articles

img

செயற்கை நுண்ணறிவு காலத்திலும் மார்க்சியம் பொருத்தமானதா? - என்.குணசேகரன்

உணவுப் பொருட்களை இணையம் மூலம் மக்களுக்கு வழங்கும் ஸ்விக்கி ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் இதர தொழிற்சாலைகள் போன்று ஒரே இடத்தில் குவியலாக இருப்பவர்கள் அல்ல. இதனால் குறைந்த ஊதியத்தை கொடுத்து, அவர்களை எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என்ற நிலை உள்ளது.இந்த நிறுவனங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் வேலைநிறுத்தம் நடந்தது. ஸ்விக்கி ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து சட்ட உரிமைகளை உறுதி செய்வது, பணி பாதுகாப்பு, முறையான ஊதியம், 1 கிலோ மீட்டருக்கு ரூ.10, ஒரு ஆர்டருக்கு மினிமம் ரூ.30 வழங்குவது உள்ளிட்ட பல வாழ்வாதார கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தங்களது இலாப வேட்டைக்கு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி தங்களது மூலதனத்தை  பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக, வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புக்களையும் முதலாளித்துவம் பயன்படுத்துகிறது.ஆனால் அவர்களின் இந்த மூலதன பேராசைக்கு தாக்குதல் தொடுக்கும் வகையில் தொழிலாளர் போராட்டங்கள் வெடிக்கின்றன . மானுட வரலாறு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் இடையறாது நிகழ்ந்துள்ளன. தொழில் உற்பத்தி, சேவைத்  துறை உள்ளிட்ட அனைத்திலும் கட்டுப்பாடும்,ஆதிக்கமும் செலுத்தும் உடைமை வர்க்கங்களே புதிய கண்டுபிடிப்புகளின் பலன்களை அறுவடை செய்கின்றனர்.உழைக்கும் வர்க்கங்கள் மேலும் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.  இதே வகையில்தான், அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

‘‘கொந்தளிப்பான சகாப்தம்’’ 

கூகுள் மேப்ஸில் நெரிசல் இல்லாத வழியில் செல்வதற்கு வழி காட்டுவது முதல், வங்கி சேவைகள், ஆன்லைன் விற்பனை செயலிகள் என அன்றாடப் பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு நீக்கமற நிறைந்துள்ளது.மனித வேலைகளை சுலபமாக்குகிற பயன்பாடு கொண்டதாக இருந்தாலும்,தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட உற்பத்தி செலவுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைத்துக் கொள்வதற்கும் இது வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதற்கு இது இட்டுச் செல்கிறது. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் அடுத்த ஐந்தாண்டுகளில் தற்போதுள்ள  மொத்த பணியிடங்களில் நான்கில் ஒரு பகுதி வேலைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கிறது. இது ‘‘ஒரு கொந்தளிப்பான சகாப்தத்தை ஏற்படுத்தும்’’ என அந்த அறிக்கை எச்சரிக்கை மணி அடிக்கிறது. தேவையான தொழில்நுட்பத் திறமை கொண்டிருக்கிறவர்கள் தவிர மற்றவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து  உள்ளது.அத்துடன் பல தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிக்கும் நிலையும்  ஏற்படுகிறது.எடுத்துக்காட்டாக, இணைய தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கிற, சமூகப் பாதுகாப்பற்ற டெலிவரி வேலைகளில் உள்ள  ஸ்விக்கி தொழிலாளர்கள் சுமார் 16 மணி நேரம் கட்டாயமாக உழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வு 45 நாடுகளில் உள்ள 800 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டது. அந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் சுமார் 7 கோடி புதிய வேலைகள் உருவாகும் என்று குறிப்பிட்டனர். ஆனால் ஏற்கனவே இருந்த 8 கோடிக்கும் மேற்பட்ட வேலைகள் ஒழிக்கப்பட்டு விடும் என்பதையும் நிர்வாக வேலைகளில் உள்ள 2 கோடி 60 லட்சம் வேலைகள் காணாமல் போய்விடும் என்பதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை.  முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாச் வங்கி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை புகுத்துவதால் சுமார் 30 கோடி வேலை இழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

தவறான தகவல்கள் 

‘‘செயற்கை நுண்ணறிவின் தந்தை’’ என்று அழைக்கப்படுகிற ஜியோ ஃபிரே ஹின்டன் (Geoffrey Hinton) தனது 75-ஆவது வயதில் உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளார். அதற்கு அவர் குறிப்பிட்ட காரணம், மிக முக்கியமானது. கண்மூடித்தனமாக, செயற்கை நுண்ணறிவு புகுத்தப்படுவதால் “மக்களின் வாழ்வில் ஏற்படும் மோசமான தாக்கம் மிகவும் கவலை அளிப்பதாக” உள்ளது எனவும், இது பற்றிய உண்மையான தகவல்களை மறைத்து, தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார் இவை அனைத்தும் தனித்து தற்செயலாக நடப்பவை அல்ல; இன்றைய சமூகத்தில் நடக்கும் வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகளாக நடக்கிற நிகழ்வுகள். எவ்வித வரையறையும் இன்றி,இலாப வேட்டை என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, சகட்டு மேனிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முனைகின்ற  கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள்  ஒரு புறம்; அவற்றால் பாதிப்புக்கு உள்ளாகும் உழைக்கும் மக்கள் மறுபுறம்-என்கிற இந்த வர்க்க முரண்பாடு இனிவரும் காலத்திலும் தீவிரமடையும்.

தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் திறன் வளர்ச்சி அனைத்தும் அவசியமானதே. மனித வாழ்க்கையை மேம்படுத்த இது தவிர்க்க முடியாதது. ஆனால் இது ஒழுங்கமைக்கப்பட்டதாக, எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.இதற்கு உற்பத்தியின் மீது கட்டுப்பாடு உழைக்கும் வர்க்கத்திடம் இருக்க வேண்டும். உற்பத்தி மீதான  கட்டுப்பாடும், உற்பத்திச் சாதனங்கள் முதலாளித்துவ வர்க்கங்களிடம் உடைமையாக இருக்கிற நிலையும் நீடிக்கும் வரை புதிய தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கை மீது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். மார்க்சியம் 19-ஆம் நூற்றாண்டில் உருவாகி இருக்கலாம்; ஆனால், இன்றைய செயற்கை நுண்ணறிவு பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்ளவும் அது வழிகாட்டுகிறது. மார்க்ஸ்,உற்பத்தி சக்திகளின் இடையறாத வளர்ச்சியின் ஊடாக, முரண்பாடுகள் தீவிரமடைவதை விளக்குகின்றார்.உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும்,முதலாளி-தொழிலாளி எனும் உற்பத்தி உறவுகளுக்கும் முரண்பாடுகள் தீவிரமடையும் என்கிறார் அவர். இந்த முரண்பாடுகள் தீவிரமடையும் ஒரு கட்டத்தில் ‘‘சமூகப் புரட்சி சகாப்தம் எழுகிறது’’ என்கிறார் மார்க்ஸ். இரு பெரும் முகாமாக மோதிக் கொண்டிருக்கும் ‘‘வர்க்கங்கள், புரட்சி எனும் பெருவெடிப்பை நோக்கி முன்னேறும்’’ என்கிறார் மார்க்ஸ். (‘‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’’ -காரல் மார்க்ஸ்) இது மார்க்சின் அறிவியல் அடிப்படையிலான தீர்க்க தரிசனம்; இது இன்றைக்கும் பொருந்தும். இந்த புரட்சிகர மாற்றத்திற்கு தேவையானது, தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை. ஒவ்வொரு நாட்டிலும் அன்றாடம் நடக்கும் வர்க்கப் போராட்டம் பிரம்மாண்டமான வர்க்க ஒற்றுமைக்கு இட்டுச் செல்லும்.