அபஸ்வரமே ஒலிக்குது!
“வசுவைத குடும்பம்” அதாவது ”உலகமே
ஓர் குடும்பம்” என்று விஸ்வகுரு மோடி
ஜி20 மாநாட்டை யொட்டி முழங்குகிறார்.
இதில் நமக்கென்ன ஆட்சேபனை?
எதுவும் இல்லை.
வசுவைத குடும்பம் எனில்
கருப்பனும் இருக்கலாம், சிவப்பனும் இருக்கலாம், வெள்ளையனும் இருக்கலாம், மாநிறத்தவனும் இருக்கலாம்,
சரிதானே ! விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
மாட்டுக்கறி சாப்பிடுகிறவனும் இருக்கலாம்,
பன்றிக்கறி சாப்பிடுகிறவனும் இருக்கலாம்,
தயிர்சாதம் சாப்பிடுகிறவனும் இருக்கலாம் ,
அப்படித்தானே விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
இந்து, முஸ்லீம், கிறுத்துவன், பார்சி
உலகிலுள்ள எல்லா மதங்களும்
சரிநிகர் சமானம்.
வெறுப்பைக் கக்கக்கூடாது.
இணைந்து வாழ வேண்டும்
இல்லையா விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
கடவுளை நம்புகிறவனும் இருக்கலாம்,
கடவுள் கற்பனை என்போனும் இருக்கலாம்,
நியாயந்தானே விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
அறிவைச் சுடரச் செய்ய வேண்டும்
எல்லோருக்கும்தானே விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
விஸ்வகர்மா யோஜனா என
குலத்தொழில் திணிக்கலாமா
சொல்லுங்க விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
நிலமும் தொழிலும்
செல்வமும் செழிப்பும்
இன்பமும் ஆரோக்கியமும்
எல்லோருக்கும் பொதுதானே
விளக்குங்க விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
அம்பானிக்கு இருக்கிற உரிமை
அந்தோணிக்கும் அப்துல்லாவுக்கும்
அம்மாவாசைக்கும் மஹிஷாசனுக்கும்
உண்டுதானே! விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
இஸ்லாமியர் வீடுகளை இடிக்க
புல்டோசரை அனுப்பலாமா?
வாய் திறங்க விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
மணிப்பூர் பழங்குடி பெண்களையும்
ஹரியான நுஹ் பகுதி சிறுபான்மையோரையும்
அன்பால் அரவணைக்க என்ன தடை ?
சொல்லுங்க விஸ்வகுரு!
வசுவைத குடும்பம் எனில்
உச்சபதவியில் இருந்தாலும்
தலித்துகளையும் பழகுடியினரையும்
விதவைப் பெண்களையும்
வர்னாஸ்ரமப்படி மநுதர்மப் படி
மங்கள காரியங்களிலும்
சுபகாரியங்களிலும்
தள்ளிவைக்கலாமா விஸ்வகுரு!
ஆங்காங்கே தூவுகிற
ஜிகினா வார்த்தைகளாலோ
சர்க்கரை பேச்சுகளாலோ
மநு அநீதியை மறைக்க முடியுமா ?
சனாதன விஸ்வகுரு !
நீங்கள் அடிக்கிற தமுக்கில்
அபஸ்வரமே ஒலிக்கிறது விஸ்வகுரு !
சுபொஅ.