articles

ஆயுதக் கலவரங்கள் பெண்கள் மீது நிகழ்த்தும் போர்கள் - அலிஷா தத்தா

மணிப்பூர் மாநிலத்தில் இன மோதல் களின் பகுதியாகக் குக்கி-ஜோமி பெண் கள் மீது பெரும்பான்மை சமூகமான மெய்டெய்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொடூர மான பாலியல் வன்முறை, எந்த ஒரு கலவரத்தின் போதும் பெண்ணுடல் பலியாக்கப் படுகிறது என்பதை மீண்டும் நாடு முழுவதும் முகத்தில றைந்து உணர்த்தியுள்ளது.  18 வயதான ரெய்னா ஹோக்கிப் தனது படுக்கைய ருகே அமர்ந்து தான் அன்று எடுத்துக் கொண்ட  மருந்துகளைச் சரிபார்க்கிறார். சில மல்ட்டி விட்டமின் மாத்திரைகள் இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் சிரப்புகள். வீடிழந்த குக்கி ஜோமி மக்களுக்காக முகாமாக மாற்றப்பட்டுள்ள பயிற்சி நிறுவனமொன் றில் தங்கியுள்ளார் ஹோக்கிப். சுற்றி நெல்வயல்க ளால் நிறைந்துள்ள அம்முகாமில் தற்போது முப்பது குக்கி-ஜோமி குடும்பத்தினர் வாழ்கிறார்கள்.

ஆறாத ரணங்கள்

ன் காயங்களுக்கு மருந்திடுவதிலும் மே 15 அன்று மெய்டெய்களால் பாலியல் வன்முறைக்கு ஆளான கொடுமையான நினைவுகளை மறக்க முயல்வதி லும் கழிகின்றன. பல இரவுகள் தன் தலைக்கு முன்  யாரோ துப்பாக்கியை நீட்டுவது போல் கனவு கண்டு அலறி விழிக்கிறார். உடலின் மேல் உள்ள காயங்கள் ஆறி வந்தாலும் உள்ளே ஆறாத ரணங்கள் நிறைந்தி ருப்பதாகக் கூறுகிறார்.  ஹோக்கிப்பைப் போலவே பல பெண்கள் மே 3 தொடங்கிய இனக் கலவரங்களினால் பாலியல் வன் முறைக்கு ஆளாகி இருக்கின்றனர். இம்பால் பள் ளத்தாக்கில் மெய்டெய்களும் மலைப்பகுதிகளில் குக்கி-ஜோமிக்களும் அதிகம் வாழ்கின்றனர். தௌபால் மாகாணத்தில் இரண்டு பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு நடத்திச் செல்லப் பட்ட காணொலி ஜூலை 19 அன்று வைரலானது முதல் அது போல பல கொடுமையான சம்பவங் கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.  மே 4 அன்று நடந்த அச்சம்பவம் காணொலி யின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்ததும் நாடெங் கும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அதுவரை மணிப்பூர் கலவரம் குறித்து மௌனம் காத்த பிரதமரை வாய்திறக்க வைத்தது.  உச்சநீதிமன்ற நீதிபதியைத் தாமாகவே இவ் விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசையும் மாநில அரசையும் செயல்படச் சொல்லிக் கெடு விதிக்கச் செய்தது. அல்லாது போனால் நீதிமன்றமே நடவ டிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்க வைத்தது. மே மாதம் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் மணிப்பூர் சென்று வந்த பிறகும் அம்மாநிலம் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. 

“அவர்கள் என்னை வன்புணர்வு  செய்வதாக மிரட்டினார்கள்”

குக்கி-ஜோமிக்கள், நாகாக்கள், மெய்டெய்கள், நேபாளிகள் என்று பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் பலகாலமாக ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்த இம்பாலின் புதிய செக்கான் பகுதியில் பிறந்து வளர்ந்த ஹோக்கிப் தான் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பதற் காக மட்டுமே, தன் இடத்திலேயே கொடூரமாய்த் தாக்கப்படுவோம் என்று கனவிலும் நினைக்க வில்லை என்கிறார்.  மிகவும் சன்னமான குரலில் பேசும் ஹோக்கிப், கலவரம் வெடித்த போது பங்கல் பகுதியில் ஒரு குக்கி தோழியின் வீட்டில் இருந்ததாக நினைவு கூர்கி றார். (பங்கல் என்பது இஸ்லாமியர்களைப் பொது வாக மெய்டெய்கள் குறிப்பிடும் சொல்). “என் குடும்பம் இம்பாலை விட்டு வெளியேறிய போது நான் அவர்களுடன் செல்ல முடியவில்லை.” அதனால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எங்கள் வீட்டை விட்டு ஒரு மணிநேரம் பயணத் தொலைவில் இருந்த என்  தோழியின் வீட்டில் தங்கி இருந்தேன். பங்கல்க ளுக்கு வன்முறையில் பங்கில்லாத காரணத்தால் நான் பாதுகாப்பாக இருப்பதாக நம்பினேன்.  அந்தப் பாதுகாப்பான வீட்டின் வெளியே நடக்கும் அக்கிரமங்கள் குறித்த சேதிகளை அவரது தோழியின் பங்கல் கணவர் கொண்டு வந்தபடி இருந்தார். ஆனாலும் ஹோக்கிப் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் நம்பிக்கை வைத்திருந்தார். அவர்கள் ஏதாவது செய்து வன்முறையைக் கட்டுக் குள் கொண்டு வருவார்கள் என்று எண்ணினார். ஆனால் நிலைமை மேலும் மோசமடைந்து கொண்டே சென்ற போது என் நண்பர்கள், அவர்க ளின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்ளத் தொ டங்கினர். அப்போது தான் நான் என் குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன். “நண்பர் களை இக்கட்டில் மாட்ட வைக்க யார் தான் விரும்பு வார்கள்?” என்கிறார் ஹோக்கிப்.

தன் பயணத்துக்குத் தேவையான பணத்தை வங்கியிலிருந்து எடுக்கச் சென்றார் ஹோக்கிப். புதிய செக்கான் நகரத்திலிருந்த ஓர் ஏடிஎம்முக்குச் சென்ற போது மெய்டெய் ஆண்கள் சிலர் வெண்ணிற பொலெரோ மற்றும் ஊதா நிற ஸ்விஃப்ட் கார்களில் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.  “எங்கள் ஆதார் அட்டைகளைக் காண்பிக்கும் படி கேட்டார்கள். பிறகு எனக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்துக்காக எனது தோழியை அடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவளை விட்டு விட்டு என்னைப் பலவந்தமாக பொலெரோ வில் தள்ளி, 24 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த வாங்க்கெய் அயங்பெலி எனும் மெய்டெய் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.”   காருக்குள் என்னைத் தொடர்ந்து தாக்கியபடி இருந்தனர். “என்னைக் கொன்று விடப் போவதாக மிரட்டினர். குக்கிகள் அத்தனை பேரையும் பூண்டோடு அழித்து விடப்போவதாகக் கூறினர்” என்கிறார் ஹோக்கிப். 

வன்முறைக்கு எதிரான பெண்கள் இயக்கத்தின் வன்முறைத் தாக்குதல்

மேலும் பலர், ஆண்களும் பெண்களும், “ஃபானெக்” (மெய்டெய்களின் பாரம்பரிய ஆடை)  உடையணிந்து இவரைத் தாக்கியவர்களுடன் இணைந்தனர். அந்தப் பெண்கள் மெய்ரா பெய்பி குழுவைச் சேர்ந்தவர்கள். மெய்ரா பெய்பி என்பது 70களில் தளர்வாக அமைக்கப்பட்டதொரு மக்கள் இயக்கம். குடி, போதைப் பழக்கம், மனித உரிமை மீறல், பெண்கள் மீதான வன்முறை ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வரும் இவ்வியக்கத்தினர் வன்முறையற்ற வழிகளைப் பின்பற்றுவதற்காக உலகப் புகழ் பெற்றவர்கள்.  “முதலில் மெய்ரா பெய்பிக்கள் என்னை அடிக்கத் தொடங்கினர். அவர்களைப் போல் நானும் ஒரு பெண் தானே என்று நான் அரற்றியதும் மேலும் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். பின்பு அவர்கள் மேலும் சில ஆண்களை அழைத்தனர். கறுப்பு டிஷர்ட் அணிந்த சிலர் வந்தார்கள். அவர்கள் அரம்பாய் தெங்கோல் எனும் மெய்டெய் இந்துக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

மெய்ரா பெய்பிக்கள் அவ்வாண்களை நோக்கி என்னைக் கொல்லும்படி பணித்தனர்” என்கிறார் ஹோக்கிப்.  ஹோக்கிப் தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரிக்கும் போது கைகளைத் தேய்த்து மடக்கிக் கொள்கிறார். அந்தக் குழுஅவரது கண்களையும் கைகளையும் கட்டி இம்பாலின் வடக்குப் பகுதியில் இருக்கும் லாங்கோல் மலைகளுக்கு இழுத்துச் சென்றது.  “அவர்கள் சொல்படி கேட்கா விட்டால் கொன்றுவிடப் போவதாக மிரட்டியபடி இருந்தனர். என்னை வன்புணர்வு செய்யப்போவ தாகவும் மிரட்டிக் கொண்டே இருந்தனர். கதறியபடி என்னை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். துப்பாக்கி யின் பின்பகுதியைக் கொண்டு மண்டையில் ஓங்கி அடித்ததில் என் காது கண்களிலிருந்து இரத்தம் வழியத்தொடங்கியது. அப்படியும் நான் வழிக்கு வராததால் என்னைப் பலாத்காரம் செய்யத் தொடங்கினர்.  கொஞ்ச நேரத்தில் ஹோக்கிப் நினைவை இழந்தார். அவர் விழித்த போது அவரது காற் சட்டை அவிழ்ந்திருப்பதை உணர்ந்தார். “நான் கண் விழிக்கும் போது அதிகாலையாகி இருந்தது. நான் சிறு நீர் கழிக்க அனுமதி வேண்டிய போது, அது தான் உனது கடைசி ஆசையென்றால் போ” என்று கொக்கரித்தனர். 

மலையிலிருந்து கீழே உருண்டேன்

கண்ணையும் கைகளையும் கட்டி இருந்த துணியை அவிழ்த்து விட்டு மலையிலிருந்து கீழே உருண்டேன். மண்ணும் புழுதியும் இரத்தமும் படிந்த என்னைக் காய்கறி விற்கும் பங்கல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்டார். வெண்ணிற பொலெரோ என்னைப் பின்தொடர்வதை அறிந்த அவர் என்னைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். பின்பு அந்தக் கும்பல் போய் விட்டது.” என்கிறார் ஹோக்கிப். ஆனால் ஹோக்கிப் தன்னைப் புதிய செக்கான் பகுதியில் கொண்டு விடும்படி அந்த ஆட்டோ ஓட்டு நரை வேண்டிக் கொண்டார். “மெய்டெய் ஆண்கள் இத்தனை கொடூரங்களை எனக்குச் செய்த பிறகு எப்படி நான் மெய்டெய் காவலர்களை நம்புவேன்?”. டி.டி. ஹோக்கிப் எனும் சிவ சேனையைச் சேர்ந்த  அரசியல்வாதி ரைனா ஹோக்கிப்புக்கு அடைக்கலம் கொடுத்து அவரைக் கவனித்துக் கொண்டார். இம்பால் நகரத்திலிருந்து 136 கிலோ மீட்டர் தொலை வில் இருந்த கொஹிமா நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு குடும்பத்துடன் சேர்க்கப் பட்டார் ரைனா ஹோக்கிப்.    ரைனா ஒரு வழியாக வீட்டுக்கு வந்து விட்டார் என்பது பெரிய ஆறுதல் தானென்றாலும் அவரது குடும்பம் இன்னும் பெருங்கவலை கொள்கிறது. ரைனாவின் தங்கை டோனா, “அக்கா அடிக்கடி இரவில் கண்விழித்து அலறுகிறாள். மோசமான கனவுகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்” என்கிறார்.  ஹோக்கிப் இம்பாலை விட்டுத் தொலைவாக ஒரு நிவாரண முகாமில் இருக்கிறார். ஆனால் இன்னும் பல குக்கி ஜோமி பெண்கள் தங்கள் குடும்பத்தைப் போய்ச் சேர்ந்தபாடில்லை. 

வாக்கிடாக்கியில் வந்த  பேரனின் கதறல்

கலவரத்தின் மையப்பகுதியான சுரச்சந்த்பூரில் 70 வயதான ரோசி கிப்ஜென், குடும்பத்தின் வாக்கி டாக்கியை காதை விட்டு அகற்றாமல் இருக்கிறார். வழக்கமாக இக்கருவிகளில் பெரிதும் ஆர்வம் காட்டாதவர், மே 3 முதல் அரசு இணையத்துக்குத் தடை விதித்த பிறகு, தொலைபேசித் தொடர்பும் மோசமாக இருக்கும் நிலையில் வாக்கி டாக்கிகள் தான் ஒரே தொடர்புக் கருவியாகிப் போனது.  கிப்ஜெனின் மகள் மேரி, ஜேக்கப் சிங் எனும் ஒரு மெய்டெய் ஆணைத் திருமணம் செய்திருக்கிறார்.  மே 30 அன்று பல நாட்களுக்குப் பிறகு வாக்கி டாக்கி ஒலித்தது. சிங்கின் குரல் கேட்டு ஆசுவாச மடைந்த கிப்ஜெனின் குடும்பத்தினர் அவர் குரலில் பீதி இருந்ததைக் கேட்டுக் கலக்கமடைந்தனர். “கிழக்கு இம்பாலில் இருந்து தப்பி மேரியும் அவரும் தங்கி இருந்த கும்பி முகாமில் மேரியின் அடையா ளம் குறித்துச் சிலர் சந்தேகப்பட்டு விசாரிப்பதாக அவர் தெரிவித்தார்” என்கிறார் கிப்ஜென்.  “அப்பா! அப்பா! கமாண்டோக்கள் இங்கு வந்து விட்டார்கள். உன்னைத் தேடுகிறார்கள்.” என்று பேரன் கதறுவது தான் வாக்கி டாக்கியில் கிப்ஜென் கடைசியாகக் கேட்டது. 

வீடு புகுந்து இழுத்துச் சென்ற போலீஸ் கமாண்டோவின் வெறிச்செயல்

அடுத்த நாள் காலை, முந்தைய நாள் இரவு நடந்த சம்பவங்களைச் சிங் குடும்பத்துக்கு விவ ரித்தார். அன்றிரவு சுமார் 9.30 மணிக்கு மணிப்பூர் காவல்துறைக் கமாண்டோ, சிங்கின் வீட்டுக்குள் நுழைந்து அவரது மனைவி எங்கே என்று விசாரித்தி ருக்கிறார். பயந்து போய் சிங்கும் தனது மனைவி யைக் காட்டி இருக்கிறார். பலவந்தமாக அவரது மனைவி மேரியை இழுத்துச் சென்ற கமாண்டோ ஆளரவமற்ற பகுதிக்குச் சென்றிருக்கிறார். பின்பு மேரி சந்தேல் மாகாணத்தில் சுக்னு லாங்கிங்சின் எனும் பகுதிகளை இணைக்கும் சாலையில், உடலில் துணிகள் ஏதுமின்றி சடலமாகக் கிடந்தி ருக்கிறார். அவரது உடல் ஜவகர்லால் நேரு மருத்து வக் கல்வி நிறுவனத்தின் பிணவறையில் வைக்கப் பட்டிருப்பதாகச் சிங் தெரிவித்ததாகக் கிப்கென் தழுதழுத்த குரலில் கூறுகிறார்.      முதல் தகவல் அறிக்கையில் மேரி கொல்லப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அவர், அந்த மணிப்பூர் போலீஸ் கமாண்டோவால் கொடூர மாக வன்புணர்வும் செய்யப்பட்டிருக்கிறார் என்று கிப்ஜென் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களால் மேலும் சிங்கைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கிப்ஜென் வினவுகிறார். “என் மகள் இறந்திருக்க மாட்டாள் அல்லவா? எப்படி ஒரு பெண்ணிடம் யாராலும் அப்படிக் கொடூரமாக நடந்து கொள்ள முடியும்?” தங்கள் மகள்கள் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக அறிந்த ஏனைய தாய்மாரும் நம்ப முடியாத ஒரு மனநிலையில் தான் இருக்கின்றனர். 

ஒரு பெண்ணே சக பெண்ணுக்கு இத்தகைய கொடுமையை... எப்படிச் செய்ய முடியும்?

மே 5 அன்று வெடித்த கலவரத்தில் தன் மகளை இழந்த நான்சி சொங்லோயும் கொடுமைகளை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார். நான்சியின் மகள் ரோசி சொங்லோய் இம்பாலில் கார் கழுவும் இடமொன்றில் நடந்த கலவரத்தில் ஆண்களும் பெண்களும் கொண்டதொரு வன்முறைக் கும்ப லால் தாக்கிக் கொல்லப்பட்ட இரண்டு குக்கி-ஜோமி  பெண்களில் ஒருவராவார். தாக்குதலின் போது உடனிருந்த ரோசியின் சகபணியாளர் ஒருவர் தான், குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மெய்டெய் பெண்கள் தான் இருவரையும் தாக்கிப் பின்பு ஆண்களிடம் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார். அந்தக் கும்பலில் இருந்த ஆண்கள் இரு பெண்க ளையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய பின்பு மே 5 அன்று மாலை கொன்று விட்டனர்.  நான்சி சொங்லோயைப் பெரிதும் தொந்தரவுக்கு ஆளாக்குவது அந்த மெய்டெய் பெண்களின் செய்கை தான். “எப்படிச் சக பெண்களைத் துன்புறுத்தி வெறி கொண்ட ஆண்களிடம் ஒப்படைக்க முடியும்?” என்கிறார் நம்ப முடியாமல். குக்கி-ஜோமியோ மெய்டெய்யோ ஒரு பெண் எப்படி இன்னொரு பெண்ணுக்கு இதைச் செய்ய முடியும்?” மெய்ரா பெய்பிகளுக்கு எதிராக மலை போல்  குவிந்து வரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிளிக்கும்  விதமாக, மெய்ரா பெய்பி இயக்கத்தைத் தோற்று வித்தவர்களில் ஒருவரான 72 வயதான இமா லொரம்பாம் காம்பி, “இந்தக் கலவரத்தில் மெய்ரா பெய்பிக்களைப் பயன்படுத்தும் ஆண்களின் செயல் மிகுந்த வெட்கக்கேடானது.” 2004இல் 32 வயதான மனோரமா தங்ஜம் அஸ்ஸாம் காவல் துறையால் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப் பட்ட போது நிர்வாணமாகப் போராட்டம் நடத்திய 12 பேரில் ஒருவராவார் காம்பி. இன்று நடக்கும் சம்பவங்களை மறுப்பதும் கண்டிப்பதுமாகக் குழப்பமான மனநிலையில் உள்ளார். 

முதல்வரின் தொகுதியில்...

இந்நிலையில் மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் குக்கி-ஜோமி பெண்கள் பீதியும் கலக்கமுமாகவே இருக் கின்றனர். 34 வயது நான்சி டௌத்தாங் வீடிழந்து தனது குடும்பத்துடன் கான்போப்பி முகாமில் தங்கி யுள்ளார். இம்பாலில் இருந்து வெகு சொற்பமான பொருட்களையே முகாமுக்கு எடுத்து வர முடிந்தது என்றும், தானும் தன் கணவரும் தங்கள் வாழ்வாதா ரத்தையே இழந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். “எப்படியோ, இம்பாலில் இருந்து தப்பித்து இந்த  நிவாரண முகாமுக்கு வந்து சேர்ந்து விட்டேன். இல்லாவிட்டால் வன்புணர்வும் கொலையும் செய் யப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தியாக இருந்திருப் பேன்.” என்கிறார் டௌதாங். முதலமைச்சர் தொகுதி யில் இருந்த தனது வீட்டை விட்டுஓடி வர வேண்டிய கட்டாயத்தில் இருந்ததை அவரால்இன்னும் நம்ப முடியவில்லை. 

முகாம்களில் பீதி

தன் துயரத்தை டௌதாங் வாய் விட்டுச் சொல்லி விட்டார். ஆனால் மே 28 முதல் நிவாரண முகாமில் தங்கி இருக்கும் கிரேஸ் நிங்கோம்பாம் எனும் பெண் பேசவே முடியாத அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்திருக்கிறார். “இளம் வயதினரும் முதியவர்க ளுமாய்க் கொடூரமாய்க் கொல்லப்பட்ட அந்தப் பெண்களை நினைக்கும் போதெல்லாம் எனக்கு உடல் நடுங்குகிறது” என்கிறார்.  “அந்தக் காணொலி வைரலான பின்பு தான் பல பாலியல் வன்முறைச் சம்பவங்கள் வெளியே வரத் தொடங்கி இருக்கின்றன”. என்கிறார் ஒரு மூத்த குக்கி தலைவர். கலவரக்காரர்கள் பாலியல் வன் முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை உலகம் அறிந்து கொள்ளும் நேரத்தில் இன்னும் ஏராளமான சம்பவங்கள் புகாரளிக்கப்படாமலேயே மறைந்து கொண்டிருக்கின்றன என்கிறார்.  வைரலான காணொலியில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் அச்சம்பவங்களால் தொடரும் மன உளைச்சல் குறித்துப் பகிர்கிறார். “அந்த வன்முறையால் ஏற்கெனவே கடுமையாக மனம் பாதிக்கப்பட்ட என் மனைவி இப்போது ஏராள மானோர் அதனைக் காணொலியில் கண்டு விட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் பெரிதும் அவதி யுறுகிறார்.” என்று சொல்லும் அவர் கார்கில் போரில் போரிட்ட இராணுவ வீரராவார். “கெட்ட கனவுகள் என் மனைவிக்கு வாடிக்கையாகி விட்டன. அந்நினைவுகளை அழிக்கும் முயற்சியாக அவ்வப் போது தனது தோலைக் கிழித்துக் கொள்ள முயல்கிறார்.” 

நன்றி: தி இந்து (ஜூலை 29),  தமிழில்: ஜெ.தீபலட்சுமி