறைப்பூண்டி நகரில் கொரோனா நோய் தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை காலதாமதம் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள மின்மயானத்தை அரசின் அவசர உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி நகராட்சி மூலமாக மின்மயானம் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இறந்த உடல்களை எரிப்பதற்கு எவருமே முன்வராத பட்சத்தில் சிபிஎம் நகர குழுவின் முன் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள 4 இளைஞர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடும், துணிவோடும் உடல்களை எரிக்கும் பணியினை மிக செம்மையாக இப்போதும் செய்துவருகின்றனர். கொரோனா நோய் தொற்றால் பலியாகும் உடல்களை எவ்வித சிரமமும் இன்றி பொதுமக்கள் எந்த நேரத்திலும் இந்த மயானத்தில் எரியூட்டமுடிகிறது. 

அவ்வாறு இந்த சோதனையான சூழலில் பயமும் பதற்றமும் நிலவி நிற்கும் போதும், தங்களைப் பற்றி கவலைப்படாமல் சேவையாற்றி வரும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் அர்ப்பணிப்பான இந்தப் பணியை பார்த்து பலர் அவர்களிடத்தில் கண்ணீர் மல்க பேசுகின்றனர். அதற்கு அந்த இளைஞர்கள் கூறும் ஒரே வார்த்தை, “நாங்க இருக்கோம். கவலை வேண்டாம்” என்று தைரியம் தெரிவிக்கின்றனர். இந்த காட்சியும் அவர்கள் கூறும் பதிலும் பொதுமக்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.  மாவட்டத்தில் யாரும் உதவிட முன்வராத இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கட்சி செய்து வரும் இந்த அர்பணிப்பான சேவையை பாராட்டி ஏராளமானவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்துகொண்டே உள்ளது.

கட்டுரையாளர் : ஆரூரான்

;