articles

img

விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம்; வரதட்சணைக்கு முடிவு கட்டுவோம் - பெ.சண்முகம்

விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம்; வரதட்சணைக்கு முடிவு கட்டுவோம்

ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் மீதான பல்முனை தாக்கு தல்களில் ஒன்று வரதட்சணை. இது  கட்சி முழுவதுமே கவனத்தில் கொள்ள  வேண்டிய அரசியல் பிரச்சனையாகும். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படை யில் தான் “வரதட்சணைக் கொடு மைக்கு முடிவு கட்டுவோம்” என்ற தலைப்பில் சிறப்பு மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப்டம்பர் 9ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் நடத்தவிருக்கிறது. இந்த உன்னத நோக்கத்திற்கு தமிழக மக்களின் பேராதரவை திரட்டும் நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியமான பணி என்பது அடிப்படை வர்க்கங்களிடையே செயல்படு வதாகும். நமது சமூகத்தின் மிகவும் ஏழ்மையில் சுரண்டப்படும் பிரிவினரை அணி திரட்டுவதற்கே கட்சி முன்னுரிமை அளிக்கிறது. பெண்களிடையே நமது  பணியை பொறுத்தவரை, ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்கள் பிரிவுகளைச் சேர்ந்த பெண் களின் வர்க்கப் பிரச்சனைகளை கையிலெடுப்ப தாகும். குறிப்பாக, உழைப்புச் சுரண்டல், பாலின ஒடுக்குமுறை, சமூக ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சனைகளையும் கையிலெடுக்க வேண்டும். எனவே, கட்சியின் முக்கியமான பணிகளில் ஒன்றாக வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும், அது தொடர்பான வன்கொடு மைகளுக்கு எதிராகப் போராடுவதும் ஆகும். இந்த உணர்வை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரு வாக்க வேண்டும். கம்யூனிஸ்ட் என்ற முறையில் அவர்களின் சிறந்த நடத்தைகளின் மூலம் குடும்ப உறுப்பினர்களிடையே இதற்கான ஆதரவை உருவாக்க முடியும். நுகர்வுக் கலாச்சாரமும்  எழுதப்படாத விதியும் திருமணச் சடங்குகள் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதில் முக்கிய இடம்பெறும் தாலி வெவ்வேறு விதமாக இருக்கிறது.  கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பலவித மாக இருக்கின்றன. ஆனால், எல்லா சாதியிலும் பொதுவான தவிர்க்க முடியாத விசயமாக இருப்பது வரதட்சணை. பொருளாதார நிலையைப் பொறுத்து அதன் அளவு மாறுபடலாம். ஆனால், அது கட்டாயம் என்றாகிவிட்டது. நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து விட்ட இக்காலத்தில், ஆடம்பரமாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பல பொருட்கள் இப்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியம் என்றாகிவிட்டது. இந்நிலையில், மணமக்கள் புதிதாக ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்வதற்கான அனைத்துப் பொருட் களையும் பெண் வீட்டார் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக சமூகத்தில்  ஆகிவிட்டது. அன்றாடம் உணவுக்கே அல்லாடு கின்ற குடும்பமாக இருந்தாலும் கடன்பட்டாவது பெண்ணின் திருமணத்திற்கு சீர்செய்தே தீர வேண்டும் என்பது தான் இன்றைய எதார்த்த நிலை. திருமணம் நிச்சயம் செய்கிறபோதே இவ்வளவு நகை, ரொக்கம், வாகனம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்று பேசி முடிவு செய்கின்றனர். ஏற்றுக்கொண்டபடி செய்ய முடியாத போது அல்லது கூடுதலாகக் கேட்டு கட்டாயப்படுத்தும் போது, கனவுகளோடு வந்த பெண்ணை திருப்பி அனுப்பு வது, புகுந்த வீட்டாரின் சித்ரவதையை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அல்லது அந்தப் பெண்ணை கொலை செய்வது போன்ற கொடுமைகள் நடத்தப்படுகின்றன.  நல்ல உயர் படிப்பு படித்து பணிக்குச் சென்று மாத ஊதியம் பெறும் பெண்களும் இத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். வீட்டில் நடைபெறும் இந்த வன்முறை பெண்களின் வாழ்க்கை, உடல் நலம் மற்றும் மன நலத்தையும் பாதிக்கிறது. வரதட்சணையால் முன்பு போல், இப்போது அதிகமாக கொலை, தற்கொலைகள் நடப்பதில்லை, ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அதற்கான காரணம் வரதட்சணை என்பது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது தான். வரதட்சணை தொடர்பான வன்முறைகள் குற்றமே தவிர,  வரதட்சணை வாங்கும் வழக்கத்தை குற்றமாக கருதுவதில்லை. மகாத்மா காந்தி கூறும்  தெளிவான தீர்வு  வரதட்சணை குறித்து இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் காந்தி அவர்கள் “இந்த முறை  தொலைய வேண்டும். மணம் பிள்ளை - பெண்ணின் பெற்றோர் தம்மிடையே செய்து கொள்ளும் பணப் பேரமாயிருப்பது நிற்க வேண்டும். இம்முறை சாதிக்கட்டுப்பாட்டுடன் நெருங்கிய தொடர்புள்ளதா யிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு சிலரிடையிலிருந்தே பெண்ணையும், பிள்ளையையும் பொறுக்கியாக வேண்டியிருக்கும் வரை யார் எவ்வளவு கண்டித்தாலும் இம்முறை இருக்கத்தான் செய்யும். ஆகையால், இத்தீமையை போக்க வேண்டுமானால் பெண்களோ, பையன்களோ, அவர்களின் பெற் றோரோ சாதிக்கட்டுக்களை தகர்த்தாக வேண்டும். இதெல்லாம் நடப்பதற்கு நாட்டின் இளந்தலைமுறையினரின் மனப்போக்கை புரட்சிகரமாய் மாற்றக் கூடிய கல்வியளித்தல் அவசியம்.” - ஹரிசன் 23.5.1936. வரதட்சணைக்கு காரணமான வேரையும், அதை ஒழிப்பதற்கான தீர்வையும் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியார் தெளிவாக முன்வைத்துள்ளார். ஆடம்பரமாக திருமணத்தை நடத்துவது, அபரிமிதமாக செலவழிப்பது, திருமண விருந்தில் எண்ணற்ற உணவு வகைகளை இடம்பெறச் செய்து உணவை வீணாக்குவது போன்றவற்றிற்காக பெரும்  தொகைகளை கடனாகப் பெற்று அதன் விளைவாக கடன் வலையில் சிக்கி வாழ்நாள் முழுவதும் மீள முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. காதல் திருமணங்களிலும்... வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான உரிமையை அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. ஆனால் சாதியப்  பிரிவினைகளால் தங்களது சொந்த ஜோடியை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மீறி சாதி மறுப்பு திருமணங்களை செய்து கொண்டால் சாதிப் பெருமையை காப்பாற்றுவது என்ற பெயரில் சாதி ஆணவக் கொலைகள் நடை பெறுகின்றன. காதல் திருமணங்களில் வரதட்சணை  என்பது கட்டாயப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த முடியும். அதிலும் பெற்றோர் பெரிய  மனதுடன் சம்மதிக்கும் குடும்பங்களில் வரதட்சணை யை நிபந்தனையாக்கும் நிலைமையும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பெண் சிசுக்கொலை வரதட்சணையின் கொடூரமான மற்றொரு விளைவு என்னவென்றால், பெண் சிசுக்கொலை. கேட்கும் வரதட்சணை கொடுக்காமல் பெண் கஷ்டப்பட்டு சாவதை விட கருவிலேயே அழிப்பது அல்லது பெண் குழந்தை பிறந்தவுடன் கொல்வது என்பது நிகழ்ந்தது. அதை தடுக்கும் வகையில் “தொட்டில் குழந்தைத் திட்டம்” போன்றவற்றை தமிழ்நாடு அரசு துவங்கியது. ஆனால், அதற்குப் பிறகும் சிசுக்கொலை நின்றுவிடவில்லை. ஏனென்றால், நாம் பெற்ற குழந்தை எந்த சாதிக் காரர்களிடம் எப்படி வளருமோ என்று சாதிப்பெருமை - தூய்மையைப் பாதுகாப்பது என்ற பெயரில் இத்த கைய கொலைகள் தொடரவே செய்தன. எனவே, இது ஒரு சமூகத் தீமை என்ற புரிதல் சமூகத்திற்கு தேவை. தேவை முழக்கம் அல்ல,  கறாரான அமல் லஞ்சம் வாக்குவதும் குற்றம் - கொடுப்பதும் குற்றம் என்பது அரசு அலுவலகங்களில் காட்சி யளிக்கும் ஒரு முழக்கம் என்பதை தவிர வேறில்லை!  அதேபோல் தான் “வரதட்சணை வாங்குவதும் குற்றம் - கொடுப்பதும் குற்றம்” என்று சட்டம் சொல்வதும்.  இவையெல்லாம் பிரச்சாரத்திற்கான ஒரு முழக்கமே தவிர பின்பற்றுவதற்கு அல்ல.! என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். தப்பித் தவறி மாட்டிக் கொண்டாலும் மேற்படி குற்றங்களிலிருந்து சட்டத்தின் சந்து - பொந்துகளில் நுழைந்து தப்பித்து விடலாம் என்ற தைரியம் மேற்படி குற்றங்களை செய்ய வைக்கிறது. ஆகவே, வரதட்சணை ஒழிப்புச் சட்டம் கறாராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறை இதில் அக்கறையற்று இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள் உறுதியேற்பு எனவே, வரதட்சணை எனும் சமூகத் தீமைக்கு  எதிராக தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதும், குறிப்பாக, இளைஞர்களிடையே “வரதட்சணை வாங்க மாட்டோம்” என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளை பொதுவெளியில் மேற்கொள்வது, பெண்களும் “வரதட்சணை கொடுக்க மாட்டோம்” என்ற உறுதியை எடுப்பது, இதற்கான சட்டத்தை முழுமையாக அமல்படுத்தப் போராடுவது,  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக நிற்பது,  போன்றவற்றின் மூலம் இதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம். வரதட்சணைக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம்! சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் பெண்களை அணி திரட்டுவதில் இதுவும் முக்கியப் பணியே!.