articles

img

கட்சி ஒழுக்கத்திற்கு உதாரணம் தோழர் மைதிலி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர் தோழர் மைதிலி சிவராமன் நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் மாநிலக்குழு சார்பில் இணைய வழியில் நடைபெற்றது.  

இதில் பங்கேற்று உரையாற்றிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், “1964ல் தொடங்கி 70களில் போராட்டங்களின் நகரமாக சென்னை இருந்தது. தினசரி போராட்டம், தடியடி, துப்பாக்கி சூடு, பொய் வழக்கு, சிறையில் அடைப்பு, பழிவாங்கல், வேலைபறிப்பு என உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. தோழர் வி.பி.சிந்தனை போராட்டக்களத்தில் மட்டுமே சந்திக்க முடியும். அத்தகைய சூழலில் தொழிற்சங்கத்திற்கு பெண் தலைவர் தேவைப்பட்ட காலத்தில், முழு நேர ஊழியராக மைதிலி வந்தார். குறுகிய காலத்தில் பல தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கி போராட்டங்களை வழிநடத்தினார். அதன்பின் சென்னையில் அவர் இன்றி எந்த போராட்டமும் நடைபெறாது.கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து ஒருபோதும் அவர் விலகியது கிடையாது. தனது கருத்தை வலியுறுத்துவார். அதேசமயம் கூட்டு முடிவுக்கு எப்போதும் உட்படுத்திக் கொள்வார். கட்சி ஒழுக்கத்தை கடைபிடித்தார். ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மாட்டார். பதவிகளை விரும்ப மாட்டார். இவையெல்லாம் தியாகத்தின் ஒருபகுதி” என்று கூறினார்.

கலை இலக்கிய ஈடுபாடு
எழுத்தாளர் அ.மங்கை பேசுகையில், “மைதிலியின் மற்றொரு பக்கம் அவரின் கலை இலக்கிய ஈடுபாடு. இதில் அவர் நாடக பாரம்பரியத்திலிருந்து வந்த கே.பி.ஜானகியம்மாவை பின்பற்றும் விதத்தில் பல்வேறு நாடகங்களில் தன் பங்களிப்பை செலுத்தினார். மக்கள் எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பு மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாதர் சங்கத்தின் சக்தி கலைக்குழு உருவாக்கத்தில் மைதிலியின் உதவி முக்கியமானது” என்று நினைவு கூர்ந்தார்.எழுத்தாளர் வ.கீதா பேசுகையில், “நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள மைதிலி சிவராமன் வாழ்க்கை ஒரு உரைகல். நம் லட்சியங்களை அடைய சிரமம் ஏற்படும்போது அவரின் பிம்பம் ஆதாரமாகவும் வழிகாட்டியாக இருக்கிறது. இயக்க கட்டுப்பாட்டை அவர் என்றும் சுமையாக பார்க்கவில்லை. அதேபோல் தன் ஆளுமையை எங்கேயும் முன்னிறுத்தாமல் அமைப்பின் பெயரைத்தான் முன்னிறுத்துவார். இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். சாதி, வர்க்கம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை எப்போதும் அனைவருக்கும் விளக்க முயல்வார் மைதிலி. அவரின் இழப்பு சாமானியமானதல்ல” என்றார். 

மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் பா.ஜான்சிராணி பேசுகையில், “மைதிலி பன்முகத் திறமை வாய்ந்த ஒரு சமூகப் போராளி. அவர் ஆய்ந்து அமைப்புக்காக செய்ய நினைத்ததை எல்லாம் அதில் நடைமுறைப்படுத்த நிதியையும் சேர்த்து உருவாக்குவார். கருக்கொலை, சிசுக்கொலை தடுக்க போராடியதோடு ஜானகி அம்மாள் பெயரில் டிரஸ்ட் தோன்ற காரணமானவர் முக்கியமாக பல பணிகளுக்கு நேரடியாக வர முடியாத பெண்களுக்கு ஏற்றார்போல அவர்களின் திறமைக்கேற்ற பணிகளை ஒதுக்கி அவர்களை செய்ய வைத்து மேம்படுத்துவது, மீடியா கமிட்டி, சட்ட உதவி மையம், போலீஸ் ஆலோசனைக் குழு போன்றவற்றில் பங்கேற்க வைத்ததன் மூலம் ஏராளமான பெண்களை ஊழியர்களாக உருவாக்கினார்” என்று நினைவு கூர்ந்தார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசுகையில், “மைதிலி சிவராமனை ஒருமறை மட்டுமே சந்தித்து இருக்கிறேன். அவரது எழுத்துக்களை வாசித்ததில் இருந்து அவரது சிந்தனைகளை பின்பற்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அவரின் செயல்பாடு அமைந்திருந்துள்ளது. பல்வேறு பணிகளுக்கு இடையே களப் போராளியாகவும், எழுத்துப் பணிகளுக்கு முக்கியத்துவம் தருபவராகவும் அவர் வாழ்ந்துள்ளார்” என்று கூறினார்.

சமூக செயற்பாட்டாளர் தாவூத் மியாகான் பேசுகையில், “மூன்றாம் உலக நாடுகளின் நலனுக்காக ஐநாவில் தான் வகித்த பதவியை விட்டு இந்தியா வந்தவர். மாதர் சங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு அவருக்கு இருந்துள்ளது. ஜனநாயகம் அழிக்கப்படும் இக்காலத்தில் அவர் இல்லாதது பெரிய இழப்பு. லட்சத்தீவு அராஜகத்திற்கு எதிராக அங்கு கூடுதலான பெண்கள் போராட்டங்களில் பங்கேற்பதற்கு மைதிலி சிவராமன் ஒரு உந்துதலாக இருப்பார். மக்களை அடக்கியாள முற்படும் சட்டங்கள் இயற்றப்படும் இப்போதைய சூழலில் மைதிலியின் மறைவு பேரிழப்பு” என்றார்.

தஞ்சை மண்ணில் செங்கொடி உயர...
சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி பேசுகையில், “தஞ்சையின் செங்கொடி இயக்க வரலாற்றோடு இணைந்தது தோழர் மைதிலியின் களப் போராட்டம். வெண்மணி படுகொலை நிகழ்வுகளை ஆங்கிலப் பத்திரிகைகள் உள்ளிட்டு பல்வேறு பத்திரிகைகள் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டபோது பத்திரிகையாளர் என்ற முறையில் போராட்டத்தின் உண்மை விஷயங்களை உலகிற்கு மைதிலி வெளிப்படுத்தினார். இதன்பின் கணபதியாபிள்ளை கமிஷன் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் வெளியானது. இது விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராகவும், நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாகவும் இருந்தது என்பதை அவர் உடனே அம்பலப்படுத்தினார்.  தீவிர போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு உடனடியாக செல்ல என்றும் துணிந்தவர்.

நியாயக் கூலிச் சட்டம் கொண்டு வந்தபோது இதுகுறித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு விளக்கி அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்தவர். தலித் மக்களுக்கு டீக்கடைகளை திறந்து விட்டவர் மைதிலி. தஞ்சை மண்ணில் செங்கொடி உயர அவரது பங்கு அளப்பரியது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.பொருளாதார அறிஞர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா பேசுகையில், “மைதிலி வர்க்கப் போராட்ட அணுகுமுறையில் இருந்து சாதி, பெண் ஒடுக்குமுறைகளை பார்த்தார். மாற்றுக் கருத்துடையோரைக்கூட கூட்டு இயக்கங்களில் இணைத்தார். எங்கு கொடுமைகள் நடந்தாலும் ஆர்ப்பரித்து எழும் மைதிலி மென்மையாக பேசுவார், உறுதியாக நிற்பார். வியட்நாம் போரின்போது இந்தியாவில் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தற்போது குறைந்துள்ள சூழ்நிலையில் அதனை வலுப்படுத்துவதும், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட விஷயங்களில் மேலாதிக்கம் செலுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்து உலக நாடுகளை மீட்பதுமே நாம் மைதிலிக்கு செலுத்தும் அஞ்சலியாகும்” என்றார்.

;