சில நிகழ்வுகள் மனதளவில் நமக்குப் பாதிப்புக் களை உருவாக்குகின்றன. காரணம் உணர்வு டன் எந்த நிகழ்வையும் பார்ப்பதே. பலர் அதை சாதாரணமாக கடந்து விடுகின்றனர். நம் உணர்வு களை உலுக்கிய அந்த நிகழ்வுகளும் சிறிது காலம் கழித்து பொதுச் சிந்தனையிலிருந்து மறக்கடிக்கப்படு கின்றன. சாதாரண மக்களை அவமானப்படுத்தும் போதும், பொதுவெளியில் அவர்களை உதாசீனப் படுத்தும்போதும் மனம் நம்மிடம் ஏதோ கூறிக் கொண்டேயிருக்கிறது. அதன் விளைவாக ரௌத்திரம் கொள்ள வேண்டியிருக்கிறது. தற்பொழுது சமூக ஊடகங்கள் கண்காணிப்பில் இருப்பதால் இந்த நிகழ்வுகள் அரங்கேறும்போது உடனுக்குடன் பகிரப்படுகிறது.
பிரபுத்துவ மனோபாவம்
அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்போர் தங்கள் தாழ்நிலைச் செயல்பாடுகளில் ஈடுபடும் போது அவர்கள் மட்டும் தங்களைத் தாழ்த்திக் கொள்ள வில்லை, அவர்கள் வகிக்கின்ற பதவிகளையும் தாழ்மையுறச் செய்து விடுகின்றனர். பதவிகள் உயர்வதும் தாழ்வதும் தாங்கள் வைத்திருக்கும் அதிகா ரங்களால் அல்ல, அந்த அதிகாரங்களைப் பயன் படுத்திச் செய்யும் உயர்ந்த பணிகளாலும் சேவைகளா லும்தான். சமீபத்தில் ஒரு உயர் அதிகாரி தன் காலில் அணிந்திருந்த காலணியை தன் உதவியாளரை அழைத்து எடுக்கக் கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது சமூக ஊடகங்களில். அவர் மட்டும் அதைச் செய்யவில்லை, மற்றொரு பெரிய பதவியில் இருக்கின்றவரும் அதையே தான் செய்தார். செய்தது அவர் கட்சியின் தொண்டர். அடுத்து ஒருவர் காவல்துறை அதிகாரி தவறு செய்கின்றவர்களுக்கு பயத்தை உருவாக்க வேண்டும் என்று குற்றம் செய்ததாக எண்ணி கொண்டுவரப்பட்ட வர்களின் பற்களைப் பிடுங்குகின்றார். இவர்கள் முதலில் தங்களை யார் என்று எண்ணிக் கொள்கிறார் கள் என்பதுதான் நம் கேள்வி. இவர்கள் அமைச்சராக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவரும் மக்கள் சேவகர்கள் என்ற சிந்த னையோடு, நாம் அமர்ந்து இருக்கும் குளிர்சாதன வசதி உள்ள அறை, நாம் செல்லும் மகிழுந்து, நாம் அனு பவிக்கும் சௌகரியங்கள் வசதிகள், நாம் வாங்கும் சம்பளம் என்பது சாதாரண மனிதர்கள் தந்த வரிப் பணம் என்று நினைத்திருந்தால், அவர்களின் சிந்தனை யில் இந்த பிரபுத்துவ மனோபாவம் வந்திருக்காது.
பெரியார் செயல்பாடுகளின் அடிப்படை சமத்துவம்
மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளாத எந்த மனிதரும் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர் உயர்ந்தவராக கருதப்பட மாட்டார். மூத்திரப் பையுடன் அலைந்து கலகக்காரர் என்று பெயர் எடுத்த பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் சமத்துவத்திற்காகத்தான் போராடினார். அந்த மண்ணில் இந்த நிகழ்வுகள் நடந்தேறுகிறது என்றால் பெரியாரை நாமும் எதோ பிராமண எதிர்ப்பாளர், மத எதிர்ப்பாளர் என்ற பார்வை வைத்து செயல்படும் மனிதராகவே நாம் வாழ்கி றோம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கி றது. அவர் சமூக சமத்துவத்திற்காக, ஆண் பெண் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடினார். அவருடைய ஒட்டுமொத்த செயல்பாடுகளின் அடிப்படை சமத்துவம். அவர் ஈரோட்டில் நகர் மன்றத் தலைவராக இருந்தபோது துப்புரவு பணியை மேம்ப டச் செய்தவர். துப்புரவு என்பது தெருவைக் கூட்டுவ தில் மட்டுமல்ல துப்புரவுப் பணியாளர்களின் நலன் களை காப்பதில் என்று செயல்பட்டவர். துப்புரவை யும் துப்புரவுப் பணியாளர்களையும் பிரிக்க முடியாது. இன்று துப்புரவையும், துப்புரவுப் பணியாளர்களை யும் இணைத்துப் பார்க்கும் பார்வை வைத்திருப்பதால் தான் துப்புரவை நாம் சாதிக்க முடியவில்லை. அவர் ஒரு பிரச்சாரகர் மட்டுமல்ல, ஒரு முன் மாதிரி செயல் பாட்டாளர். அவரது பார்வை இன்று நம் எவரிடமும் இல்லை. நாம் வாழுமிடம் தூய்மையாக இருக்க வேண்டும், அதை துப்புரவுப் பணியாளர்கள் செய்ய வேண்டும் என்று கருதுகின்றோம். ஆனால் அவர்க ளின் பாதுகாப்பை, அவர்களின் மேம்பாட்டைப் பற்றி எந்தக் கவலையும் அற்று நாம் வாழ்கிறோம். அது மட்டு மல்ல, அந்தப் பணியின் முக்கியத்துவம் என்பது அவர்கள் வேலை செய்ய இரண்டுநாள் வர மறுத்தால் என்ன நடக்கும் என்பது புரியும். துப்புரவுப் பணியாளர் களை நாம் எப்படி வைத்துள்ளோமோ அதுபோல் தான் நம் தெருக்களும் வீடுகளும் இருக்கும்.
இழிவாக, ஏளனமாக கொச்சையாகப் பேசாதீர்...
துப்புரவை துப்புரவுப் பணியாளர்களிடமிருந்து பிரிக்க முடியாது என்று பெரியார் துப்புரவுப் பணியா ளர்களின் துயர் துடைத்தவர். இதை நம் உள்ளாட்சித் தலைவர்கள் ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்று நமக்குப் புரியவில்லை. இன்று நாம் அவர்களை மேம்படுத்துவதற்குப் பதில் அவர்களை அவமானப் படுத்தக் கற்றுக் கொண்டு விட்டோம். உள்ளாட்சியில் ஒரு மிக முக்கியமான பணி சமூக நீதி காப்பது. அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் நம் உள்ளாட்சிப் பிரதிநிதி கள் இருப்பதால்தான் உள்ளாட்சியில் பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களை கொச்சை மொழியில் பேசு வது, பாலியல் சீண்டல் செய்வது என அனைத்தையும் அலுவலர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளும் செய்கின்றனர். சென்ற ஆண்டு உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் துப்புரவுப் பணியாளர்கள் வைத்த கோரிக்கை இதை உணர்த்துகிறது. “எங்களை இழிவாகவும், ஏளனமாகவும், கொச்சையாகவும் பேசுவதை நிறுத்த அரசின் உடனடி நடவடிக்கை தேவை” என்று அரசிடம் கோரிக்கை மனுக் கொடுத்தனர். உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சியில் பணி செய்யும் அலுவலர்கள் எப்படி யெல்லாம் துப்புரவுப் பணியாளர்களிடம் நடந்து கொள்கிறார்கள் நடத்துகின்றார்கள் என்பதை ஒரு பட்டியலிட்டு ஊர் பெயர், நடந்த சம்பவம், அதன் விளைவு அனைத்தையும் பட்டியலிட்டு வாரப் பத்திரிகை ஒன்றில் செய்தியாக வெளியிட்டிருந்தனர். அது மட்டுமல்ல பல காணொளிகளையும் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் ஆதாரமாகப் பலர் பதிவிட்டி ருந்தனர். இவர்களுக்கு குறைந்தபட்சக் கூலி கொடுப்ப தில்கூட சிக்கலை உருவாக்குகின்றனர் நம் அதிகாரி கள் என்றும் செய்தி வெளியிட்டிருந்தனர்.
ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் படித்த பட்டதாரி. அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தனக்கு இழைத்துவரும் இன்னல்கள் பற்றி பட்டியலிட்டு காவல்துறையிடம் புகார் செய்கி றார். தன் பணியைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் தருகிறார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியாகக் கொடுக்கிறார். இவைகளெல்லாம் ஒரு ஆழமான செய்தியை நமக்குச் சொல்கின்றன. சாதியம் என்பது நகரமா னாலும் கிராமமானாலும் சரி, அரசியல் ரீதியாக தூண்டப்படுவதால், தீண்டாமையின் வடிவங்கள் மாறு கின்றன. ஆனால் தீண்டாமை தொடர்கின்றன. நாம் அனைவரும் அவற்றைக் காணாதவர்கள்போல் அதைக் கடந்து செல்கிறோம் உணர்வற்று. இது பெரியார் மண், சுயமரியாதைக்கான மண் என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேச முடிந்ததே தவிர அந்த தீண்டாமையை அகற்ற நமக்கு உணர்வில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்து கின்றன.
பூலோக சொர்க்கம்...
இதைப்புரிந்து கொள்ள ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அந்த நிகழ்வை விளக்குகின்றேன். ஒரு பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பயிற்சி காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. அதில் பங்கேற்க வருகை தந்தனர் பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள். அந்த ஐந்து நாள் பயிற்சி நிறைவு பெறும்போது அதில் பங்கேற்ற பயிற்சி பெற்றவர்களில் ஒரு சிலர் பயிற்சி பற்றி ஓர் அனுபவப் பகிர்வு செய்வர். இந்த பயிற்சிக்கு வந்திருந்தவர்களில் ஒரு பெண் தலைவர் ஆர்வம் மிக்கவராக மேடைக்கு வந்து ஒலிபெருக்கி முன் நின்றார். ஏதோ பேச வந்தார். பேச இயலவில்லை. பேசுங்கள் என்று மேடையில் இருந்தவர்கள் கூறியதும் அவர் “நான் இந்தப் பதவி என்னவென்றே தெரியாது இந்தப் பதவிக்கு வந்து விட்டேன். தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவுடன் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதின்பேரில் இந்தப் பயிற்சிக்கு வந்தேன். இங்கு வந்தவுடன் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்தி ருந்தது. காரணம் நான் இங்கு வந்தவுடன் என்னை “மரியாதையுடன் வாங்க தலைவர்” என்று அழைத்தனர். என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு மரியாதை யைப் பெற்றதில்லை. எங்கள் ஊரிலோ, எங்கள் குடும் பத்திலோ, அரசு அலுவலகங்களிலோ இந்த மரியாதை நான் பெற்றதில்லை. காரணம் நான் பிறந்த ஜாதி அப்படி. இந்த ஐந்து நாட்களும் எந்த பாகுபாடுமின்றி என்னை நடத்தியது, எனக்கு உணவளித்தது, என்னைக் கவனித்தது, என்னை வேறொரு உணர்வு நிலைக்குக் கொண்டு சென்றது. இப்படி என் மக்கள் அனைவருக்கும் இந்த மரியாதை கிடைத்தால் அது தானே எம் பூலோக சொர்க்கம்” எனக் கூறினார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த காந்தியவாதியான எம் துணைவேந்தர் கண்ணீர்விட்ட வண்ணம் அந்த அறையில் அமர்ந்திருந்தார். அன்று இரவு என் இல்லத்திற்கு வந்த துணைவேந்தர், என்னிடம் நீங்கள் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள், இதைத் தான் காந்திய நிறுவனங்கள் செய்ய வேண்டும். இவர்களை தயார் செய்வதும், அதிகாரப்படுத்துவதும் தான் நம் முதல் பணியாக இருக்க வேண்டும் எனக் கூறினார். இதற்கான ஒரு சிந்தனைச் சூழலை, நடத்தைச் சூழலை எங்கள் பயிற்சி நிறுவனத்தில் உரு வாக்கி வைத்திருந்ததால் இது சாத்தியமானது என்றேன்.
சுயமரியாதை இழப்பை அனுமதிக்காதீர்கள்
இந்தச் சூழலை புரிந்துகொள்ள இன்னொரு நிகழ் வினை விளக்கினால் நாம் இந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமீபத்தில் ஒரு கட்சியின் உள்ளாட்சித் தலைவர்க ளுக்கு ஒரு பயிலரங்கு நடைபெற்றது. அங்கு அந்த நிகழ்வுக்கு வந்த அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் அந்த பயிலரங்கில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதி களுக்கு ஒரு விளக்க உரையாற்றினார். அப்போது, “நாம் சார்ந்திருக்கின்ற இயக்கம் இன்று ஆட்சியில் இல்லை, எனவே நாம் கூறுவது அனைத்தும் நடந்து விடும் என்று எண்ணிச் செயல்பட முடியாது. ஆனால் நாம் மற்றவர்கள்போல் பொதுமக்களை குறிப்பாக ஏழைகளை, விளிம்புநிலை மக்களை, பெண்களை மதித்து நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். உங்களி டம் வருகின்றவர்களை முதலில் பேச அனுமதியளி யுங்கள், பொறுமையாக கூர்ந்து கவனியுங்கள், அதை தீர்க்க முடிந்தவரை முயலுங்கள். ஆனால் அவர்க ளின் சுயமரியாதைக்கு எந்த குந்தகமும் விளைந்து விடாது பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரையும் ‘வா’ ‘போ’ என்று ஒருமையில் பேசாதீர்கள். அனைவ ரையும் மரியாதையுடன் நடத்த கற்றுக் கொள்ளுங் கள். நம் கட்சித் தோழர்கள் பணியாற்றும் இடங்களில் யாருடைய சுயமரியாதை இழப்பையும் அனுமதிக்கா தீர்கள்” என சமத்துவத்தைப் பற்றி ஒரு வகுப் பெடுத்தார்.
மேற்கூறியவற்றை நாம் இங்கு விளக்குவதற்குக் காரணம் நாம் வாழும் சமூகம், சாதியத்திலும் மதத்தி லும் அடுக்குகளாக இயங்குகின்றது. அத்துடன் பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகமாகவும் இருக்கிறது. எனவே இந்தச் சூழல் என்பது சமத்து வத்திற்கு எதிரானது. எனவே சமூகத்தை ஜனநாயகப் படுத்துவது என்பதுதான் நெருப்பாற்றில் நீச்சலிடுவது. அந்தப் பணியை நம் அரசியல் கட்சிகள் செய்ய வில்லை. அரசியல் சாசனம் காட்டிய பாதைக்கு நேர் எதிர் திசையில் நம் அரசியல் கட்சிகள் பயணித்து விட்டன. பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்தபோதும் சில அடிப்படைகளில் அரசு சாதிக்க இயலவில்லை. அதன் விளைவுதான் இன்று பார்க்கும் அவமானச் செயல்பாடுகள்.
இவைகளுக்கு முடிவு கட்ட தீர்க்கமான முடிவு எடுக்க அரசு முன்வர வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு வேகமாக குரல் கொடுக்க வேண்டும். பொதுக் கருத்தாளர்கள் தங்கள் பதிவினை பாகுபாடற்று பொது வெளியில் செய்திட வேண்டும். உள்ளாட்சியை அதன் பணிகளில் ஒன்றாகிய சமூகநீதிக்குச் செயல் பட முடுக்கிவிட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரசு அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கட்டாயம் அவர்களுடைய நடத்தையில் மாற்றத்திற்கு சமத்துவம், சுயமரியாதை, மனித உரிமைகள் பற்றி பயிற்சியளிக்க வேண்டும். இதை ஓர் போர்க்கால நடவடிக்கையாகவே மாநில அரசு செய்திட வேண்டும். ஏனெனில் நம் அதிகார வர்க்கத்திடம் பிரபுத்துவ மனோபாவம் இன்றும் சிந்தனைப்போக்கில் இருப்ப தையே நாம் பார்க்கிறோம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் மக்களாட்சியில் இருந்தும் நம் ஆட்சி யாளர்களுக்கு சமத்துவம் பற்றிய பார்வையும், உணர் வும் தெளிவும் இல்லை என்பதையே காட்டுகிறது.