articles

img

ஒரு வார்த்தை கூட இல்லையே..

“காலநிலை மாற்றம்” என்ற ஒரு வார்த்தை கூட மத்திய நிதியமைச்சர் ஆற்றிய பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 43 நகரங்களில் ‘காற்று மாசுபாட்டை தடுக்க’ 2,217 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்தாண்டு பட்ஜெட்டிலும் மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க ரூ.4,400 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பிற்கு பிறகு மாநில அரசுகளுடன் பேசி ஒரு வரைவு கட்டமைப்பு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பட்ஜெட் அமலாக்க அறிவிப்பில் (“Implementation of Budget Announcements 2020-2021”) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பது ஒரு கண் துடைப்பு மட்டுமே என்பது அம்பலமாகிறது.

அதேபோல, பழைய மற்றும் ‘அதிக மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்கள்’ மூடப்படும் என கடந்த பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்ட பின்னர் 1,260 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 15 அலகுகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இதுவும் காற்று மாசுபாட்டைத் தடுக்க போதுமான நடவடிக்கையாக இல்லை. சுற்றுச்சூழல் துறையை பொருத்தமட்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரமிக்க ஜி.பி.பந்த் ஹிமாலியன் இன்ஸ்டிட்யூட், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில், இந்திய வன மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய பிளைவுட் தொழில் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் இந்திய காட்டுயிர்கள் கல்வி நிறுவனம் ஆகிய ஐந்து அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு கடந்த ஆண்டு ரூ.340 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு ரூ.305 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காட்டுயிர்கள் நிறுவனத்திற்கு மட்டும் நிதி ஒதுக்கீடு 34 கோடியிலிருந்து 25.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தை பொருத்தவரை தேசிய அமலாக்கத்திற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.80 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.60 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடி ரூபாயில் பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த பேருந்துகள் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளாக இருப்பதையும் தனியாருக்கு வழங்காமல் அரசு கழகங்களுக்கே இதை ஒதுக்குவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு யாரிடம் மின்சாரத்தை பெறவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வகையில் ‘தனியார் மின்சார விநியோக நிறுவனங்கள் ஊக்குவிப்போம்’ என்று அறிவிக்கப்பட்டது மிகவும் தவறான நடவடிக்கையாகும். தமிழக விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்குள்ளான ‘சென்னை - சேலம் விரைவுச் சாலையின் பணிகளை இந்த ஆண்டே தொடங்குவோம்’ என்ற அறிவிப்பும் அதிர்ச்சியளிக்கிறது. பல முக்கியமான, அவசியமான திட்டங்களுக்கான நிதியை குறைத்து விட்டு அவசியமற்ற சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

காலநிலை மாற்றம் என்ற ஒரு வார்த்தை கூட மத்திய அமைச்சர் ஆற்றிய உரையில் இடம்பெறவில்லை. வரக்கூடிய பத்தாண்டுகள்தான் காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கும் தாக்கத்தை கட்டுப்படுத்த நமக்கிருக்கும் முக்கியமான காலம் என்று தேசிய காலநிலை ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில் காலநிலை மாற்றம் குறித்து போதுமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலையே தீர்மானிக்கும் பிரச்சனையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் உலகில் அதிகம் கார்பனை உமிழும் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் அரசு தனது நிதிநிலை அறிக்கையில் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

கட்டுரையாளர் : சுந்தர்ராஜன், “பூவுலகின் நண்பர்கள்”

;