பல நூற்றாண்டு காலமாக கோவில்கள் பெயரில் இருந்த அசையும் அசையா சொத்துக்களை கோவில் நிர்வாகிகளும், பெரும் பண்ணையார்களும், ஊரில் உள்ள பெருந்தனக் காரர்களும் தம் விருப்பம் போல் சூறையாடி வந்த நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்த மக்களி டமிருந்து எழுந்த தொடர் கோரிக்கைகளின் விளைவாக1925 ஆம் ஆண்டு நீதிக் கட்சியால் உருவாக்கப்பட்ட அறநிலையத்துறைக்கான சட்டங்கள் பல நிலைகளில் இறுதி செய்யப் பட்டு 1959 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
3.75 லட்சம் வகை சொத்துக்கள்
தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோவில்க ளுக்கும், ஆதினங்கள் மற்றும் மடங்களுக்கும் சொந்தமான சுமார் 3,75,600 சொத்து வகை இனங்களில் விவசாயத்திற்கான விளை நிலங்க ளும், குடியிருப்புக்கான அடிமனைகளும், கோ வில்களை சுற்றியுள்ள கடைகள், வீடுகள் உள் ளிட்ட கட்டடங்களும் அடங்கும். இந்த சொத்துக் களில் 1998 ஆம் ஆண்டு அப்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க் குடிமகன் அவர்க ளால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்க ளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான குடியிருப்பு களுக்காக பயன்படக்கூடிய அடிமனைகளுக் கான மாத வாடகை நிர்ணயிப்பதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் முதல் முதலாக அரசாணை 56/1998 மூலம் துவங்கப்பட்டது. அந்த அரசாணையை நடைமுறைப் படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி களில் பயனாளிகளிடம் இருந்து எதிர்ப்பும் மறுப்பும் வந்த நிலையில் ,அரசாணை 353/1999 ஆம் ஆண்டு தமிழக அரசால் வெளியிடப் பட்டது.இந்த அரசாணை குறித்து தமிழக சட்ட மன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது மறு பரிசீல னைக்காக கலைஞர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டில் ஏறிய அப்போதைய அதிமுக வின் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் எவ்வித பரிசீலனையும் இன்றி 2004 ஆம் ஆண்டு “நியாய வாடகை நிர்ணயம்” என்ற பெயரில் நடை முறைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பல நூறு மடங்கு வாடகை
தமிழகத்தின் மேற்குறிப்பிட்ட பெருநகரங்க ளில் அடிமனை வாடகைதாரர்கள் ஒவ்வொரு வருக்கும் அதிமுக அரசு நிர்ணயித்த பல நூறு மடங்கு வாடகை தொகையும்,1998 ஆம் ஆண்டு முதல் பல லட்சங்களில் நிலுவைத் தொகை களை கட்ட வேண்டும் என்ற அறிவிப்பும் மிகப் பெரும் இடியாக தலையில் இறங்கியது. அற நிலையத்துறை அதிகாரிகளிடமும் அப்போ தைய அமைச்சர்களிடமும் முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் வாடகை உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தர விட வேண்டும் என்று அடிமனை வாடகைதாரர் கள் மூலம் வழக்குகள் தொடுக்கப்பட்டன. வழக்குகள் தொடுக்கப்பட்டதோடு மட்டுமல்லா மல், உயர்த்தப்பட்ட வாடகையை மட்டுமே செலுத்த வேண்டும் என அறநிலையத்துறை முடிவெடுத்ததால், கோவில்களுக்கு செலுத்தி வந்த வழக்கமான வாடகைகள் கூட வசூலிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
கலைஞரின் உறுதி
2006 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைத்த கலைஞர் அவர்களிடம் பல மக்கள் போராட்டங் கள் வாயிலாக அமைப்பு ரீதியாக இப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்டபோது, தீர்வாக 2007 ஆம் ஆண்டு அரசாணை 456ம், 2010ஆம் ஆண்டு அரசாணை 298ம் கொண்டு வரப்பட்டன. இதன் பிறகு வாடகை நிர்ணயம் குறித்த எந்த அரசாணையும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. அரசாணை 298 இன் படி அடிமனை வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, வாடகை தொகை முதலானவை திருத்தி அமைக்கப்பட்டு “நியாய வாடகை” பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததன் விளைவாக பயனாளிக ளால் தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு நிலைமை சுமூகமாக மாறியது. ஆனாலும், பல தலைமுறை களாக கோவில் மனைகளில் குடியிருப்போ ருக்கு அறநிலையத்துறை சட்டம் பிரிவு 34 இன் படி பட்டா வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து 2011,2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களின் போது திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட சட்ட மன்ற தேர்தல் அறிக்கைகளில் அடிமனை வாட கைதாரர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற் கான உறுதிகளும் அளிக்கப்பட்டன.
மீண்டும் வாடகை உயர்வு
2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அதிமுக காலத்தில் அடி மனை வாடகைதாரர்களின் பிரச்சனை மீண்டும் பூதாகரமாக எழுந்தது. அரசாணை 298/10 வழிகாட்டுதலின் அடிப்படையில் மூன்றாண்டுக ளுக்கு ஒரு முறை 15 விழுக்காடு உயர்த்தி வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ப தற்கு பதிலாக, முந்தைய அதிமுக ஆட்சியில் 2004 இல் உயர்த்தப்பட்டது போல் எவ்வித பரி சீலனையும் இன்றி 2016 ஆம் ஆண்டு முதல் அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ஏ படி பல நூறு மடங்கு வாடகையும், பல லட்சக்கணக்கில் நிலுவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலை யத்துறை முன்னாள் ஆணையர் குமரகுரு பரன் சென்ற ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கை யின்படி சுமார் ரூபாய் 2530 கோடி அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மாவட்டங்கள் மூலமாக வசூ லிக்கப்பட வேண்டும் என மாதாந்திர இலக்கு அளிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னை 1 மற்றும் சென்னை 2 இணையாணை யர் மாவட்டங்களில் மட்டும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு வருகிறது.
மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடுகளை பழுது பார்க்க முடிவதில்லை. தேவைக்கேற்ப புதிய மின் இணைப்புகளை பெற முடிவதில்லை. ஒரு குடும்பத்தின் வளர்ச்சி நிலைமைக்கு ஏற்ப வீடுகளை மாற்றி அமைக்க முடிவதில்லை. பல தலைமுறைகளுக்கு முன்பு விவசாய உற்பத்தியில் இருந்து விடுபட்டு, வாழத் தகுதியற்ற நிலையில் இருந்த நிலங் களை சீர்படுத்தி மனித வாழ்வுக்கு தகுதியா னதாக மாற்றி, ஓலைக் குடிசை வேய்ந்து, அடி மனை வாடகையாளராக வாழ வந்த உழைப்பாளி மக்கள் காலம் காலமாக அப்படியே ஓலைக் குடிசைகளிலேயே வாழ வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. மட்டுமல்லாமல் குடி யிருப்புக்கான அடிமனைகளுக்கு நிர்ணயிக் கும் வாடகை தொகையை விட சிறுகடை வைத்தி ருப்போருக்கு வணிக பயன்பாடு என்ற பெயரில் பல மடங்கு வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக சுமார் 1600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்புக்கான அடிமனை பயன்பாட்டுக்கான இடத்தில் 200 சதுர அடி பரப்ப ளவு உள்ள ஒரு சிறு கடை கட்டி இருந்தால் மொத்தம் 1600 சதுர அடிக்கும் வணிகப் பயன்பாடு என்று குறிப்பிட்டு வாடகை நிர்ண யிப்பது எப்படி சரியானதாக இருக்கும்?
இந்து சமய அறநிலைய துறையை போன்றே, இஸ்லாமிய சிறுபான்மை மத நிறுவ னங்களின் சுமார் ஒரு லட்சம் சொத்துக்களை பாதுகாத்து, பராமரித்து வரும் வக்ஃபு வாரிய மும் அதன் பயனாளிகளாக உள்ள அடிமனை வாடகைதாரர்களிடமும், சிறு குறு வணிகர்களிட மும்,குத்தகை விவசாயிகளிடமும் வாடகை நிர்ணய சட்ட நடவடிக்கைகள் என்ற பெயரில் வணிக ரீதியாக இயங்கி பெரும் நிர்ப்பந்தங்க ளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்து வருகின்றது. நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலாவது அற நிலையத்துறை மானிய கோரிக்கையின் போது மக்களுக்கு மன அமைதி தரும் அறிவிப்பை, தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று பயனாளிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.