articles

img

காடுகளில் ஓலமிடும் உப்பிரியே...

யாரிடமோ கேட்டு வீட்டுத் தொலைபேசி எண் வாங்கி இருந்தேன். அழைக்கவும் செய்தேன். ‘நேற்று உங்கள் பேச்சு அத்தனை அபாரம். இப்படியாக ஓர் உணர்ச்சிகர உரை நான் அண்மையில் கேட்டதில்லை’ என்றேன்.குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்ளுமே, அப்படியா அப்படியா என்று. அதே போலவே, ரசித்து ரசித்துக் கேட்டுக் கொண்டார், ‘அப்படியா அப்படியா’ என்று. நிஜமாவே நல்லா இருந்ததா’ என்று. ஆனால், நான் எதிர்பார்க்காத கேள்வியொன்று அடுத்து வந்தது. 
“உங்களுக்கு நான் என்னென்ன பேசினேன்னு நினைவிருக்கா?”

“ஆமாம்...வார்த்தைக்கு வார்த்தை. வாக்கியத்திற்கு வாக்கியம்” என்று அவர் குரலிலேயே பேசிக் காட்டினேன். அப்படியே கிறக்கமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், அடுத்த எதிர்பாராத கேள்வியும் கேட்டுவிட்டார்:“அப்ப ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன்....என்ன நினைவில் இருக்கோ நான் பேசினது, அப்படியே எனக்கு எழுதிக் கொடுத்துவிட முடியுமா?”திருவல்லிக்கேணி  மசூதி தெரு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்தில் அன்று மாலையே அவர் முந்தைய நாள் ஆற்றி இருந்த ஓர் உரையை அவரிடமே கொடுத்த நாளும், அந்தத் தருணமும், அவரது பரவசமும் வாழ் நாள் மறக்க முடியாதது. தனிப்பட்ட ஒவ்வொருவர் நலன் குறித்தும் கரிசனமும், நேயமும், முரட்டு வாஞ்சையும் செலுத்துபவள் தாயன்றி வேறு யார் இந்த உலகில்! தோழர் என்ற உன்னத தளத்தில், தாய்மையின் கனிவையும் அவரிடம் உணர்ந்தவர்கள் எண்ணற்றோர் இருப்பர்.  தாயை இளவயதில் இழந்த என்னை வளர்த்த சிற்றன்னையின் பெயரும் மைதிலி.  என் வாழ்க்கையில் மறக்க முடியாத தற்செயல் ஒற்றுமை அந்தப் பெயர்.

கொள்கை, தத்துவப் பிடிப்பு, சம தளப் பார்வை எல்லாம் இருந்தாலும், சில தலைவர்களிடத்துக் கூடுதல் அண்மை, சில உரைகளின்பால் கூடுதல் ஈர்ப்பு, சில எழுத்துகள்வசம் கூடுதல் ஆர்வம், சிலரது அணுகுமுறைகள்குறித்துக் கூடுதல் பெருமிதம் இருக்கவே செய்யும்.  குறிப்பிட்ட நடிகர் படங்கள், இசையமைப்பாளர் பாடல்கள் போல ஒருவித பித்தேறித் தேடித் தேடிப் போய்க் காத்திருந்து மைதிலி பேசக் கேட்டு ஆனந்தம் பொங்கத் திரும்பிய காலம் ஒன்று இருந்தது. தி இந்து ஆங்கில நாளேட்டில் அவரது கட்டுரை பார்த்த மாத்திரத்தில் படித்துமுடித்து அவரை அழைத்து அது பற்றிக் கொண்டாடி உரையாடிய வாழ்க்கை ஒன்று இருந்தது. இது ஏன் அப்படி இருக்கிறது, அது ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் சம தளத்தில் அவருக்கருகே நின்று கேள்விகள் எழுப்பி சமாதானமாகி விடைபெறும் அனுபவங்கள் வாய்த்த காலம் ஒன்று இருக்கவே செய்தது.


‘காம்ரேட்’ என்ற அவரது உச்சரிப்புக்கே கசிந்துருகி நிற்கும் சிலிர்ப்பை இப்போது கூட உணர முடிகிறது. உள்ளத்தின் உணர்ச்சி மை தொட்டு எழுதியவைதான் அவரது எழுத்துகள் ஒவ்வொன்றும். உள்ளத்தினுள் ஆர்ப்பரித்துப் பொங்கும் உணர்ச்சிகளில் தோய்த்தெடுத்தவைதான் அவரது சொற்கள் ஒவ்வொன்றும். சமரசமற்ற அரசியல் தெளிவும், வர்க்க உணர்வும்  எதிரே இருப்போர்க்கு மிக இலகுவாகக் கடத்தும் ஆவேசம் இருக்கும் அவரது உரைகள் ஒவ்வொன்றிலும்!  படிப்படியாக ஆங்கிலச் சொற்களைக் குறைத்து, சாதாரண மக்களுக்குப் புரியும் வண்ணம் கருத்துகள் போய்ச் சேர வேண்டுமென்ற அவரது தொடர் உந்துதல் மகத்தானது.

சிறுமியாக இருந்த தனக்கு ஒரு பக்கம் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருக்கையில், வீதியில் குடி தண்ணீருக்கான சாதாரண மக்கள் கூக்குரல் கேட்டதும் அப்படியே ஓடோடிப் போய் அவர்களுக்கான குரல் எழுப்புவார் என்று தனது ‘காம்ரேட் அம்மா’ புத்தகத்தில் கல்பனா எழுதி இருப்பார். உள்ளுக்குள் எப்போதும் சக உயிர்களுக்கான துடிப்பு துடித்துக் கொண்டே இருக்கும் ஒருவரால் தான் அப்படி இயங்கிக் கொண்டே இருக்க முடியும். தமது பாட்டி சுப்பம்மா குறித்த தேடலில் இறங்கி அவர் தொகுத்து வழங்கி விட்டுச் சென்றிருப்பது தலைமுறைகளுக்கு முந்தைய ஒரு வாழ்க்கை குறித்த சித்திரம் மட்டுமல்ல, அக்காலத்திய வரலாற்றுத் தரவுகளின் அபார தொகுப்பு மட்டுமல்ல, தன்னுணர்வு பெற்றுப் பெண்கள் முட்டுக்கட்டைகள் உடைத்து வெளிப்பட்டு நிற்கவேண்டும் என்ற எக்காலத்திற்குமான செயல் விளக்க வரைபடம் அது.  

கட்டுப்பெட்டியான குடும்பத்தில் ஓர் அரசு அதிகாரிக்கு வாழ்க்கைப்பட்டு நான்கு சுவர்களுக்குள் முடங்கி இருக்க விதிக்கப்பட்டிருந்த வாழ்க்கையிலிருந்து, சுப்புலட்சுமி (11 வயதில் மண வாழ்க்கை, 14 வயதில் தாய்மை) தமது வாசிப்பு அனுபவத்தால் உந்தப்பட்டு முன்னெடுத்த விஷயங்கள் வியக்க வைப்பவை. ரவீந்திர நாத் தாகூருக்கு வாழ்த்து தந்தி அனுப்பியவர், நூலகத் தந்தை ரங்கநாதன் அவர்களிடமிருந்து அஞ்சல் அட்டை மூலம் புதிய புத்தக வரவு பற்றி அறிந்து கொண்ட வாசகர், சுதந்திர வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.... என விரியும் அசாத்திய வெளிச்சமிக்க வரலாற்றை மைதிலி, ஒரு வாழ்க்கையின் துகள்கள் என்ற புத்தகமாகவே கொண்டு வந்தவர்.

கஸ்தூர்பா பார்வையில் இருந்து, கஸ்தூர்பா குறித்த காந்தியின் பார்வையை விசாரணைக்கு உட்படுத்திய மைதிலி அவர்களது புத்தகமும் முக்கியமான பங்களிப்பு. காந்தியை மட்டுமல்ல, பெரியார் மீதும் காத்திரமான விமர்சனங்கள் எழுப்புமளவு ஆய்வுக் கண்ணோட்டமும், மதிப்பு மிக்க மனிதர்களே ஆனாலும் வழிபாட்டு மனப்பான்மையற்று வாழ்க்கை நடைமுறைகளை அணுகி நோக்கும் துணிவுமிக்க பார்வையும் அவருக்கு வாய்த்திருந்தது. ஆளுக்கு ஆள் மாற்றிக் கொள்ளாத அளவுகோல்கள் அவருடையவை.

கேப்டன் லட்சுமி அவர்கள் ஒரு முறை சென்னை நிகழ்வு ஒன்றிற்கு வந்த போதும், கியூப பிரதிநிதிகள் சென்னைக்கு வருகை தந்த நிகழ்ச்சியின் போதும் அவர் வெளிப்படுத்திய குதூகல பரவசமிக்க கொண்டாட்ட உணர்வு மறக்க முடியாதது. பல்வேறு அரசியல் கொள்கைகள் கொண்ட மகளிர் அமைப்புகளையும் பொதுவான மேடையில் ஒருங்கிணைக்கும் முயற்சி ஒன்றில் அசாத்திய அரவணைக்கும் தன்மையோடு அவர் செயல்பட்ட விதம் வணக்கத்திற்குரியது. உலக புத்தக தின கொண்டாட்ட நேரத்தில் பெண்களுக்கு வாசிப்பு எத்தனை அவசியம் என்பதை அவர் வலியுறுத்திய கோணம் உயிர்ப்பானது. எளிய தோழர்களது தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றங்களில் உரிமையோடும், ஆர்வத்தோடும் அவர் காட்டிவந்த அக்கறை விவரிப்புக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுத் தோழர்கள் உள்ளங்களைக் குளிர்வித்தவர்.

அல்சைமரால் பீடிக்கப்பட்டு நினைவடுக்குகளில் எதையும் எடுத்துப் புரட்டித் தெரிந்து கொள்ள முடியாத சோக நிலையில் அவர் வீழ்ந்தது ஒரு துயரமிக்க விஷயம். சில ஆண்டுகளுக்குமுன் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று மிகவும் நெருக்கமாகப் பழகிய மனிதர்களிடையே நடத்தப்பட்டது, ஏதேனும் விதத்தில் அவருக்குக் கொஞ்சமேனும் பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவுமா என்று ஏங்க வைத்தது. எல்லோர் நினைவுகளிலும் நிறைந்திருக்கும் ஒருவர் தமது நினைவுகளை இழக்க நேர்ந்த கொடுமை கண்களைக் கலங்க வைப்பது. ஆனாலும், அவரது காதல் வாழ்க்கை இணையர் கருணாகரன், செல்ல மகள் கல்பனா, அன்பின் மருமகன் பாலாஜி சம்பத் எல்லோரும் அவரது கடைசித் துளி வாழ்க்கை வரை கொண்டாடிப் பார்த்துக் கொண்டது சிலிர்க்க வைப்பது. 

சுப்பம்மா பாட்டி குறித்த அவரது நூலாக்கம் ஓர் ஆவணப்படமாகத் தயாராகி வெளியான நிகழ்விலும் மைதிலி அமர்ந்திருந்தார். சுப்பம்மா குழந்தையை இழக்கும் காட்சியில், ‘காடுகளில் ஓலமிடும் உப்பிரியே’ என்ற பாடல் ஒன்று சோக ராகத்தில் ஒலிக்கும். ஜீவா ஜீவா என்ற சொற்கள் கண்ணீர்ப் பெருக்கும். சுப்பம்மா பாட்டியின் வாழ்க்கை வேறு எப்படி இருந்திருக்க முடியும் என்ற மறுபார்வையான வாழ்க்கையாக மைதிலி சிவராமன் அவர்களது வாழ்க்கை அமைந்திருந்தது என்று கூட எதிர்காலத்தில் யாரேனும் ஆய்வுரை எழுதக்கூடும். ஆனால், அந்தப் புத்தகத்தை நினைக்காமல் மைதிலி அவர்களை நினைக்க முடிவதில்லை. சுப்பம்மா பாட்டி மறைந்த போது அவருக்கு வயது 81. தோழர் மைதிலி அவர்களுக்கும் அதே வயதில் வாழ்க்கை நிறைவு பெற்றது ஒரு தற்செயல் ஒற்றுமை தான்.

கட்டுரையாளர் : எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர், வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர்
 

;