articles

img

இறப்பிற்குப் பின்னும் மறுக்கப்படும் சமூக நீதி....

தமிழகத்தில் அடித்தள மக்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. என்றாலும் அவற்றில் முதன்மையானதாக இருப்பது, இறந்தோரைச் சிரமம் இன்றி நல்லடக்கம் செய்ய இயலாத நிலை. வாழும் வரையில் மகிழ்ச்சி என்றால் என்னவென்று அறியாத வாழ்க்கை வாழ்ந்து, மறைந்தபின் இறுதியாகச் சேருமிடம் நோக்கிச் செல்வதும் பெருந்துயரமாகக் கூடிய ஒரு வாழ்வைத்  தமிழகக் கடைகோடிக் கிராமங்களில் வாழும் அடித்தள மக்கள் அனுபவித்து வருகின்றனர். விடுதலை பெற்ற நவீனச் சமூகத்தில் மயானத்துக்காகப் போராடிப் போராடித் தோற்கும் அவலம் வேறெந்தச் சமூகத்திற்கும் நிகழாத அவலமாகும்.  

முறையான சுடுகாடோ இடுகாடோ இல்லாத அடித்தள மக்கள் கிராமங்கள் எண்ணற்றவை.  அவை இருக்கின்ற ஒரு சில கிராமங்களில் அங்குக் கொண்டு சேர்ப்பதற்கான சரியான சாலை வசதியோ இன்ன பிற வசதிகளோ இல்லாத
நிலை, புதைப்பதற்குப் போதுமான இடவசதிஇல்லாத நிலை. இவை குறித்த தொலைநோக்குச் சிந்தனைகளை கவனத்தில் கொள்ளாததால் ஒவ்வொரு இறப்பின் போதும் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர்.  இதன் காரணமான அவமானங்களையும் மன வேதனைகளையும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

அடித்தள மக்களில் அமரராகும் உடல்களை,அவர்களுடைய மயானங்களுக்குக் கொண்டு சேர்ப்பது என்பது பெரும் போர்க்களச் செயல்பாடாக அமைந்து விடுகிறது. கோடைக் காலமாயின் சிரமமின்றித் தப்பித்து விடுகின்றனர். மழைக்காலங்களிலோ வேளாண்மை நடைபெறும் காலங்களிலோ அவர்களுடைய பாடுபெருந்துயரம்தான். வயல்களையும் வாய்க்கால்களையும் இன்ன பிற நீர் நிலைகளையும் கடந்து சென்று சேர்ப்பது என்பது பேரவலம்.இப்படியான அவலங்களில் ஒன்றிரண்டு ஊடகங்களின் கவனத்திற்கு வரும்போது  உடனடித் தேவை கருதி அவசர அவசரமாக ஏதேனும் ஒருசில ஏற்பாடுகளைச் செய்து தற்காலிகத் தீர்வுகாணும் அரசப் பொறுப்பாளர்கள் அதன்பிறகு அது குறித்து நிலையான தீர்வைக் காண்பதில்லை. பின்னர் வேறொரு சூழலில் அச்சிக்கல் நேரும்போது மீண்டும் அது போன்றதொரு தற்காலிக நடவடிக்கைகளால் சமாளித்து விடுவது என்பது வழக்கமாகிவிட்டது.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப வழியறிந்த தேசத்தில் அடித்தள மக்கள் மயானத்திற்குச் செல்ல வழி கிடைக்கவில்லை. இவற்றைப் போன்ற பலவற்றையும் பொதுச் சமூகம் எளிதில்மறந்துவிட்டு அந்தச் சூழலைக் கடந்து போய்விடும். எனினும் பல இடங்களில் இரு சமூகங்களுக்கிடையே பெரும் மோதலாகி நல்லடக்கம் செய்யப்படாமல் வீதியில் கிடந்த அமரர் உடல்கள் தமிழ்ச் சமூக வரலாற்றில் மறக்க முடியாது.சமூக நீதி மிக ஆழமாக வேரூன்றிய இம்மண்ணில் அடித்தள மக்களில் அமரராகிவிடும் சிலரின் இறுதிப் பயணம் அமைதியாக அமைய இன்னும் ஒரு நீதி எட்டப்படாமல் இருந்து வருகிறது. அரசும் ஆட்சியாளர்களும் மனது வைத்தால் ஓரிரு நாட்களில் இதற்குத் தீர்வு கண்டுவிட முடியும். அனைத்துச் சாதியினரும் கோயில் கருவறைக்குள் செல்ல முடியாத பேரவலத்தை விடபேரவலம் இறந்து போன அடித்தளச் சமூகத்து அமரர் ஒருவரின் உடல் மயானத்தைச் சென்றடைவது. மயிலாடுதுறை மாவட்டம், திருநாள்கொண்டச்சேரி என்னும் ஊர் நிகழ்வு இன்னும் பலருக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை. பாடைகள் செல்ல வழி மறுப்பதும், பாதியில் இறக்கி வைக்கப்பட்டு வெட்ட வெளியில் கிடப்பதும் இனி நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வதும்தான் வளர்ந்த சமூகத்துக்கான அழகு. 

தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள புதிய அரசு இதன் மீது சிறப்புக் கவனம் செலுத்தி அடித்தள மக்களுக்கான மயானங்களில் உரிய வசதிகளை மேம்படுத்தி இறப்போரின் இறுதி நாளைக் கெளரவமான நாளாக மாற்றிக் காட்ட வேண்டும்.  இது காலத்தின் கட்டாயம்.நகரங்களில் நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பொறுப்பில் பொதுவான மயானங்கள் இருப்பது போன்று ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் பேரூராட்சியிலும் அங்குள்ள மக்கள் தொகைக்கேற்பப் பொது மயானங்களை உருவாக்கி அங்கு அடித்தள மக்களுக்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஒரு பெரும்ஏற்றத்தாழ்வைத் தவிர்க்க முடியும். மேலும் இப்பொது மயானங்களில் உரிய பணியாளர்களை நியமித்து அவற்றைப் பராமரிக்க வேண்டும். அதன் மூலம்  மயானங்களுக்குள்ளும் சமூக நீதி காக்கப்பட வேண்டும்.திருக்கோயில் பணியாளர்கள் அரசுப் பணியாளர்களாகப் பார்க்கப்படுவது போல் மயானப் பணியாளர்களும் அவர்களைப்போன்று காக்கப்பட வேண்டும். அனைத்து மயானங்களும் அரசின் பொறுப்பில் சுற்றுச் சூழல் பாதுகாப்புடன் மதிப்பு மிக்க இடங்களாகக் காக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் : பொன்னி வளவன்

;