articles

img

மாரடைப்பை தடுக்க உதவும் மத்திய தரைக்கடல் சாப்பாட்டுத் தட்டு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மத்தியதரைக் கடல் சாப்பாடு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் நிகழக்கூடிய அகால மரணங்களைத் தடுக்க உதவுகிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், கடல் உணவு, பருப்புவகைகள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவுத்தட்டே மத்தியதரைக் கடல் சாப்பாட்டுத்தட்டு(Mediterranean plate) என்று அழைக்கப்படுகிறது. இந்த உணவுவகை மனிதன் நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது என்று முன்பே அறியப்பட்டுள்ளது. புதிய ஆய்வு என்றாலும் இந்த வகை உணவுகள் மாரடைப்பைத் தடுக்க உதவும் என்று இப்போது முதல்முதலாக அறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உடற்பருமன், டைப்2 சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், உயர்ந்த அளவு கொழுப்பு, உடற்செயல்பாடு இல்லாமல் இருப்பவர்கள், தீங்கு தரும் அளவு புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கம் உடைய மில்லியன் கணக்கானவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு உதவும் எண்று நம்பப்படுகிறது.

இதயநலம் காக்க பரிந்துரைக்கப்படும் உணவுமுறைகள்

இன்று இதயநலம் காக்க உலகம் முழுவதும் பல முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்றாலும் அவை விரிவான ஆய்வுமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. இத்தகைய முறையில் உலகளவில் நடத்தப்பட்ட இந்த முதல் ஆய்வில் பல உலக நாடுகளில் இருந்து பங்கேற்றவர்களிடம் 40 வகையான வெவ்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஏழு வெவ்வேறு வகையான உணவுமுறைகள் ஆராயப்பட்டன. பிஎம்ஜே (BMJ Journal) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையின்படி உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இதர மருந்து மாத்திரை போன்ற மருத்துவக் குறுக்கீடுகள் அற்ற நிலையில் மத்திய தரைக்கடல் மற்றும் குறைந்த அளவு கொழுப்புள்ள உணவுகளே உடல்நலத்திற்கு மிகச்சிறந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு

மத்தியதரைக் கடல் சாப்பாடு இரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களிடம் அதற்கான சாத்தியக்கூற்றைக் குறைக்கிறது என்று அறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, சீனா, ஸ்பெயின், கொலம்பியா மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்து 35,548 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். இவர்களிடம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் உணவுமுறைகள் ஆராயப்பட்டன.

ஏழு வகை உணவுகள்
மத்தியதரைக்கடல், கொழுப்பு குறைவாக உள்ள, மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ள, ஓரளவிற்கு கொழுப்பு உள்ள, குறைந்த அளவு கொழுப்பு மற்றும் சோடியம் உள்ள, குறைந்த அளவு கொழுப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ள ஆர்னிஷ் (Ornish) என்ற வகை உணவு மற்றும் தாவரங்கள் சார்ந்த பிரிட்டிகின்  (Pritikin) என்ற உணவு ஆகிய ஏழு வகை உணவுகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் மத்தியதரைக் கடல் உணவு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை சிறந்தமுறையில் குறைக்கிறது. கொழுப்பு குறைவாக இருக்கும் உணவுகளும் பயனுடையவை என்று அறியப்பட்டுள்ளது. மற்ற ஐந்துவகை உணவுகள் மாரடைப்பு ஏற்படுவதைக் குறைப்பதில் உதவவில்லை. மருத்துவ சிகிச்சை மற்றும் புகை பிடிப்பதைக் குறைத்தல் போன்றவை நன்மை பயக்கின்றன என்றாலும் மத்தியதரைக்கடல் உணவுமுறை அகால மரணங்களை தடுக்க இயற்கையாகவே உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு வரவேற்கத்தக்கது. மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான உணவுமுறை உடல்நலத்திற்கு உதவக்கூடியது.

இதில் மத்தியதரைக்கடல் உணவுமுறை மிகச்சிறந்தது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் இதயநல அறக்கட்டளையின் (British Heart Foundation) மூத்த உணவியலாளர் டிரேசி பார்க்கர் (Tracy Parker) கூறியுள்ளார். ஆரோக்கியமான உணவுமுறை என்பது பின்பற்ற சுலபமானது. அதிக அளவு பீன்ஸ் போன்ற காய்கள், பழங்கள், துவரை போன்ற பருப்புவகைகள், தவிடுடன் கூடிய முழு தானியங்கள் (whole grains), கானாங்கெளுத்தி (mackerel) போன்ற மீன் வகைகள், கொட்டைகள், வித்துகள், குறைவான கொழுப்பு உள்ள பால்பொருட்கள் மற்றும் ஆலிவ் போன்ற நிறைவுறாத கொழுப்பு உள்ள எண்ணெய்கள் உடல் நலத்திற்கு நன்மை பயப்பவை. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உப்பு, இனிப்புகளை குறைவாக உண்பதும் பல காரணங்களால் உருவாகும் மாரடைப்பால் ஏற்படும் அகால மரணங்களைக் குறைக்கும் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. மத்தியதரைக்கடல் உணவுமுறை பற்றிய இந்த புதிய ஆய்வுகள் உலகம் முழுவதும் பல நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படும் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஆரோக்கியத்துடன் வாழ வழிகாட்டும் என்று நம்பப்படுகிறது.