வண்ண வண்ண பலூன்களை
வாங்கப் போகிறேன்!-அதை
எண்ணம் போல ஊதிஊதி
எங்கும் கட்டுவேன்!
ஊதும் போது வெடிக்காமல்
உறுதி கொள்ளுவேன்-அது
காது கிழிய வெடித்துவிட்டால்
கலக்கம் கொள்ளுவேன்!
பலூன் என்றால் வெடிப்பதுதான்
பயத்தைத் தள்ளுவேன்-அந்த
பலூன் பார்த்து மகிழ்ந்து
பரவசம் கொள்வேன்!
பிறந்த நாளில் பலூன்களை
பெரிதாய்க் கட்டுவேன்-வீடு
சிறக்கும் அழகில் அவைகளை
சேர்த்துக் கட்டுவேன்!
உயரப் பறக்கும் வாய்வடைத்த
உயர்ந்த பலூன்கள்-அது
அயர வைக்கும் அற்புதமாம்
அசுர பலூன்கள்!
மனிதர் கூட அமர்ந்துசெல்லும்
மாபெரும் பலூன்கள்-வாயு
திணிக்கும் ஹீலியம் ஹைட்ரஜன்
தீர்வால் பறக்கும் பலூன்கள்!
பறக்கும் பலூனைப் பார்த்திடவே
பற்றும் ஆசைகள்-அதில்
பிறக்கும் இன்பம் பெற்றிடவே
பெரிய ஆசைகள்!