articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் : அமைப்பின் கோட்பாட்டை உணர்ந்து அரும் பணியாற்றிய ஒரு பன்முகச் செயல்பாட்டாளர்..

நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இயக்கத்திற்குப் பங்களித்து வந்துள்ள பல தோழர்களை இந்தத் தொடரில் சந்தித்திருக்கிறோம். டெல்டா பிரதேசத்தின் ஒரு பகுதியான அறந்தாங்கி வட்டம்,1974 வரை தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் உருவானபோது அதனுடன் சேர்க்கப்பட்டது. இந்த அறந்தாங்கி வட்டம், காரக்கோட்டை கிராமத்தில் இயக்க வளர்ச்சிக்குப் பங்களித்தவர் தோழர் முத்துராமலிங்கம்.

 1949ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் முத்துராமலிங்கம். எஸ்.எஸ்.எல்.சி முடித்தவுடன், இனி அவர்தான் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என தந்தை சொல்லிவிட்டார். அதனால் அவரால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது. கிராமத்தில் இருந்தபோது இளம்வயதிலேயே தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக, சோவித் யூனியன் வெளியீடுகளையும், என்.சி.பி.ஹெச். வெளியீடுகளையும் படித்து மார்க்சியதத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். 

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போர்க்குணமிக்க செயல்பாடு அவருக்கு பிடித்துப்போகவே, ஒருநாள் திருவாரூரில் சிபிஎம் அலுவலகத்தைக் கண்டுபிடித்து, அங்கே போய் நின்றார். அன்றைய ஒன்றுபட்ட சிபிஎம் தஞ்சை மாவட்டக்குழு அலுவலகமாக அது இருந்தது. அங்கு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் தோழர் ஆர். ராமராஜ் இருந்தார். அவரைச் சந்தித்து கட்சியில் சேரும் விருப்பத்தைத் தெரிவித்தார். “நீ ஏன்கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர விரும்புகிறாய்” என அவர் கேட்டதற்கு,  “சாமானிய மக்களுக்காகப் பாடுபடும் சரியான கட்சி என நம்புவதால் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர விரும்புகிறேன்,” எனப் பதிலளித்துள்ளார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.ஞானசம்மந்தம் மற்றும் தலைவர்கள் பாரதிமோகன், கோ.வீரய்யன் ஆகியோரிடம் அவரை ஆர்.ராமராஜ் அறிமுகம் செய்திருக்கிறார்.

தலைவர்களின் ஆலோசனைப்படி, தனது சொந்த ஊரான காரக்கோட்டையில் 1968-ல் 25 பேர் கொண்ட விவசாயிகள் சங்கத்தையும், 9 பேர் கொண்ட கட்சிக் கிளையையும் தொடங்கினார். அன்றைய அறந்தாங்கி தாலுகாவின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் கிளை இதுதான். (சாகித்திய அகாதமி  விருதுபெற்ற  எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ‘அத்தானி கதைகள்’ என்ற நூலில், ‘மார்க்சிஸ்ட் வருகை’ என்ற தலைப்பில் தோழர் முத்துராமலிங்கம் பற்றிய பதிவு படத்துடன் இடம்பெற்றுள்ளது.) அறந்தாங்கி வட்டம் முழுவதும் பெரும்பான்மையான நிலங்கள் நிலச்சுவான்தாரர்களுக்கும் ஜமீன்களுக்கும் உடைமையாக இருந்தன. தலித் மக்கள் விவசாயத் தொழிலாளிகளாகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த கணிசமான மக்கள் குத்தகை விவசாயிகளாகவும் இருந்தார்கள். முத்துராமலிங்கம் தொடர்ந்து வீரய்யன் வழிகாட்டலில், அறந்தாங்கி வட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கத்தையும் கட்சிக் கிளைகளையும் கட்டி வளர்த்தார்.

 1970-ல் பேரளத்தில் தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், என்.சங்கரய்யா, ஏ.நல்லசிவன் ஆகியோர் கலந்துகொண்ட மூன்று நாள் வகுப்பு நடைபெற்றது. அந்த வகுப்பில் கலந்துகொண்ட முத்துராமலிங்கத்தின் சிந்தனையில் புதிய வெளிச்சம் பாய்ந்தது. அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும், வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளை உருவாக்கினால்தான் கட்சியைக் கட்டிவளர்க்க முடியும் என்ற அமைப்புக் கோட்பாட்டைப் புரிந்துகொண்டு களம் இறங்குவதற்கு அந்த வகுப்பு தனக்கு வழிகாட்டியது என்கிறார். 

1972ல் முத்துராமலிங்கம் கட்சியின் வட்டச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார். அக்காலத்தில் மணமேல்குடி ஆவுடையார்கோவில் பகுதிகளும், அறந்தாங்கி வட்டத்துக்குள் இருந்தன. 1974-ல் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இருந்து பிரிந்து, புதுக்கோட்டை மாவட்டம் உதயமானபோது, கட்சிக்கும் புதிய மாவட்டக்குழு உருவாக்கப்பட்டது. நான்கு பேர்கொண்ட முதல் மாவட்டச் செயற்குழுவில் தோழர்கள் பெ.குமாரவேல், லெட்சுமணன்,  எம்.மாரியப்பன் ஆகியோருடன் முத்துராமலிங்கமும் இடம்பெற்றார்.

 காரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டு 8 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில்தான் சிங்கவனம் ஜமீனும்இருந்தது. ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், கணிசமான நிலத்துக்கு  உடைமையாளருமான அந்த ஜமீன்தாரின் ஆதிக்கம், இந்தக் கிராமங்களில் நிலவியது. சாதியரீதியாகத் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது, தலித் மக்களின் ஆலய நுழைவுக்குத் தடை இருந்தது. இத்தகைய தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, தலித் மக்களையும், அவர்களுக்கு ஆதரவாகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மக்களையும் திரட்டிப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் வெற்றியாக இந்தத் தீண்டாமைக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டன.   அவருடைய ஊராட்சியில் மட்டுமல்ல, எடையாத்திமங்கலம் கிருஷ்ணாதிபட்டணம் போன்ற பல கிராமங்களிலும், மக்களைத் திரட்டி தீண்டாமைக் கொடுமை ஓழிப்பு போராட்டங்களை நடத்தியுள்ளார் தோழர் முத்துராமலிங்கம்.

கீழத்தஞ்சை அனுபவத்தைக் கணக்கில்எடுத்துக்கொண்டு தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியதால் அந்த இயக்கம் வெற்றி பெற்றது. இந்த அணுகுமுறையினால்தான் அறந்தாங்கி வட்டத்தில் தலித் மக்களும், தலித் அல்லாதவர்களும் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அறந்தாங்கி வட்டத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக குத்தகை விவசாயிகளுக்காக, மார்க்சிஸ்ட் கட்சி போராடியுள்ளது. ஒல்லனூர் கிராமத்தில் கம்மாய் புறம்போக்கு நிலத்தில் தலித் மக்கள் வீடுகட்டி வாழ்ந்ததோடு, சாகுபடியும் செய்து வந்தார்கள். இவர்களை வெளியேற்றிட நிலச்சுவான்தாரர்கள் முயற்சித்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு அவர்களுடைய மனையையும், நிலத்தையும் பாதுகாத்ததோடு பட்டாவும் பெற்றுத் தந்தது. இப்பகுதிக்கு ஜீவா நகர் எனப் பெயரிடப்பட்டது.  

மணமேல்குடி பகுதியில் விச்சூர் கிராமத்தில் பெரும்பான்மையாக குத்தகை சாகுபடி இருந்தது. அந்த விவசாயிகளை, விவசாய சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, குத்தகை பதிவு செய்ய கட்சி நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நிலச்சுவான்தாரர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த விளைச்சலை அறுவடை செய்ய முயன்றார்கள். கட்சியும் விவசாயிகள் சங்கமும் நிலச்சுவான்தாரர்களை எதிர்த்துப் போராடி, குத்தகை விவசாயிகளைப் பாதுகாத்தது. இதில் மோதல்கள் ஏற்பட்டு, பலவழக்குகளையும் கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. குத்தகைதாரர்களை வெளியேற்றக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து  காரக்கோட்டை கிளையின் சார்பில் நடைபெற்ற விவசாயிகள் சங்கத்தின் முதல்பொதுக்கூட்டத்தில் தோழர்கள் ஆர்.ராமராஜ், மன்னார்குடி நடராஜன் ஆகியோர் உரையாற்றியதை பசுமையாக நினைவு கூர்கிறார். 

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைபகுதியில் விசைப்படகு உரிமையாளர்களுக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே முரண்பாடு இருந்தது. அந்தப் பிரச்சனையில் முத்துராமலிங்கம் தலையிட்டு தீர்வுக்கு வழிசொன்னதன் பலனாக நாட்டுப்படகு மீனவர்கள் வாரத்தில் நான்கு நாட்களும் விசைப்படகு மீனவர்கள் மூன்று நாட்களும் கடலுக்குள் செல்வது என்ற நடைமுறை உருவாக்கப்பட்டு இன்றளவும் தொடர்கிறது.

தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பல காலம் திறம்படப் பணியாற்றிய தோழர் முத்துராமலிங்கம் கட்சி அணிகளைத் தாண்டி, வெகுமக்களிடையேயும் அவர்களின் அன்பிற்குரிய தலைவராக விளங்கினார். காவிரி கல்லணைக் கால்வாயின் கடைமடைப் பகுதி புதுக்கோட்டை மாவட்டத்தின்கறம்பக்குடி அறந்தாங்கி ஆவுடையார்கோவில் வட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் அளவில் உள்ளது. இந்தப் பகுதியின் ஒட்டுமொத்த விவசாயிகளின் சார்பாக உருவாக்கப்பட்ட காவிரி பாதுகாப்பு குழுவின் செயலாளராக முத்துராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பகுதியின் சிறப்புத்தன்மையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒரு பிரிவாக ஏரிப்பாசன விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக இன்றளவும் செயல்பட்டு வருகிறார். 2014ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மனோகரனை நாகுடிக்கு நேரடியாக அழைத்து விவசாயிகளின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வைத்தார்.

இப்படிப்பட்ட ஈடுபாடுகளுக்கு வேறொருபரிசும் கிடைத்தது. ஆம், சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதால் ஆத்திரமடைந்த ரவுடிகள் 2009ல் சிங் கவனத்தில் முத்துராமலிங்கத்தின் மீது கொலை வெறியோடு பாய்ந்து தாக்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சை பெற்று மீண்டுவந்தார். இப்படிப்பட்ட பல்வேறு மறக்க முடியாத சம்பவங்களை அவர் சந்தித்திருக்கிறார்.பருவமழை பொய்த்து நெற்பயிர் கருகியதோடு கடன் தொல்லையையும் தாங்க முடியாதவராக இருந்த கரகத்திக்கோட்டை ரெங்கசாமி என்பவர் 2015ல் தற்கொலை செய்துகொண்டார். அவரின் குடும்பத்திற்கு  நிவாரணம் கேட்டு சட்டமன்றத்தில் சிபிஎம் உறுப்பினர்களைப் பேச வைத்து இழப்பீடாக ரூ.3லட்சமும், கவிஞர் வைரமுத்து மூலமாக ரூ.1லட்சமும் பெற்றுத்தந்தார். இவ்வாறு பாதிக்கப்படுகிற ஏழை, எளிய மக்களுக்கு அரசிடமிருந்து சட்டப்பூர்வமான உதவிகளை பெற்றுத்தருவதில் இன்றளவும் சளைக்காமல் உழைத்து வருகிறார்.வெள்ளாற்றில் டிப்பர் லாரிகளுக்கு மணல் எடுக்க அனுமதி, மாட்டுவண்டிகள் சிறைப்பிடிப்பு என மாட்டுவண்டித் தொழிலாளிகள் அவதிப்பட்ட போது 500க்கு மேற்பட்ட மாட்டு வண்டிகளை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டார். அந்தப் போராட்டத்தின் வெற்றியாக மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு என தனி மணல் குவாரி அமைக்கப்பட்டது.

புறம்போக்கு நிலங்களில் 2,000 வீடுகளை இடிக்க அரசு உத்தவு பிறப்பித்தது.பொக்லின் எந்திரங்கள் வீடுகளுக்கு முன்பாகவந்து நின்றன. அப்போது தோழர் முத்துராமலிங்கம் அந்த வீடுகளில் வசிக்கும் மக்களோடு “மாற்று இடம் கொடு” என்ற கோரிக்கையை எழுப்பியவாறு பொக்லின் எந்திரங்களின் முன்பாக படுத்துக்கொண்டார். அந்தப் போராட்டத்தால் அறந்தாங்கி வட்டத்தில் இரண்டாயிரம் ஏழை எளியோரின் வீடுகள் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டுள்ளன.முத்துராமலிங்கம் – முத்துலட்சுமி திருமணம் 1973ஆம் ஆண்டில் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஆனந்தி என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். தோழர் முத்துலட்சுமி மாதர் சங்கத்தில் பல ஆண்டுகள் செயலாற்றியிருக்கிறார். அதனுடைய மாவட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவர்களின் பிள்ளைகள் கட்சி ஆதரவாளர்கள். தோழர். முத்துராமலிங்கத்தின் குடும்பம் கட்சிக் குடும்பம்.

மக்களுக்காக சமூகப் போராட்டங்களை மட்டுமல்லாமல், சித்த மருத்துவம் பயின்றுஅதன்மூலம் அவர்களது உடல் நலனுக்கான போராட்டங்களையும் நடத்தியவர் முத்துராமலிங்கம். அவருடைய இந்தச் சேவையும் சேர்ந்து மக்களுக்குக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.இயற்கை விவசாயத்திலும் மிகுந்தநாட்டமுடையவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் புகழப்பட்ட நம்மாழ்வாருடன் நெருங்கிய நட்பிலும் தொடர்பிலும் இருந்தவர். அவரை அழைத்து மாவட்டத்தில் 25 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருக்கிற தோழர் முத்துராமலிங்கத்திற்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பு போல் செயல்பட முடியவில்லை என்ற வருத்தம்தான் இருக்கிறது. அறந்தாங்கி வட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் கிளையைத் துவக்கியது மட்டுமல்லாமல் விவசாயிகள் சங்கம், விவசாயத்தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட வர்க்க வெகுமக்கள் அமைப்புகளை உருவாக்கினார். கிராமப்புறங்களில் அடிப்படையான இயக்கம்விவசாயிகளைத் திரட்டுவது என்ற புரிதலோடு தன்னுடைய சொந்தக் கிராமத்தில்விவசாயிகள் சங்கக் கிளையை உருவாக்கினார். அடுத்தடுத்த கிராமங்களிலும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்முறைகளுக்கான அங்கீகாரமாக சங்கத்தின்மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

அவர் சுறுசுறுப்பாக செயல்பட்ட காலத்தில், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய மூன்று ஊர்களிலும் இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றினார். இன்றுகட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ள கவிவர்மன், செயற்குழு பொறுப்பில் உள்ள சி.சுப்பிரமணியன், கே.செல்வராஜ் போன்றவர்களையும், தலைமுறை இடைவெளியில்லாமல் பல இளம் தலைமுறையினரையும் கட்சியின் முன்னணி ஊழியர்களாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் மா.முத்துராமலிங்கம்.

கட்சியின் வட்டச்செயலாளராகவும், மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய முத்துராமலிங்கத்தின் மற்றொருமுக்கியமான பங்களிப்பு, கூட்டுத் தலைமையை உருவாக்குவதில் உறுதியாக இருந்தார் என்பது. எல்லாப் பிரச்சனைகளிலும் அவர் முன்முயற்சி எடுத்திருப்பார், மையமான பாத்திரம் வகித்திருப்பார். இருப்பினும் கூட்டுமுடிவும் கூட்டுத் தலைமையும் ஆளுமை செலுத்தியது.தேசத்தின் உயிர்நாடியாகிய கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் அமைப்பை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் தோழர் முத்துராமலிங்கத்தின் அணுகுமுறை இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தோழர் முத்துராமலிங்கம் ஆற்றி வரும் பணி பாராட்டத்தக்கது, பின்பற்றத்தக்கது.

==ஜி.ராமகிருஷ்ணன்==

;