articles

img

புதுக்கோட்டை கண்டிராத பேரணி பிப்.4 : அணி திரள்வீர்! - எஸ்.சங்கர்

கடந்த நான்கு ஆண்டுகாலத்தில் நூறு நாள் வேலைத்திட்டம், குடிமனைப் பட்டா, குடிமனை, சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றை ஒன்றிய அரசு, மாநில அரசுகள்  உறுதியாக அமல்படுத்த வேண்டுமென்பதற்காகவும், நூறு நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிக்கும் விரிவுபடுத்திடவும் மாநில அரசு அறிவித்த நகர்ப்புற வேலைத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்திடவும் கோரி லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு போராடிய சங்கம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமாகும். தமிழ்நாட்டில் தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் ஓரளவு செயல்படுகிறது என்றால் அதற்கு தொடர்ச்சியான போராட்டம் நடத்தியது அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்தான். 

இன்று விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏராளமான பிரச்ச னைகள் உள்ளன. விவசாய வேலைகளில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு நியாயமான சட்டக் கூலி கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகளுக்கு முறையாக, சரியான, தரமான கல்வி கிடைக்கவில்லை. அனைத்துப்பகுதி மக்களுக்கும் மருத்துவம் பெரும் கனவாகவே உள்ளது. இதற்கான குரலை  ஒலிப்பது விவசாயத் தொழிலாளர் சங்கமும் செங்கொடி இயக்கமும்தான். இந்தப் பின்னணியில்தான் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க உழைக்கும் மக்களின் போராட்டக் களம் கண்ட புதுக்கோட்டைமண்ணில் நடைபெற உள்ளது. தமிழரின் நாகரீகக் கூறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் அதிக எண்ணிக்கையில் குகைக் கோயில்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் சின்னங்கள், ரோமானிய பொன் நாணயங்கள் கிடைத்துள்ள மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. 1947-இல் நாடு விடுதலை பெற்று நாடு  முழுவதும் உள்ள அனைத்து சமஸ்தானங்களும் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் இணையவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானத்தை 03.03.1948-இல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைத்தனர்.  1950 காலங்களில் உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கையை முன்வைத்து செங்கொடி இயக்கம் போராட்டத்தை துவக்கியது. இது, புதுக்கோட்டை கிராமங்கள் முழுவதும் தீயாய் பரவியது. தோழர்கள் ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத், அனந்தநம்பியார் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் போராட்டங்களுக்கு தலைமையேற்று வழிகாட்டினர். 1957, 1962 தேர்தலில் ஆர்.உமாநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் சதூர்யமான நாடாளுமன்ற நடவடிக்கைகளால் 14.01.1974இல் புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான அரை நூற்றாண்டு களுக்கு மேலாக தொழிற்வளர்ச்சி, விவசாயத்திற்கு நிரந்தர நீர்ப்பாசனம் கேட்டு  அரசின்  கவனத்தை ஈர்க்கும் வகையில் செங்கொடி சங்கங்கள் செயலாற்றி  வருகிறோம். இப்போராட்டங்களுடன் தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பாதுகாத்திட, ஆயிரக் கணக்கான மக்களை திரட்டி போராட்டங்களை அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. இதன் தாக்கத்தால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில்  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஒருவரான தோழர்.எம்.சின்னத்துரை வெற்றி பெற்றுள்ளார். இப்படியான போராட்டங்கள் நிறைந்த மாவட்டமான புதுக்கோட்டையில்தான் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின்  10-ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 4,5,6 தேதிகளில் இம்மாநில  மாநாட்டை சிறப்பாக  நடத்துவதற்கு விதொச கிளைகள், ஒன்றியக்குழுக்கள், மாவட்டக்குழு, சகோதர  அமைப்புகள் அனைத்தும் உற்சாகமாக நடத்திட உள்ளன.  பிப்ரவரி  4-ஆம் தேதி  நடைபெறும்  பேரணி இதுவரை இம்மாவட்ட மக்கள் கண்டிராத பேரணியாக அமையப்  போகிறது. இதில் பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்பீர்!

;