articles

img

தொடர்மழை புயலிலிருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ளுமா?


2018 நவம்பர் 15 டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள் கஜாபுயல் ஆடிய கோரதாண்டவத்தால் லட்சக்கணக்காண மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மறுநாள் காலை வரைவீசிய கஜாபுயலின் தாக்குதலால்; நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் நாகை திருவாரூர் மற்றும் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின. டெல்டா மாவட்டங்களில் 62.42 லட்சம் தென்னைமரங்கள் வேருடனும் பாதியாகவும் முறிந்துவிழுந்தன. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் மட்டும் 45.07 லட்சம் தென்னைமரங்கள் சாய்ந்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6.20 லட்சம் தென்னை மரங்கள்சேதமடைந்தன. இவைமட்டுமின்றி மா, பலாபோன்ற லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன.மின் விநியோகம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின. புயல் வீசிஇரண்டு ஆண்டுகள் கடந்தாலும் இதுவரை மீள முடியாமல் கடனில் ஏராளமான விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் அரசின் கணக்கெடுப்பின்படி 8பேருக்கு மட்டுமே நிவாரண உதவிதலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாவட்டத்தில்1லட்சத்து 27ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்தாக அரசு சார்பில் கணக்கிடப்பட்ட நிலையில்60 சதவிகித பேருக்கு கூட நிவாரணத்தொகைஅவர்களது வங்கிக் கணக்கை சென்றடையவில்லை. மேலும் 767 கால்நடைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானஉரிமையாளர்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. வீடுகளை இழந்தவர் களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்ற அறிவிப்பானது பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் தற்போது வரை வீடுகளை இழந்தவர்கள் வீடில்லாமல் தவித்து வருகின்றனர்.நாகை மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.1லட்சத்து 11ஆயிரத்து 132குடிசை வீடுகள் சேதமடைந்தன. 1லட்சத்து 81ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்தன. 2050 பைபர் மற்றும் விசைப்படகுகள் சேதமடைந்தன. 2லட்சத்து 32ஆயிரத்து 018 மரங்கள் சாய்ந்தன. 20ஆயிரத்து 870 மின்கம்பங்கள் சாய்ந்தன. 573 கி.மீ. தூரத்திற்குசாலைகள் சேதமடைந்தன. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் அதிக அளவில் தென்னைவிவசாயம் நடைபெறுவதால் அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளான தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் பஞ்சு கயிறு தயாரிக்கும்75க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. கஜாவால் அனைத்து தொழிற்சாலைகளும் சேதமடைந்தன. விவசாயம் சார்ந்த பல்வேறு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கிய அரசு  பல லட்சம் ரூபாயை இழந்து பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலைகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. புதுகை மாவட்டத்தில் 2.17 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. லட்சக்கணக்கான மரங்கள் முறிந்தன. இதில் 10சதவீதம் பேருக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி புதுகை பகுதிமக்கள் கூறுகையில் கஜாபுயலால் பாதிக்கப் பட்டபோது அரசு கட்டிடங்களில்தான் குடியிருந்தோம். அங்கேயே சமைத்து வாழ்க்கையைநடத்தி வந்தோம். புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை தருவதாக அறிவித்திருந்தது. ஆனால் தங்கள் பகுதியில் உள்ள சில நபர்களை தவிர மற்ற யாருக்கும் இதுவரை அரசு அறிவித்த நிவாரணப் பணம்  வந்துசேரவில்லை. என்று புலம்புகின்றனர்.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின்  கடந்த ஒரு வார கால கனமழைபுயல் எச்சரிக்கையால்  ஏற்கனவே கஜாபுயலால் பாதிக்கப்பட்டு இன்னமும் மீளமுடியாத நிலையில் இருந்த டெல்டா மக்கள் நிவர் புயலை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்றஅச்சத்திலும் பதற்றத்திலும் இருந்தனர். நல்லவேளையாக வங்கக்கடலில் மையம்கொண்டிருந்த நிவர்புயல் புதுச்சேரிக்கு அருகே கரையைகடந்தது. இந்தப்புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110 கி.மீ முதல் 120 கி.மீ வேகத்தில்சூறாவளி காற்றாக வீசியது. இதையொட்டி புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன.

டெல்டா மாவட்டமக்கள் பெரும் பாதிப்பில்இருந்து சற்று தப்பினர். இருப்பினும் இந்த நிவர் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் கனமழை கொட்டிதீர்த்துவிட்டது. அதன்விளைவாக சென்னையில் உள்ள அத்தனை சாலைகளும் மீண்டும் ஒருமுறை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. சென்னைக்கு புயலும் வெள்ளமும் புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் வந்துசெல்வது வழக்கமாக உள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தில்செம்பரம்பாக்கம் ஏரிதிறப்பை தாமதித்ததன் விளைவாக சென்னை முழுவதும் வெள்ளத்தில்தத்தளித்தது. துயரத்தில் இருந்த மக்கள் மீள்வதற்கு பல மாதங்கள் ஆனது. பலபேர் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு செல்லவும் வழிவகுத்தது.நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கனமழை வெள்ளத்தின்போது எங்கு தண்ணீர் தேங்குகிறதோ அங்குதான் தொடர்ந்து இப்போதும்தண்ணீர் தேங்குகிறது. அதை ஒழுங்குபடுத்துவதற்குதான் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆயிரத்திற்கும்மேற்பட்ட இடங்களை கண்டறிந்துவிட்டதாகவும், அந்த எண்ணிக்கையை குறைத்து ஓரளவுசரி செய்து விட்டதாகவும் சென்னை மாநகராட்சிஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்காக 3ஆயிரத்து 815கோடி பட்ஜெட் போடப்படுகிறது என்றும்ஒவ்வொரு ஆண்டும் இதற்காக ரூ.3000 கோடி செலவு செய்வதாகவும் அரசு தெரிவித்தது. ஆனாலும் பிரச்சனை தொடர்கிறது என்பதுதான் கவலையளிக்கிறது. இப்போது வங்கக்கடலில் புரெவிபுயல் உருவாகி உள்ளதன் விளைவாக மூன்று நாட்களுக்கு தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்தமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. கனமழை புயல் எச்சரிக்கை என்பது இம்மாதம் இறுதிவரை தொடரத் தான்போகிறது.

பிரச்சனை என்னவென்றால் வரும் முன்காப்போம் என்ற நிலையிலிருந்து அரசு விலகிநிற்கிறது. பிரச்சனைகள் வரும்போது மட்டும்பாதிப்புகள் குறித்து திட்டமிடுகிறது. இவைகளை தவிர்த்து சரியான தொலைநோக்கு திட்டத்துடன் இதுபோன்ற தொடர் பாதிப்புகள் ஏற்படும்மக்கள் அடர்த்தியாக வாழும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். அதேபோல் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் முந்தைய புயல் வெள்ளபாதிப்புகளை அனுபவமாக எடுத்துக் கொண்டுதேவையான நிதி ஒதுக்கீடு செய்து  அதன் அடிப்படையில் பாதிப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்போதாவது முந்தைய தொடர்மழை மற் றும் புயல் பாதிப்புகளிலிருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

===ஐ.வி.நாகராஜன்==

;