articles

img

மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....

சமீப காலங்களில், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் கூட்டாட்சித் தத்துவத்தையும், தேர்தல் ஜனநாயகத்தையும் எவ்வித நாணமுமின்றி அரித்து வீழ்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. 2020இல் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் சமயத்தில், திடீரென அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய அளவிலான சமூக முடக்கம், 2016இல் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமைகளை அரித்துவீழ்த்தும் விதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள், மாநிலங்களின் அதிகாரங்கள் பலவற்றை மத்தியத்துவப்படுத்தி இருத்தல், ஆளுநர்களின் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல் முதலானவை நாட்டின் ஜனநாயக கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்களின் சில எடுத்துக்காட்டுகளாகும். ஃப்ரண்ட்லைன் இதழ் செய்தியாளர் டி.கே.ராஜலட்சுமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அளித்திட்ட நேர்காணலில், சீத்தாராம் யெச்சூரி, “இந்துத்துவா ராஷ்டிரத்தின் சித்தாந்தம்,  மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி முறை (unitary state structure of central to the idea of a “Hindutva Rashtra”) என்பதாகும்,” என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், இதற்கு முன்பெல்லாம், மத்திய-மாநில உறவுகளில் மீறல்கள் இருந்து வந்தன, ஆனால், இப்போதோ மத்திய-மாநில உறவு முறைகளே அழித்து  ஒழிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றன என்றார். அவருடைய நேர்காணலின் சாராம்சம் வருமாறு:

கேள்வி: அரசமைப்புச்சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் வரையறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறதா? நாட்டிலுள்ள கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கைக்கு ஏற்றவாறுதான், 2021 தில்லி தேசியத் தலைநகர் பிரதேச (திருத்தச்)சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என மத்திய அரசாங்கம் கூறியிருக்கிறதே.

சீத்தாராம் யெச்சூரி: கூட்டாட்சித் தத்துவம்,அரசமைப்புச் சட்டத்தின் நான்கு அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். அதாவது, மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூக நீதி, பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் என்கிற நான்கு அடிப்படைத் தூண்களில் ஒன்றாகும்.நம் அரசமைப்புச்சட்டத்தின் முதலாவது பிரிவே, இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என நம் நாட்டை வரையறுக்கிறது. மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை. ஆனால், இந்துத்துவா ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக 1925இல்உருவான ஆர்.எஸ்.எஸ். இதனை அரித்து வீழ்த்தக்கோருகிறது. அதன் குறிக்கோள், “ஒரே தேசம்,ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்கிற கருத்தாக்கங்களின்கீழ் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஆர்எஸ்எஸ் பார்வை என்பது இதுவேயாகும்.  

அவர்களின் தேவை ஒற்றையாட்சி முறை
நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலும் அவர்களுடைய ஒட்டுமொத்த வேலையும், இப்போதைய மதச்சார்பற்றஜனநாயகக் குடியரசுக்கான நம்முடைய அரசமைப்புச்சட்டத்தை, அவர்கள் விரும்பும் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றுவதற்கு வழிசெய்யும் விதத்தில், மாற்றி அமைத்திட வேண்டும் என்பதும் அதற்காகவே மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுமேயாகும். இது எப்படிச்சாத்தியமாகும்? இதற்கு நம் அரசமைப்புச்சட்டத்தை அரித்துவீழ்த்திட வேண்டும். இந்துத்துவா ராஷ்டிரம் உருவாக வேண்டுமானால் அதற்குஅவர்களுக்குத் தேவை மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஓர் ஒற்றை ஆட்சி முறையாகும். இதற்கு
அனைத்து விதங்களிலும் அதிகாரம் செலுத்தக்கூடிய மத்திய அரசாங்கம் தேவையாகும். 

                                             **************

கேள்வி: ஆனால், மாநில அரசுகளைச் சம பங்காளிகளாகத்தான் கருதுகிறோம் என்று பாஜக தன்னுடைய தேசிய நிகழ்ச்சிநிரலில் கூறியிருக்கிறதே!

சீத்தாராம் யெச்சூரி:  பாஜக அவ்வாறு சொல்லிக்கொள்ளலாம். ஆனால் மாநிலங்கள் பங்காளிகள் மட்டுமல்ல. மாநிலங்கள் இல்லாமல், இந்தியா இல்லை. இதனை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் அரசமைப்புச்
சட்டத்தின் 1-ஆவது பிரிவு தெளிவாகத் தெரிவிக்கிறது.

குலைந்துபோன கூட்டாட்சி வடிவம்
நம் நாட்டில் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் கூட்டாட்சித் தத்துவத்தின் வடிவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், அது மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்ன, மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் என்ன என்பது
குறித்தும், மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள்எப்படி இருக்க வேண்டும், மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கும்,  மாநில அரசாங்கங்களுக்கும் இடையே மிகத் தெளிவான முறையில் அதிகாரங்களையும், செயல்பாடுகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. இதில் மிகவும் முக்கியமானது, எந்த எந்தத் துறைகள் மாநிலங்களுக்கு உரியவை, எந்த எந்தத் துறைகள் மத்திய அரசுக்கு உரியவை என்று பிரிவினை செய்து தந்திருக்கிறது. கடந்த எழுபதாண்டுகளில் இந்தப் பட்டியல் அரித்து வீழ்த்தப்பட்டு வந்திருக்கிறது.அரசமைப்புச் சட்டத்தில் தொடர்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன்மூலம் மாநிலங்களின் பட்டியல்களின் கீழ் இருந்த உரிமைகளுக்குக்கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல முன்பு மாநிலங்களின் பட்டியல்களின் கீழ் இருந்தன. அவை பின்னர் பொதுப் பட்டியலுக்கு அல்லது மத்திய அரசின் கீழான பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டன. முந்தைய அரசாங்கங்களால் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த அரசாங்கமோ, இவ்வாறு உள்ள பட்டியல்களில் எவ்விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாமலேயே, அவற்றைக் கிஞ்சிற்றும்நாணமோ வெட்கமோ இன்றி தமதாக்கிக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, கல்வி, இந்திரா காந்தியால் அவசரநிலைக் காலத்தின்போது மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர், அது பொதுப் பட்டியலில் இருந்தசமயத்திலேயே, நாட்டிற்கான எந்தவொரு புதியகல்விக் கொள்கையாக இருந்தாலும், விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அதன்மீது மாநில அரசாங்கங்களுக்கு, இணையான பங்களிப்புகள் உண்டு. ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைமீது அப்படி எவ்விதமான விவாதமும் நடக்கவில்லை. எதார்த்தத்தில் புதிய கல்விக் கொள்கை விவாதிக்கப்படவே இல்லை.

                                             **************

நிதிப் பகிர்வு

கேள்வி: மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிதிப் பகிர்வு தொடர்பாக மிகவும் மோசமான நிலைமை இருந்து வருகிறதே!

சீத்தாராம் யெச்சூரி: நாட்டின் பொருளாதாரத் திட்டம் தொடர்பாகவும் நாட்டிலுள்ள வளங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பது தொடர்பாகவும் இருவிதமான நிர்வாக ஏற்பாடுகள் இருந்தன. ஒன்று, திட்டக் கமிஷன் மூலமாகவும், மற்றொன்று அரசமைப்புச்சட்ட நிதி ஆணையம் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையும்,அரசமைப்புச்சட்டத்தின் கீழான நிதி ஆணையமானது மத்திய அரசுக்கும், மாநில அரசாங்கங்களுக்கும் இடையே நிதிப் பங்கீடு குறித்து ஓர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.ஆரம்பத்தில் இது 50:50 என்ற விகிதத்தில் இருந்தது. இப்போது அது மாநிலங்களுக்கு 42சதவீதத்திற்கும் மேலாக எந்த சமயத்திலும் சென்றதில்லை. இந்த 42 சதவீதம் என்பதில் பல பட்ஜெட்திட்டச் செலவினங்களின் கீழ் வரக்கூடியவை களாகும். இந்த அரசு திட்டக் கமிஷனையே ஒழித்துக்கட்டிவிட்டது. எனவே, இப்போது நிதி மாற்றம் என்பது திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் அது 42 சதவீத அளவிற்குத்தான் இருக்கும் என்று கூற வேண்டியிருக்கிறது.

ஆனால், அதே சமயத்தில், வரி வருவாயைப் பொறுத்தவரையில், அது எப்போதுமே சரி சமமாக விநியோகிக்கப்படுவதாகக் கூற முடியாது. அதனால்தான் மத்திய அரசு வசூலித்திடும்செஸ் வரிகளும், சர்சார்ஜ் வரிகளும், மத்திய அரசால் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. பாஜக-வின் ஆட்சியின் கீழ் கடந்த ஆறுஆண்டுகளில், நேரடி வரி விகிதம் மிகவும் கூர்மையாகக் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் மறைமுக வரி விகிதம் அதிகரித்திருக்கிறது. இதன் பொருளும்கூட, மத்திய அரசு தன்னுடைய வளங்களை, மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்வது குறைவதற்கே இட்டுச் சென்றிருக்கிறது என்பதாகும்.

நிதியாதாரங்களுக்கு மாநிலங்கள் என்ன செய்யும்?
அடுத்து, பொருள்கள் மற்றும் சேவைகள்வரிப் (GST) பிரச்சனையாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபின், அநேகமாக மாநிலங்கள்தங்களுக்கான வருவாயை உயர்த்திக்கொள்வதற்கான அதிகாரங்களை அநேகமாக இழந்துவிட்டன என்பதேயாகும். ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்ட விதமும், அது அமல்படுத்தப்படும் விதமும் மாநிலங்களின் உரிமைகளை மேலும் அரித்து வீழ்த்தி இருக்கின்றன.மாநிலங்களில் அரசாங்கங்களை அமைத்திருக்கக்கூடிய பல மாநிலக் கட்சிகள் தங்களுக்கென்று சொந்த நிகழ்ச்சிநிரல்களைப் பெற்றிருக்கின்றன. அவைகளும் மக்களுக்கு இலவசக்கல்வி, இலவச உணவு மற்றும் பல்வேறு சலுகைகளை உறுதிமொழிகளாக அளித்திருக்கின்றன. இவற்றுக்கு அவர்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கு நிதியாதாரங்களுக்கு வழி ஏதுமில்லை. முன்பெல்லாம் மாநில அரசுகளும் சர்சார்ஜ் வரி விதித்து வசூலித்திட முடியும். ஆனால், இப்போது ஜிஎஸ்டி வந்தபின்னர், மாநிலங்கள் வசூலித்த விற்பனை வரி முறை ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது. பெட்ரோலியம், மது போன்று சிலவற்றிற்கு மட்டும் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற இனங்கள்அனைத்தும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன. இந்தவிதத்தில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 

எனவே, மாநிலங்கள் தேசியப் பேரிடர் எதையாவது எதிர்நோக்குங்கால், அதற்காக வள ஆதாரங்களை முன்பு போன்று மாநிலங்கள் எழுப்பிட முடியாது. மத்திய அரசிடம் நிவாரணத்திற்காக யாசிக்கக் கூடிய நிலைக்கு இன்றைய
தினம் தள்ளப்பட்டுவிட்டன. மத்திய அரசு தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நிவாரணம் அளிக்கிறது. மாநில அரசாங்கம், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்ததாக இருந்தால் உதவிகிடைக்கும். இல்லையேல், தேவையான அளவிற்கு நிவாரணம் கிடைக்காது. மத்திய, மாநில உறவுகளில் சரி சமமான நிலை இல்லை. இது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும் மத்தியில் உள்ள கட்சிக்கும் இடையேயுள்ள உறவைச் சார்ந்தே இருக்கிறது. 

சுகாதாரத்துக்கு 3 சதவீத நிதி கூட ஒதுக்கப்படவில்லை
இதேபோன்று நிதிப் பிரச்சனைகள் வேறுபல வகைகளிலும் ஏற்பட்டிருக்கின்றன. சுகாதார செலவினங்களைப் பாருங்கள். மத்திய அரசின் பொது சுகாதாரத்திற்கான செலவினம் மிகவும் அற்பமாகும். நம் போன்ற நாட்டிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் கூட சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படவில்லை. நிச்சயமாக இது போதுமானதல்ல. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுஎப்படி சமாளிக்கப்பட்டது என்கிற அனுபவமே இதனை நன்கு பறைசாற்றுகிறது. மத்திய அரசாங்கம் பல்வேறுவிதமான கட்டளைகளையும் அறிவுரைகளையும் வழங்கியது. நம் பிரதமர் மகாபாரத யுத்தம் போன்று 21 நாட்கள் சமூக முடக்கம், கைகளைத் தட்டுங்கள், பாத்திரங்களைத் தட்டுங்கள்,விளக்குகளை ஏற்றி வையுங்கள் போன்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எதார்த்தத்தில் மாநில அரசாங்கங்களே எடுக்கவேண்டியிருந்தது. ஆனால் அதனிடம் அதற்கான நிதியாதாரங்களை மத்திய அரசு வசூலித்தது. மிகவும் விசித்திரமான விதத்தில், பிரதமரின் தலைமையிலான தனியார் அறக்கட்டளை ஒன்றிற்கு,  மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடையஒருநாள் ஊதியத்தை இதற்காக அளித்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழான இரு ஆண்டு கால நிதி இதற்குத் திருப்பிவிடப்பட்டது. சம்பளங்கள் வெட்டப்பட்டன. நிதி திருப்பிவிடப்பட்டது. ஆயினும் அந்த நிதி, தனியார் அறக்கட்டளைக்கானது. அதில் எவ்வளவு வசூலானது என்று அவர்கள் எவருக்கும் தெரிவித்திடவில்லை. அதனை எப்படிச் செலவு செய்தார்கள் என்று யாருக்கும்தெரியாது. கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதற்காக, இதிலிருந்து எந்த நிதியும் எந்த மாநிலத்திற்கும் செல்லவில்லை.
இப்போது இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்போதும் மத்திய அரசாங்கம், இதனைக் கையாள வேண்டியது மாநிலஅரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறி தன் கைகளைக் கழுவிக்கொண்டுவிட்டது. இவ்வாறாக அனைத்து நிகழ்வுகளிலும், மத்திய அரசு, மாநில அரசுகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதைப் பார்க்க முடியும்.

                                             **************

ஆளும் கட்சியின் பிரதிநிதியல்ல

கேள்வி: சமீப காலங்களில் ஆளுநர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் கீழ் உள்ள மாநில அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று முறையிடப்பட்டுக் கொண்டிருக்கிறதே!

சீத்தாராம் யெச்சூரி: இது அரசியல் நிர்வாகம் (political governance) சம்பந்தப்பட்டபிரச்சனையாகும். இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆளுநர் என்பவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதி ஒருவர், மாநில ஆளுநராக இருப்பார். இவர் ஓர் அரசமைப்புச்சட்ட பிரதிநிதியே ஒழிய, ஆளும் கட்சியின் பிரதிநிதி அல்ல. இது ஓர்அரசமைப்புச்சட்ட அலுவலகம்தான், ஆளும் கட்சியின் அலுவலகம் அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளில், பாஜக மிகவும் நாணமற்ற முறையில் ஆளுநர்களின் நியமனங்களை முற்றிலுமாக ஓர் அரசியல் நியமனமாகவே மாற்றிவிட்டது. இப்போது இருக்கும் ஆளுநர்கள் அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர்களாக இருந்தவர்களேயாவர். இந்த ஆளுநர்கள் மூலமாகவே, பாஜக ஆளாத மாநில அரசாங்கங்கள் அல்லது பாஜக-விற்கு ஆதரவாக இல்லாத மாநில அரசாங்கங்கள் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.எங்கே இவ்வாறு துன்புறுத்தப்படுவதுகூட போதுமானதாக இல்லையோ அங்கேயுள்ள அரசாங்கங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதற்காக அங்கேயுள்ள ஆளுநர்களின் அதிகாரங்கள்கூட மாற்றியமைக்கப்படுகின்றன. குறிப்பாக யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை ஆளுநர்களின் அதிகாரங்கள் இவ்வாறு மாற்றியமைக்கப்படுகின்றன. இதுஇப்போது தில்லியில் நடந்திருக்கிறது. எப்படிதுணைநிலை ஆளுநர்கள் மத்திய அரசாங்கத்தின்அரசியல் முகவர்களாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வருகிறோம். இதேபோன்று முன்பு புதுச்சேரியில் பார்த்தோம்.

மாநிலங்களவையை புறக்கணிப்பது...

எடுத்துக்காட்டாக, நாடாளுமன்றத்தின் நடைமுறையையே தங்களுக்கு சேவை செய்யும் விதத்தில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி இருக்கிறார்கள். மாநிலங்களவையில் தங்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதால், அனைத்துச்சட்டமுன்வடிவுகளையுமே நிதிச் சட்டமுன்வடிவு என்று கூறினார்கள். இப்போது நம் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சி அம்சத்தையும் மிகவும் ஆழமான முறையில் சூழ்ச்சித்திறத்துடன் அரித்துவீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அரசமைப்புச்சட்டத்தின் 110(1)ஆவது பிரிவு நிதிச் சட்டமுன்வடிவு என்பதை வரையறுக்கிறது. மாநிலங்களவை இதனை விவாதிப்பதற்கு உரிமை உண்டு. 110(2)ஆவது பிரிவு, எது நிதிச்சட்டமுன்வடிவு இல்லை என்று வரையறுக்கிறது. 110(3)ஆவது பிரிவு, ஒரு சட்டமுன்வடிவானது நிதிச்சட்டமுன்வடிவா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் மக்களவை சபாநாயகர் முடிவே இறுதியானது என்கிறது.

இப்பிரிவுகளை வரையறுக்கும்போது அரசமைப்புச்சட்டத்தின் உணர்வு (the spirit of theConstitution) மிகவும் தெளிவாகவே இருந்திருக்கிறது. எந்த இனங்கள் 110(1) மற்றும் 110(2) ஆகியவற்றின்கீழ் வரவில்லையே அது குறித்து மக்களவை சபாநாயகர் தீர்மானிக்க முடியும் என்று அது கூறியிருந்தது. ஆனால், இப்போது 110(1)ஆவது பிரிவின்கீழ் வரும் அனைத்து இனங்கள் குறித்தும் மக்களவை சபாநாயகர்தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்.மாநிலங்களவை என்பது மாநிலங்களின் உரிமைகளை விவாதிப்பதற்கான இடமாகும். ஆனால்இவ்வாறு மக்களவை சபாநாயகர் முடிவினை எடுத்துக்கொண்டோமானால், அவை மாநிலங்களின் உரிமைகளை அரித்து வீழ்த்துகின்றன.

மாநிலங்களை கலந்தாலோசிக்காமல்...
மேலும், எடுத்துக்காட்டாக, வேளாண் சட்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தச் சட்டங்கள் அனைத்துமே அத்தியாவசியமான முறையில் மாநிலப் பட்டியலில் வரக்கூடியவைகளாகும். மாநிலப் பட்டியலில் உள்ளவற்றை மத்திய அரசு சட்டமாக்க விரும்பினால், அது மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் அது மேற்கொள்ளப்படவில்லை.கல்வியை எடுத்துக்கொண்டோமானால், அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களையும் உள்ளடக்கிய மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (Central Advisory ¡õoard of Education) என்றஒன்று இருக்கிறது. இந்த வாரியம்தான் தேசியக்கல்விக் கொள்கைகள் குறித்து விவாதித்திடவேண்டும். ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கிற புதிய கல்விக் கொள்கை இதில் விவாதிக்கப்படவில்லை.
முன்னதாக, திட்டக் கமிஷன் ஒழித்துக்கட்டப்பட்டது. முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவைப்படும் திட்ட நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்துதேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் விவாதிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்த அமைப்பில், ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநில வளர்ச்சிக்கு எவ்வளவு தேவை என்று கூறி வந்தன. திட்டக் கமிஷனே ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதால், தேசிய வளர்ச்சிக் கவுன்சிலும் இல்லாது ஒழிந்தது. எனவே, மாநிலங்களைக் கலந்தாலோசிக்கும் நடைமுறைகளும், அது தொடர்பாக முடிவுகளை எடுத்து வந்த நிறுவனங்களும் கிட்டத்தட்ட கலைக்கப்பட்டுவிட்டன.

இயற்கை வளங்கள் மீதான மாநிலங்களின் உரிமைகளும் கடந்த சில ஆண்டுகளாக மத்தியஅரசின் கட்டுப்பாடு அவற்றின் மீது அதிகரிக்கப்பட்ட நிலையில் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்துக் கனிம வளங்களுமே மத்திய அரசின் சொத்துக்களே என்று கருதப்பட்டிருக்கின்றன. அதேபோன்று காட்டு  வளங்களுமாகும். இது, மிகவும்  பேரழிவினை உருவாக்கக் கூடிய விதத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திடும். அதேபோன்றே, மீன் பிடித் தொழில் சம்பந்தமாகவும் உரிமைகள் அரித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

இழிவான அரசியல் கலாச்சாரம்
அடுத்து, இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் இழிவான அரசியல் கலாச்சாரம் அமைந்திருக்கிறது. அவர்கள், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மக்கள் தங்களுக்கு எதிராக முடிவினை எடுத்திருக்கிறார்கள் என்றால், அங்கே மாநில சட்டமன்றத்திற்குத் தங்களுக்கு எதிராகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் பக்கம் தாவுவதற்காக பண பலம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் மூலம் மிரட்டல், அமலாக்கத் துறையினர் மூலம் துன்புறுத்தப்படுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இவற்றின் மூலம் தனிநபர்கள், எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள் துன்புறுத்தப்படுகின்றன. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். எனவே இதன்மூலம் மக்களின் தீர்ப்பு மீண்டும் செல்லத்தகாததாகச் செய்யப்படுகின்றன. இவ்வாறு கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்தது. இதற்கு முடிவே இல்லை. பின் தேர்தல்கள் நடத்துவதன் அர்த்தம் என்ன? பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் என்பதன்புனிதம் என்னவாயிற்று? கடந்த ஆறு ஆண்டுகளில் இவ்வாறாக 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக-விற்குத் தாவி இருக்கிறார்கள். இப்போது பொதுவாக மக்களிடம் வந்துள்ள எண்ணம் என்னவென்றால், தேர்தலில் எவர் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம், ஆனால் ஆட்சி அமைப்பது பாஜக என்பதாகும்.

                                             **************

“ஒரே தேசம், ஒரே தேர்தல்”

கேள்வி: உங்கள் கட்சி, திரும்பத் திரும்ப பாஜக-வின் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” கொள்கையைத் திரும்பத் திரும்ப எதிர்த்துத்க்கொண்டிருக்கிறதே!

சீத்தாராம் யெச்சூரி:  ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் பிரதானக் குறிக்கோள்களில் ஒன்று, தங்களுடைய “இந்துத்துவா ராஷ்டிரம்” என்பதை அமைத்திட வேண்டுமானால், அதற்கு ஒற்றை ஆட்சி முறை தேவை என்பதாகும். இந்தப் பின்னணியில்தான், அவர்கள் திரும்பத் திரும்ப, “ஒரேதேசம், ஒரே தேர்தல்” என்று கூறுவதைக் கேட்கிறோம். இது நம் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான ஒன்றாகும்.நம் அமைப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு. ஒரு தேர்தலில் ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  இந்தியாவில் எப்போதும் அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கம்  அமைக்கின்றன. கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளில் ஏதேனும் ஒன்று, ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி, தன் ஆதரவைஅக்கூட்டணிக்கு அளிப்பதை விலக்கிக்கொள்ளுமானால், அதன் மூலமாக அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்திடும் உறுப்பினர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகக் குறைந்தால், பின், அந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதற்கான ஆணையைப்பெற்றிருப்பதாகச் சொல்ல முடியாது. சட்டமன்றத்தில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனால், புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், மக்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற்றிட வேண்டும். இதுதான் ஜனநாயகம். 

                                             **************

356 ஐ ரத்து செய்ய தயாரா?

இப்போது இவர்கள் கூறும் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்பதற்கு வருவோமானால், ஐந்துஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் நடைபெறும். இதன் பொருள், தேர்தல் முடிந்தபின் ஐந்துஆண்டுகள் வரை பெரும்பான்மையுடன் ஓர்ஆட்சி நீடிக்கமுடியவில்லை என்றால், ஆள்வோர் சிறுபான்மையினராகிவிட்டாலும், மீதமுள்ள காலத்திற்கும் அது முறைகேடான முறையில் ஆட்சியில் நீடிக்கும்.  அல்லது அந்த அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அதனை மத்திய அரசு தமதாக்கிக் கொள்ளும். எந்தவொரு அரசாங்கமும் ஆட்சியில் நீடிப்பதற்கான உரிமையைஇழந்தால், அது மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டுமே தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையாது. மேலும், இவர்கள் கூறும் “ஒரே தேசம், ஒரேதேர்தல்” என்று கொண்டுவரப்பட்டுவிட்டால், 356ஆவது பிரிவை ரத்து செய்திட இவர்கள் தயாரா?  இப்போது எந்த மாநிலத்திலாவது இடதுசாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களை 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய முடியும். அங்கே மத்திய அரசு நேரடியாக ஆட்சியை நடத்த முடியும்.

                                             **************

டபுள் எஞ்சின் என்பதன் பொருள் என்ன?

கேள்வி: நிதி அயோக் என்பது மாநிலங்களின் நலன்களுக்கானதே என்று மத்திய அரசாங்கம் கூறுகிறதே!

சீத்தாராம் யெச்சூரி: நிதி அயோக் அமைப்பிற்கு வளங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான அதிகாரம் எதுவும் கிடையாது. அது வெறுமனே கருத்துகூறலாம். அவ்வளவுதான். அதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அது சில வழிமுறைகளைக் கொடுக்க முடியும். எனினும் அந்த வழிமுறைகளுக்கான வள ஆதாரங்கள் எங்கே இருக்கின்றன? திட்டக் கமிஷன் இருந்த சமயத்தில் இவை அனைத்தும் அதனால் விவாதிக்கப்பட்டது. திட்டத்தின் அளவு, யார் எவ்வளவு பெறவேண்டும் என்றுஅனைத்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது? அனைத்தும் அராஜகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.அரசின் எந்தவொரு முடிவு குறித்தும் எவ்விதமான கலந்தாலோசனைகளும் கிடையாது. பண மதிப்பிழப்பு குறித்து அறிவிக்கப்பட்டபோது, எங்கேயாவது அது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா? மாநில அரசாங்கங்களுடன் எவ்விதமான விவாதமும் நடத்தப்படவில்லை. வெறும் நாலரை மணி நேர அறிவிப்பில் மிகவும் முக்கியமான இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. பணமதிப்பிழப்பு மட்டுமல்ல. சமூக முடக்க அறிவிப்பும் இவ்வாறே மேற்கொள்ளப்பட்டது. “நாங்களே எஜமானர்கள்” என்று கூறுவது போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் பிரதமர் மோடி, “டபுள் எஞ்சின்” (“double-engine”) என்று கூறுவதன்பொருள் என்ன? மக்கள் பாஜக-விற்கு வாக்களிக்காவிட்டால், அந்த மாநிலத்தில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்பதாகும். இதுவா ஜனநாயகம்?

சர்க்காரியா கமிஷனில் மத்திய- மாநில உறவுகள் குறித்து ஒருசில கருத்தாக்கங்கள் இருந்தன.அதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. முன்பெல்லாம் நெறிமுறைகள் மீறப்பட்டதாக தாவாஎழுந்தது. ஆனால் இப்போது இந்த நெறிமுறைகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. இதுதான் முன்பு இருந்த நிலைமைக்கும் இப்போதுள்ள நிலைமைக்கும் உள்ள  வித்தியாசம்.

நன்றி:ஃப்ரண்ட்லைன், தமிழில்:ச.வீரமணி

;